பிறப்பின் காரணமாக...
பிறப்பின் காரணமாக ஒருவன் பிராமணன் ஆகமாட்டான். குணத்தாலும் செயலாலுமே பிராமணத்வம் நிச்சயிக்கப்படும்.
(9-3-46 சேலம் பிராமண மாநாட்டில் சர் சி.பி. இராமசாமி அய்யர்)
கசாப்புக் கடைக்காரருடன்
வாழ்க்கையில் தனக்குரிய உயர்ந்த குறிக்கோளையும் தூயமனத்தையும் துறந்து உத்தியோகத்துக்கும் பதவிக்கும் செல்வத்துக்கும், கசாப்புக்கடைக்காரருடனும், போட்டியிடுவோன் தன்னைப் பிராமணன் என்று சொல்லிக் கொள்ளுவது பித்தலாட்டமாகும்.
(9-3-46 சேலம் பிராமண மாநாட்டில் சர் சி.பி. இராமசாமி அய்யர்)
பகைமை
வகுப்புவாரிப் பிரதிநிதித்துவத்தால் அரசியல் நிர்வாகத்தில் தகுதியும் வினைத் திட்பமும் (ஆநசவை யனே டிககஉநைஉல) கெடலாயின என்ற பல்லவினை நீங்கள் பாடப்பாட பிராமணரல்லாதாரின் மனதைப் புண்படுத்துவதுமன்றி அவர்கள் பகைமையையும் பெருக்கிக் கொள்ளுகிறீர்கள்.
(9-3-46 சேலம் பிராமண மாநாட்டில் சர் சி.பி. இராமசாமி அய்யர்)
பிராமண இனம் சீரழிந்து...
பிராமண இனம் வேரறுந்து...
பிராமணரல்லாதாரை ஏளனம் செய்து அவரை எதிர்த்துப் பகைக்கின் பிராமண இனம் சீரழிந்து வேரறுந்து போகும்.
(9-3-46 சேலம் பிராமண மாநாட்டில் சர் சி.பி. இராமசாமி அய்யர்)
பிராமணர்கள் திருத்திக் கொள்ள....
ஏழை மக்களைத் துன்புறுத்தி...
யூதர் ஆதியில் அறிவுத்துறையிலும் அன்பின் வழியிலும் வாழ்ந்து வந்தனர். பின்னர் பணம் தேடுபவர்களாகிக் கடன்கொடுத்து ஏழை மக்களைத் துன்புறுத்திப் பல துறைகளிலும் ஆதிக்கம் பெற்றுவிட்டமையால் பிறர் அவர்களிடம் பொறாமை கொண்டு அவர்களை ஒடுக்கத் தொடங்கினர்.
அதனால் அவர்கள் இன்று கொடுமையான தாழ்ந்த நிலைக்கு வந்துவிட்டனர்!
ஆதலால் பிராமணர்கள் அந்நிலை எய்தாமல் இருக்க தங்களைக் காலத்திற்கேற்றபடி திருத்திக் கொள்ள வேண்டுவது அத்தியாவசியமாகும்.
(9-3-46 சேலம் பிராமண மாநாட்டில் சர் சி.பி. இராமசாமி அய்யர்)
பக்குவப்படுத்திக் கொள்
நிலைமைக் கேற்பவும்,
சுற்றுச் சார்புக் கொட்டவும் தம்மைப் பக்குவப்படுத்திக் கொள்ளுவதே பிராமணரது இயல்பென வரலாறு கூறுகின்றது. அம்மரபியல்பை இன்று மறப்பதும் துறப்பதும் பேதமையாகும்.
(9-3-46 சேலம் பிராமண மாநாட்டில் சர் சி.பி. இராமசாமி அய்யர்)
புலால் உண்ணுதலும்,
சோமபானம் அருந்துதலும்
யாகங்களைச்செய்து புலால் உண்ணுதலும், சோமபானம் அருந்துதலும் நமது பண்டைக்காலத்து வழக்கம். தென்னாடு போந்த பின்னர் இந்நாட்டின் தட்பவெப்ப நிலைமைக்கேற்ப நம்பவர் புரவையும் குடியையும் அறவே நீக்கிவிட்டனர்.
(9-3-46 சேலம் பிராமண மாநாட்டில் சர் சி.பி. இராமசாமி அய்யர்)
ஆத்ம வித்தை
வேதங்களின் கர்மகாண்டத்தையே பின்பற்றிவந்த நம்மவர், க்ஷத்திரியரிடம் சென்று ஆத்ம வித்தையையும் உபநிடதங்களையும் கற்றுக் கொள்ளவில்லையா?
(9-3-46 சேலம் பிராமண மாநாட்டில் சர் சி.பி. இராமசாமி அய்யர்)
பௌத்தம், ஜைனம்
நமக்கு எதிர்ப்பாகத் தோன்றிய பௌத்தம், ஜைனம் முதலிய மதங்களின் சீரிய கொள்கைகளைத் தழுவி நமதாக்கிக் கொள்ளவில்லையா?
(9-3-46 சேலம் பிராமண மாநாட்டில் சர் சி.பி. இராமசாமி அய்யர்)
மன்னர்களிடம் பரிசு மிகவும் முந்திய காலத்திலேயே நம்மவர் கடல்கடந்து சென்று பல யாகங்களைச் செய்து மன்னர்கள் பால் பரிசு பெறவில்லையா?
(9-3-46 சேலம் பிராமண மாநாட்டில் சர் சி.பி. இராமசாமி அய்யர்)
மலையாள நாட்டுப் பழக்கம்
நமது இனத்தவராகிய நம்பூத்திரிகள் மலையாள நாட்டுப் பழக்க வழக்கங்களுக்கேற்பத் தமது ஒழுக்கங்களை மாற்றியமைத்துக் கொள்ளவில்லையா?
(9-3-46 சேலம் பிராமண மாநாட்டில் சர் சி.பி. இராமசாமி அய்யர்)
மகம்மதிய ஆட்சியில் பிராமணர்கள்
மகம்மதிய ஆட்சி நிலவியபோது நம்மவர்கள் அமைச்சர்களாகவும் அலுவலாளர்களாகவும் இருந்து ஆக்கம் பெறவில்லையா?
(9-3-46 சேலம் பிராமண மாநாட்டில் சர் சி.பி. இராமசாமி அய்யர்)
நம்மை வெறுப்பது உண்மை தான்!
காலத்திற்கேற்ற கோலம் தாங்கிய நம்மவர் இன்று ஏன் நம் மரப்பியலைக் கைவிட வேண்டும்? அதனால் இன்று பிராமணரல்லாதார் நமது ஆதிக்கத்தையும் செல்வாக்கையும் கண்டு பொறாமை கொண்டு நம்மை வெறுப்பது உண்மை தான்? நீங்கள் செய்ய வேண்டுவது என்னவெனில்; உத்தியோகம் உங்களை நாடிவந்தால் வரட்டும்; இல்லையேல் நீங்கள் அதனை நாடவேண்டாம்.
(9-3-46 சேலம் பிராமண மாநாட்டில் சர் சி.பி. இராமசாமி அய்யர்)
கைத் தொழில் தொடங்குங்கள்
உங்கள் பிள்ளைகளுக்குக் கல்லூரிகளிலும்,
பள்ளிகளிலும் இடம் மறுக்கப்படுகிறதென்கிறீர்கள்.
அப்படியாயின் திரண்ட நிதியைச் சேர்த்துப் புதிய கல்லூரிகளையும் பல்கலைக் கழகங்களையும், கைத்தொழிற்சாலைகளையும் தொடங்குங்கள். அவற்றில் எல்லா மாணவர்களையும் ஜாதி, குல,
மத வேறுபாடின்றிச் சேர்த்துக் கொள்ளுங்கள். பண்டைக்காலத்தில் நமது பொருளாதார நிலைமை தாழ்ந்திருந்தது;
இன்று அப்படியில்லை. ஆதலால் பிறர் உதவியின்றியே பிராமணர்களே இதனைச் செய்யக்கூடும்.
(9-3-46 சேலம் பிராமண மாநாட்டில் சர் சி.பி. இராமசாமி அய்யர்)
விவசாயம், கைத்தொழில் தொடங்குங்கள்!
நகத்தில் மண்படாமல் வாழும் பழைய வழக்கத்தைவிட்டு விவசாயம், கைத்தொழில் முதலிய துறைகளில் புகுந்து செயலாற்றுங்கள்.
(9-3-46 சேலம் பிராமண மாநாட்டில் சர் சி.பி. இராமசாமி அய்யர்)
உலகத்தோடு ஒட்ட வேண்டும்
பிராமணர்களுக்குள் இருக்கும் பல பிரிவுகளும் ஒன்றுபடவேண்டும், ஒன்றுபட்டு உலகத்தோடு ஒட்ட ஒழுகி முன்னேற வேண்டும்.
(9-3-46 சேலம் பிராமண மாநாட்டில் சர் சி.பி. இராமசாமி அய்யர்)
பழைய பெருமையை மறந்து
பழைய பெருமையை மறந்து புதிய உலகத்திற்கேற்ப நடந்துகொள்ள உங்களுக்கு விருப்பமில்லையேல் இம்மாநாடு இக்கணமே கலைந்து விடலாம்.
(9-3-46 சேலம் பிராமண மாநாட்டில் சர் சி.பி. இராமசாமி அய்யர்)
யாசிக்க வேண்டாம்
நமது முன்னோர் இரத்தலை ஒரு தொழிலாகக் கொண்டிருந்தனர்.
முற்காலத்தில் கொடுப்போரும் விரும்பிக் கொடுத்தனர், பிராமணரும் மகிழ்ந்து ஏற்றனர். இக்காலத்தோடு அன்பால் உந்தப்பட்டு பிராமணருக்குக் கொடுப்போர் இலர் என்பது வெள்ளிடை. ஆதலால் எவரிடத்தும் யாசிக்க வேண்டாம். தன்கையே தனக்குத் துணையாகத் தன்மானத்தோடு வாழுங்கள். (9-3-46 சேலம் பிராமண மாநாட்டில் சர் சி.பி. இராமசாமி அய்யர்)
நூல் : பார்ப்பனர் புரட்டுக்குப் பதிலடி
ஆசிரியர் : கவிஞர் கலி.பூங்குன்றன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக