தி சிட்டி ஃபோரம் (The
City Forum) 2.10.2004 நாளிட்ட இதழ், நியூ புக் லேண்ட்ஸ் கொடுத்த தகவலின் அடிப்படையில் ஒரு தகவலை வெளியிட்டுள் ளது.
அதிகமாக விற்கப்படும் நூல்களின் பட்டியல் ஒன்றை அது வெளியிட்டுள்ளது. அதில் 6 நூல்கள் வெளியிடப்பட்டுள்ளன. அந்தப் பட்டியலிலும் முதலாவது இடத்தில் இருப்பது தமிழர் தலைவர் மானமிகு கி. வீரமணி அவர்கள் எழுதிய கீதையின் மறுபக்கம் நூலாகும்.
பார்ப்பனர்கள் என்னதான் கரடியாகக் கத்தினாலும், சுஜாதா போன்ற எழுத்தாளர்களை (இந்த வாரம் ஆனந்த விகடனில் கீதையைப்பற்றி சிறப்புக் கட்டுரை ஒன்றை எழுதியுள்ளார்) களத்தில் இறக்கிவிட்டாலும் எது தகுதியானதோ அது வென்றே தீரும் என்கிற இயற்கையின் நியதிப்படி, தமிழர் தலைவர் அவர்களின் ஆய்வு நூல் மக்கள் மன்றத்தில் வேகமாகச் சென்றடைந்துகொண்டு இருக்கிறது.
1998ஆம் ஆண்டில் முதற் பதிப்பு வெளியானது. நான்காவது பதிப்பாக
மக்கள் பதிப்பாக (நன்கொடை ரூபாய் 50) இந்த செப்டம்பரில் அச்சிடப்பட்டுள்ளது.
Bhagavad Gita Myth or
Mirage?
என்ற தலைப்பில் 2001இல் ஆங்கிலத்திலும் மொழி பெயர்க்கப்பட்டு உலகம் முழுவதும் சென்றடைந்துள்ளது.
பகவத் கீதையைப் பரப்புவதற்கென்றே பார்ப்பனர்கள் அறக்கட்டளைகளை ஏற்படுத்தி குறைந்த விலையில் உலகம் முழுவதும் பரப்பிக் கொண்டிருக்கிறார்கள்.
இந்தியா (That
is Bharat) என்றால் பகவான் கிருஷ்ணன் அருளிய கீதைதான் அதன் அடையாளச் சின்னம் - கலாச்சார கிண்ணம் என்பதுபோல பிரச்சார யுக்தியால் ஆக்கி வைத்துள்ளனர்.
ஊதி உப்பிப் பெருக்க வைக்கப்பட்ட அந்தப் பலூன் திராவிடர் கழகத் தலைவரின் ஆய்வு என்கிற நுண்ணிய ஊசி முனைமூலம் வெடிக்கச் செய்யப்பட்டுவிட்டது என்பதுதான் உண்மை.
தந்தை பெரியாரின் அறிவார்ந்த பகுத்தறிவுச் சிந்தனைகளுக்குமுன் எந்தப் பழைமை வாதம் வென்றது? தந்தை பெரியார் அவர்களின் இராமாயணப் பாத்திரங்கள் (தமிழ், ஆங்கிலம், இந்தி ஆகிய மொழிகளிலும் வெளிவந்துள்ளது) எத்தனை எத்தனைப் பதிப்புகள் வெளிவந்துள்ளன!
மூச்சுவிட முடிந்ததா வேதியக் கூட்டத்தால் - சங்கராச்சாரி பரிவாரங்களால்?
அந்த வரிசையிலே கீதையின் மறுபக்கம் பார்ப்பனீயத்தின் அஸ்திவாரத்தை நொறுக்கித் தள்ளிக் கொண்டு இருக்கிறது.
பகுத்தறிவாளர்களே, பெரியார் பகுத்தறிவு இலக்கிய அணியினரே, கீதையின் மறுபக்கம் கருத்தரங்குகளை நாடெங்கும் நடத்தி, நல்ல சமயமடா இதை நழுவவிடலாமா? என்கிற யுக்தியைப் பயன்படுத்துவீர்! பயன்படுத்துவீர்!!
4.10.2004 (விடுதலை ஒற்றைப்பத்தி - 2)
நூல் : விடுதலை ஒற்றைப்பத்தி - 2
ஆசிரியர் : கலி.பூங்குன்றன்
நூல் : விடுதலை ஒற்றைப்பத்தி - 2
ஆசிரியர் : கலி.பூங்குன்றன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக