ஏடுகள், இதழ்கள் ராசிபலன் சோதிடம் இவற்றை வெளியிட்டு வருகின்றன.
நாய் விற்றகாசு குரைக்காது என்பது இவர்களின் திடமான நம்பிக்கை.
கல்கியில் ஹரிகேசநல்லூர் வெங்கட்ராமன் ஜோதிடம் மற்றும் கேள்விகளுக்குப் பதில் சொல்லிக் கொண்டி ருக்கிறார். அதில் ஒரு கேள்வி - பதில்:
கேள்வி: என் மகள் ஜாதகத்தைப் பார்த்த சிலர் அவளுக்கு, கலப்புத் திரு மணம்தான் நடக்கும் என்கின்றனர். அது உண்மையா? எப்பொழுது திருமணம் நடக்கும்?
ஜோதிடர் பதில்: தங்கள் மகளுக்கு கடக லக்னம், பூராடம் நட்சத்திரம், தனுசு ராசி,
6 இல் சந்திரன் செவ் வாய் சேர்க்கை, பெற்றோர் பார்த்து வைக்கும் திருமணம் நடக்கும். சந்திரனும், கேதுவும் ஒன்றாகச் சேர்ந்தால் பிற இனத்தாரை மணந்து கொள்ளும் வாய்ப்பு ஏற்படும். தங்கள் மகள் ஜாதகத்தில் அது போன்ற அமைப்பு இல்லை. 2011 மே 8 ஆம் தேதி குருப்பெயர்ச்சி. அதன் பிறகு திருமணம் நடக்கும்.
- (கல்கி, 5.12. 2010 பக்கம் 66)
சம்பந்தப்பட்ட பெண்ணுக்குத் திருமணம் எப்பொழுது நடக்கும்? கலப்புத் திருமணம் நடக்குமா, நடக்காதா என்பதல்ல நாம் எடுத்துக் கொள்ளப் போகும் பிரச்சினை.
ஜோதிட சாஸ்திரப்படி பிற இனத்தாரை ஒரு பெண் திருமணம் செய்துகொள்ள ஜோதிடத்தில், ஜாதகத்தில் இடம் உண்டு என்பதுதான் கவனிக்கத்தக்கதாகும். இங்குதான் ஒரு முக்கியமான விடயம் இடிக்கிறது.
ஜோதிடத்திற்கும், இந்து மத சாஸ்திரங்களுக்கும் இடையே உள்ள இந்த முரண்பாடு கவனிக்கத்தக்கதாகும்.
ஹிந்து மதத்தில் அய்ந்தாவது வேதம் என்று போற்றப்படுவது கீதையாகும். அந்தக் கீதை என்பது குலக்கலப்போ, வருணக் கலப்போ, ஜாதிக் கலப்போ கூடவே கூடாது என்று அடித்துக் கூறுகிறது.
போர்க்களத்தில் தனக்கு முன் இருக்கும் தனது உறவினர்களான திருதராஷ்டிரனின் மக்களையும், அவனது ஆசிரியர்களையும் கொல்லுவது தகாது என்பது அர்ஜு னனின் வாதம்.
அப்படிக்கொன்றால் குலங்கள் அழியும். குலங்கள் அழிந்தால் தர்மங்கள் அழியும். வருணக் கலப்புகள் ஏற்படும் என்று புலம்புகிறான்.
அதற்கு விடையளிப்ப தாகக்கருதிக் கொண்டு உன் உறவினர்களின் உடல்களைத்தான் நீ அழிக்கப் போகிறாயே தவிர, அவர்களின் ஆத்மாவை அழிக்க முடியாது - ஆத்மாவுக்கு அழிவு என்பதே கிடையாது என்று சொல்கிறானே தவிர வருணக்கலப்பை கிருஷ்ணன் நியாயப்படுத்த வில்லை.
சதுர் வர்ணம் மயா சிருஷ் டம் ஆயிற்றே! தெய்வத்தின் குரலில் மறைந்த காஞ்சி சங்கராச்சாரியார் சந்திரசேகரேந்திர சரஸ்வதி என்ன கூறுகிறார்?
நான்கு ஜாதிகளுக்கும், சாஸ்திரங்களில் வெவ்வேறு விதமான கர்மாக்களையும் ஆசாரங்களையும் விதித்திருக்கிறது. ஒருவர் சமைத்த உணவை இன்னொருவர் சாப்பிடக்கூடாது. ஒருத்தரோடு ஒருத்தர் கல்யாணம் பண்ணிக் கொள்ளக் கூடாது என்று சாஸ்திரங்களை எடுத்துக் காட்டிக் கூறியுள்ளாரே.
அப்படியிருக்க, ஜோதிடப்படி சந்திரனும், கேதுவும் ஒன்றாகச் சேர்ந்தால் பிற இனத்தாரை மணக்கலாம் என்று கல்கி ஜோதிடர் கூறுவது எப்படி? எது குற்றம்? ஜோதிடமா? சாஸ்திரமா? பதில் தேவை.
7.12. 2010 விடுதலை ஒற்றைப்பத்தி - 3
நூல் : ஒற்றைப்பத்தி - 3
ஆசிரியர் : கவிஞர் கலி.பூங்குன்றன்
நூல் : ஒற்றைப்பத்தி - 3
ஆசிரியர் : கவிஞர் கலி.பூங்குன்றன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக