இந்தியக் கிரிக்கெட்டின் நட்சத்திரம் என்று விளம்பரப்படுத்தப்படுவர் சச்சின் டெண்டுல்கர். காயம் காரணமாக அவர் விளையாடவில்லை; ஆனாலும் குழுவில் மட்டும் இடம் பெற்றுள்ளார். ஆடினாலும், ஆடாவிட்டாலும் பணம் உண்டு அல்லவா!
பெங்களூரில் இந்திய அணிக்கும், ஆஸ்திரேலியா அணிக்கும் கிரிக்கெட் விளையாட்டு நடந்து கொண்டு இருக்கும் இந்தக்கால கட்டத்தில் நேற்று ஒயிட் ஃபில்டு சென்று புட்டபர்த்தி சாயிபாபாவைச் சந்தித்து ஆசி பெற்றுள்ளார். அவரும் வஞ்சனை இல்லாமல் ஆசியை அள்ளிக் கொட்டியுள்ளார். இப்படித்தான் இதே பெங்களூரில் இந்திய அணிக்கும் ஆஸ்திரேலிய அணிக்கும் கிரிக்கெட் போட்டி நடந்தது. அந்தக் காலகட்டத்தில் விளம்பரப்படுத்தப்பட்ட கிரிக்கெட்டர் கவாஸ்கர்.
அவர் என்ன செய்தார் தெரியுமா? சாயிபாபாவைச் சென்று சந்தித்து ஆசி பெற்றார். சாயிபாபா ஒரு மோதிரத்தையும் அவருக்குக் கொடுத்து விளையாட்டின்போது இதனை அணிந்து கொண்டால் வெற்றி நிச்சயம் - ரன்களைக் குவிப்பீர்கள் என்று அருளுபதேசமும் செய்தார்.
என்ன நடந்தது தெரியுமா? அந்தப் போட்டியில் போன மச்சான் திரும்பி வந்தான்! என்ற கதையாக ரன் ஏதும் (னுரஉம டீரவ) குவிக்காமல் வெளியேறினார்.
அப்பொழுது சாயிபாபாவைச் சென்று தரிசிக்காத கபில்தேவ் தான் இந்திய அணியில் அதிக ரன்களைக் குவித்தார். இந்த உண்மைகள் தெரிந்திருந்தும் டெண்டுல்கருக்கு ஏன் வீணான வேலை?
பரிதாபம் அந்த சாயிபாபாவே குளியலறையில் விழுந்து எலும்பு முறிந்து அவஸ்தைப்பட்டுக் கொண்டு இருக்கிறார்! பகவானுக்கே எலும்பு முறிகிறது! பகவானுக்கே மருத்துவர்களின் உதவி தேவைப்படும் பொழுது, சச்சின் டெண்டுல்கரின் காயத்தையா குணப்படுத்தப் போகிறார்?
விளையாட்டு என்பது வீரத்திற்கும், தீரத்திற்கும், விவேகத்திற்கும், திறமைக்கும் உரிய இடம்.
அதில் பாபாக்களின் ஆசி, கடவுளின் அருள் தேவைப்படும் என்றால் விளையாட்டின் அடிப்படை நோக்கமே நொறுங்கிப் போய்விடவில்லையா? இது ஒரு தன்னம்பிக்கை இல்லா சோதாத்தனம் அல்லவா!
கடவுள் பக்தி என்கிற புழு புழுத்துப் போன மூத்த மூடத்தனம் எவ்வளவுப் பெரிய பாதிப்புகளுக்கெல்லாம் காரணமாக இருக்கிறது என்பதை எண்ணிப் பார்க்க வேண்டாமா?
இந்திய விளையாட்டுக்கா ரர்கள் மைதானத்தில் சூரி யனை நமஸ்காரம் செய்வது என்ன! கழுத்தில் மணி மாலை களைக் கொத்துக் கொத்தாகக் கட்டிக் கொண்டு இருப்பது என்ன! தாயத்துகள் என்ன! அவற்றை அடிக்கடி கண்ணில் ஒத்திக் கொள்வதென்ன!
இருந்தும் என்ன பயன்? விளக்கெண்ணெய்க்குக் கேடே தவிர பிள்ளை பிழைத்த பாடில்லையே!
10.10.2004 (விடுதலை ஒற்றைப்பத்தி -
2)
நூல் : விடுதலை ஒற்றைப்பத்தி - 2
ஆசிரியர் : கலி.பூங்குன்றன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக