வைக்கம் எச்சில் இலை
வைக்கம் கோவிலில் பிராமணர்கள் சாப்பிட்ட எச்சில் இலை ஒன்று சில சமயங்களில் 0.0.6 வீதம் விற்கப்படுகிறது. (அந்நாளில் இது அரையணா மதிப்பு)
வியாதியஸ்தர்களுக்கு வியாதி சவுக்கியமாகி விடும் என்றும், சந்தானமில்லாதவர்களுக்குச் சந்தான விருத்தியாகுமென்றும் அங்குள்ள பிராமணரல்லாத ஜனங்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்திவைக்கப்பட்டிருக்கிறது. ஆனால், இது தமிழ்நாட்டில் ஒரு பிராமணனுக்கு ரூ.1000, 500 என்று விகிதம் பேசி நம்ம வீட்டுக்கு அழைத்து வந்து, அவர்களுக்குப் பணத்தைக் கொட்டி பூசை செய்து, அந்தக் கால் கழுவிய தண்ணீரைச் சாப்பிட்டால் தனது பாபம் போய்விடும் என்று நம்பும்படியாக செய்கிறதை விடப் பெரிய மோசடியல்ல.
ஆதாரம் : குடிஅரசு 9.8.1925
வைக்கம் எச்சில் இலை
லோகோபகாரி மூன்றாம் பக்கத்தில் வைக்கத்தெச்சிலையைப் பற்றி நமது குடிஅரசு பத்திரிகையில் வெளியான குறிப்பை வெளியிட்டு அந்த எச்சிலையை உண்பதால் நோய் நீங்குமென்ற நம்பிக்கையிருப்பது உண்மையாயினும், எச்சிலை விற்கப்படுவதாகச் செய்வது உண்மையல்லவென்று மலையாளத்துப் பிராமணர் ஒருவர் கூறுகிறார் என்ற நமது குறிப்பும் வெளியாயிருந்தது. வைக்கத்திலே பிறந்து வளர்ந்து வாழ்பவரும், வைக்கத்திலுள்ள சத்தியாக்கிரக ஆசிரமத்தில் தற்காலக் காரியதரிசியுமான ஸ்ரீமான் கே. நாராயணன் இதுபற்றி நமக்கு எழுதியிருக்கிறார். அவர் சொல்லுவதின் சுருக்கம்: வைக்கம் எச்சிலை சகல நோய்களையும், மலட்டுத்தன்மையையும் நீக்கவல்லதென்ற நம்பிக்கை பாமர ஜனங்களுக்குள் உண்டு. வைக்கத்தம்மன் கோயில் எச்சிலைகள் பரம்பரையாக வாரியர் குடும்பத்தாருக்கு உரியன. அவர்களே கோயிலில் தாழ்ந்த வேலைகளைச் செய்கிறார்கள். அவர்களே பிராமணர்கள் சாப்பிட்டபின் இலைகளை எடுத்து அப்புறப்படுத்துகிறார்கள். அவர்கள் இலைகளை வெளியே கொண்டுபோய் மொத்தமாக நாயர்களுக்கு விற்று விடுகிறார்கள். நாயர்கள் எச்சிலைகளில் உள்ளவற்றையெல்லாம், அவற்றின் சீர்கேட்டைச் சொல்ல வேண்டியதில்லை. நன்றாகக் கலந்து கடைத் தெருவுக்குக் கொண்டுபோய் பகிரங்கமாக விற்கிறார்கள். நகர பரிபாலன சபைக்கும் இந்த எச்சிலை லாபத்தில் பங்கு உண்டு. ஒரு பிராமண போஜனத்தில் வரும் எச்சிலையால் வாரியருக்குச் சுமார் 10 ரூபாய் லாபம் கிடைக்கும்.
வாரியர்களிடமிருந்து வாங்கி விற்கும் நாயர்களுக்கு இன்னும் அதிக லாபம் கிடைக்கும். சில காலத்திற்கு முன் தெய்வபக்தியுள்ள உயர்வகுப்பார் பலர். இதனை வாங்கித் தங்கள் நோய் தீருமென்று உட்கொண்டு வந்தார்கள். ஆனால், இப்பொழுது பக்தியை விடப் பசி காரணமாகவே தாழ்ந்த வகுப்பு ஜனங்கள் இந்த எச்சிலைகளை வாங்கி உண்கிறார்கள். மலையாளத்து பிராமணர் கூற்றைத் தயவுசெய்து திருத்தவேண்டும்.
இதுபோன்ற சமூகக் கொடுமைகள் இன்று தலைதூக்காமல் இருப்பதற்குத் தந்தை பெரியாரின் தணியாத போராட்டம்தான் காரணம். (தந்தை பெரியார் 132ஆம் ஆண்டு பிறந்தநாள் விடுதலை மலர் - பக்கம் 242)
கே.ஆர்.நாராயணனை சர்.சி.பி.ராமசாமி அய்யர் எப்படி நடத்தினார்? தி இந்து கே.ஆர்.நாராயணனை சர்.சி.பி.ராமசாமி அய்யர் எப்படி நடத்தினார்? இந்தியத் துணைக் கண்டத்தின் முதல் தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சார்ந்த குடியரசுத் தலைவர் கே.ஆர். நாராயணன், 2005 நவம்பர் 9 அன்று மறைவுற்றார். 21 குண்டுகள் முழங்க அந்த மனிதருக்கு இறுதி மரியாதையை இந்திய அரசு கொடுத்தது. இந்த முதல் குடிமகன் என்ற சமூக அந்தஸ்தை அவர் எப்படிப் பெற்றிருப்பார்? அதற்காக அவர் நடத்திய போராட்டங்கள் எப்படி இருந்திருக்கும்? வடுக்களையும் அவமானங்களையும் கடந்து அவர் நடந்த முட்பாதை:
நான் பல்கலைக் கழகத்தில் முதல் மாணவனாகத் தேர்ச்சி பெற்றேன். திருவிதாங்கூர் மகாராஜா சி.பி. ராமசாமி (அய்யர்) என்னை அழைத்தார். நீ ஆக்ஸ்போர்டு பல்கலைக் கழகத்தில் சேர்ந்து உயர்படிப்பு படிக்க வேண்டும். நான் உன்னை அனுப்பி வைக்கிறேன் என்று சொன்னார். அவர் டெல்லியிலிருந்து திரும்பியதும் மீண்டும் அவரை சந்திக்கும்படி கூறினார். ஆனால், அவர் திரும்பி வந்தபோது, அவர் மனநிலை மாறியிருந்தது. நான் உன்னிடம் சொன்னதை மீண்டும் பரிசீலனை செய்தேன். உன்னை ஆக்ஸ்போர்டு பல்கலைக் கழகத்திற்கு அனுப்புவதற்கு பதில், உனக்கு அரசு வேலை தருகிறேன் என்றார்.
அவருடைய மாறிய இம்மனநிலையைக் கண்டு நான் அதிர்ந்து போனேன். அய்யா அதற்குப் பதிலாக நீங்கள் எனக்கு விரிவுரையாளர் வேலை கொடுப்பீர்களா? என்று கேட்டேன். அவர் கோபமடைந்து கத்தினார்; அப்படியெனில், உன் முகவரி மற்றும் பிற தகவல்களை என்னுடைய உதவியாளரிடம் கொடுத்துவிட்டுப் போ என்றார். பல்வேறு பிரச்சினைகளுக்குக் காரணம் ஜாதிதான் என்பதை நான் உணர்ந்தேன்.
பிற்படுத்தப்பட்ட வகுப்பினரின் பாதுகாவலர் ஒருவருடன் நான் மாலையில் நடைப்பயிற்சியின்போது சந்தித்து உரையாடுவேன். ஒருநாள் அவர் என்னைப் பார்த்துக் கேட்டார். திவான் என்ன சொன்னார்? அவர் உனக்கு உதவுவதாக இல்லை என்று கேள்விப்பட்டேனே என்றார். திவான் இப்படிச் சொன்னார். சில்க் ஜிப்பா, தங்கக் கடிகாரத்துடன் என்னை வந்து சந்தித்த அந்த அரிஜன பையன் யார்? நான் சொன்னேன்: அய்யா என்னிடம் சில்க் ஜிப்பாக இல்லை; அது எனக்குச் சொந்தமானதும் அல்ல. நான் காதி உடை மட்டுமே அணிவேன். நான் காந்தியாரைப் பின்பற்றுகிறேன். இந்தக் கடிகாரம் தங்கம் அல்ல. அது தங்க முலாம் பூசப்பட்டது. இதை எனக்கு ஒரு நண்பர் அன்பளிப்பாகக் கொடுத்தார். திவான் இப்படி ஒரு அற்பமான மனிதராக இருப்பார் எனில் அவரிடமிருந்து எனக்கு எந்த உதவியும் வேண்டாம்.
என்னுடைய வாழ்க்கையில் அது ஒரு துயரமான காலகட்டம். என்னுடைய இரு அண்ணன்களும் தொடர்ந்து காச நோயால் பாதிக்கப்பட்டு இறந்துவிட்டனர். மிகவும் துன்பகரமான நாட்கள் அவை. அநீதியைக் கண்டு எப்போதும் நம் ரத்தம் கொதிக்கும். கோபத்தையும் துயரத்தையும் நாம் கட்டுப்படுத்த முடியாது. உனக்கு இழைக்கப்பட்ட அநீதியைக் கண்டு நீ கோபப்படவில்லையா? என்றார் அவர். திவான் என்னை நிலைகுலைய வைத்துவிட்டார். நான் கோபமடைந்தேன். நான் ஒரு தாழ்த்தப்பட்டவன் என்பதால்தான் அவர் என்னிடம் அப்படி நடந்து கொண்டார். நான் காந்திய வழியில் ஈர்க்கப்பட்டிருந்ததால் நான் அவரிடம் வெறுப்பை வளர்த்துக் கொள்ளவில்லை. நான் என்னை ஒருபோதும் ஒடுக்கப்பட்டவனாகவோ, நசுக்கப்பட்டவனாகவோ, துன்புறும் தலித்தாகவோ எண்ணியதில்லை. பல நல்ல மனிதர்கள் எனக்கு உதவி புரிந்துள்ளனர். நான் அதைப் பயன்படுத்திக் கொண்டேன்.
- டாக்டர் கே.ஆர். நாராயணன் அவர்கள் மாரி மார்செல் தெக்கேகரா என்பவரிடம் பகிர்ந்து கொண்டவை.
- (தி இந்து 22-4-2005)
நூல் : பார்ப்பனர் புரட்டுக்குப் பதிலடி
ஆசிரியர் : கவிஞர் கலி.பூங்குன்றன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக