வைகுந்த ஏகாதசி அன்று வைணவக் கோயில்களில் சொர்க்கவாசல் திறக்கப்படுகிறது. விடியற்காலையில் அதற்கான கோயில் கதவு திறக்கப்பட்டதுடன் கோவிந்தா! கோவிந்தா! என்று கோஷம் இட்டுக் கொண்டு பக்தர்கள் ஒருவரை ஒருவர் இடித்துக் கொண்டு செல்லுவார்கள்.
சொர்க்கம் என்றால் என்ன? அது எங்கேயிருக்கிறது? என்பதெல்லாம் அவர்களின் சிந்தனை வட்டத்துக்குள் வராது; பேராசை மட்டும் அவர்களைப் பிடுங்கித் தின்றுவிடும்.
ஊர்வசி இருப்பாள், இரம்பை இருப்பாள், கற்பகத்தரு இருக்கும், காராம் பசு இருக்கும். மகிழ்ச்சி கொப்பளிக்கும்; துயரம் என்றால் என்னவென்றே தெரியாது என்பன போன்ற பேராசைகளைத் தூண்டி வைத்துள்ளனர்.
ஓ! அதற்காகத்தான் இப்படி ஆசை ஆசையாக ஓட்டமோ, ஓட்டம்?
கோயில் நிருவாகம் அறிவிப்பு கொடுக்கட்டும். சொர்க்கவாசல் நுழைபவர்கள் திரும்பி வர மாட்டார்கள். அவர்கள் சொர்க்கத்திற்கு அழைத்துச் செல்லப்படுவார்கள் என்று ஓரிரு
வார்த்தைகளைச் சொல்லட்டும், ஒரே ஒரு பக்தராவது கோயில் பக்கம் தலை வைத்துப்படுப்பாரா?
ஏதோ ஒரு மன நமைச்சல் போதை அவர்களை அவ்வாறு ஆட்டுவிக்கிறது என்பதுதான் இதன் பொருள்.
வைணவக் கோயில்களில் மிகப் பெரிய கோயிலும், இந்தியத் துணைக்கண்டத்திலேயே பெரிய கல் முதலாளியான திருப்பதி வெங்கடேசப்பெருமாள் கோயிலில் இவ்வாண்டு சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சியின்போது பக்தர்கள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டார்களாம்.
பலே! பலே!
கோயிலுக்குள்ளேயே மறியல் போராட்டமா!
ஆமாம், உண்மைதான்! எதற்காக மறியலாம்? சொர்க்க வாசலில் நுழையச் சென்றவர்களுக்கு சரியாக அடிப்படை வசதிகளைச் செய்து கொடுக்கவில்லையாம். அதனால் பக்தர்கள் மறியலில் ஈடுபட்டனராம்; கோயில் நிருவாகத்தை எதிர்த்து முழக்கமிட்டனராம்.
சொர்க்கம் என்ற குபேரபுரிக்குச் செல்லும் பக்தர்கள் அதற்காக சிறுசிறு சங்கடங்களைப் பொறுத்துக் கொள்ளக் கூடாதா? இதைவிட நாத்திகப் பாணி பணி வேறு ஒன்றும் இருக்க முடியாது. பக்தர்களுக்குக் குறையில்லாமல் பார்த்துக் கொள்ளக்கூட பகவானால் முடியாதா! இதைக்கூட செய்யாத அந்தக் குத்துக்கல்
பக்தர்களுக்கு எதைத்தான் சாதித்துக் கொடுக்கப் போகிறது?
ஒருக்கால், இந்த அளவு வசதிகள் போதும் என்று ஏழு மலையான் நினைத்திருக்கலாம் அல்லவா! அப்படியிருக்கும்போது அந்த இடத்தில் மறியல் செய்வது
ஏழுமலையானுக்கு எதிரான போராட்டம் தானே!
எந்த உரிமையைப் பெறுவதாகயிருந்தாலும், அதற்காகப் போராட வேண்டும் என்பார் தந்தை பெரியார். பக்தர்கள் அந்த வகையில்தான் மறியலில் ஈடுபட் டுள்ளனர் என்று கருதலாமா?
வைணவர்களுக்கு ஒரு வைகுண்ட ஏகாதசி என்றால், சைவர்களுக்கு ஒரு சிவராத்திரி! இப்படி மதப் பிரிவுகளுக்குள் போட்டா போட்டி! அதன் விளைவு தான் பண்டிகைகளின் எண்ணிக்கைப் பெருக்கம்.
பண்டிகைகள்
பெருகப் பெருக பக்தர்களின் மணி பர்ஸ் காலி புரோகிதர்களின் தொந்தி வீக்கம்! புரிகிறதா?
9.1.2009 (விடுதலை ஒற்றைப்பத்தி - 2)
ஆசிரியர் : கலி.புங்குன்றன்
நூல் : விடுதலை ஒற்றைப்பத்தி - 2
ஆசிரியர் : கலி.புங்குன்றன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக