“பிராமணர், ‘பிராமணர் மகாசபை’ வைத்துக் கொள்கிறார்கள். அதனால் அவர்களுக்குப் பெருமையும் உரிமையும் கிடைக்கின்றன. நாம் நம்மைச் சூத்திரன் என்று கூறிக்கொண்டால் உயர் சாதியானுக்கு அடிமையாயிருக்கும் உரிமைதான் கிடைக்கும். பார்ப்பானின் தாசி மக்கள் என்ற பட்டம் தான் கிடைக்கும். அந்தச் சூத்திரத் தன்மையை எரிப்பதையே தமது முக்கிய வேலையாகக் கொண்டிருப்பதால்தான், அப்பெயரால் எவ்விதச் சலுகையோ உரிமையோ கிடைக்காததால் தான் அப்பெயரில் உள்ள இழிவு காரணமாகத்தான், அத்தலைப்பில் அதே இழி தன்மையுள்ள திராவிடராகிய மு°லிம்கள், கிறி°துவர்கள், வைசியர்கள், சத்திரியர்கள், வேளாளர்கள், நாயுடு, கம்மவார், ஆந்திரர், கன்னடியர், மலையாளிகள் ஆகியவர்கள் எல்லாம் ஒன்று சேர மறுத்து வருகிறார்கள். அதனால் தான், நம்மைச் சூத்திரர் என்று கூறிக்கொள்ளாமல் திராவிடர் என்று கூறிக்கொள்கிறோம். சூத்திரர் என்பவர்களுக்குத் ‘திராவிடர்’ என்பது தவிர்த்து வேறு பொருத்தமான பெயர் வேறு யாராவது கூறுவார்களானால், அதை நன்றியறிதலுடன் ஏற்றுக்கொண்டு, எனது அறியாமைக்கு வருந்தி மன்னிப்புக் கேட்டுக் கொள்ளவும் தயாராயிருக்கிறேன்.
நீங்கள் கொடுக்கும் பெயரில், நான் மேலே கூறிய அத்தனை பேரும் ஒன்று சேர வசதியிருக்க வேண்டும். அதில் சூத்திரனல்லாத ஒரு தூசி கூடப் புகுந்து கொள்ள வசதியிருக்கக் கூடாது. அயலார் புகுந்து கொள்ளாமல் தடுக்க ஏதாவது தடையிருக்க வேண்டும். திராவிடர் என்று கூறினால் திராவிடர் அல்லாத பார்ப்பான் அதில் வந்து புகுந்து கொள்ள முடியாது. நாம் ஒழிக்கப் பாடுபடும், ‘பிறவி’ காரணமாக இழிதன்மையும் அவர்களுக்கு இல்லை. ஆகவே அவர்களைச் சேர்த்துக் கொள்வதற்குக் காரணம் இல்லை.
‘ஆரியராவது, திராவிடராவது அதெல்லாம் இல்லை’ என்பீர்கள். இங்கே வாருங்கள். பேசாமல் மேல் துண்டு போட்டுக்கொண்டு நாலு வருணத்தாரும் கோயிலுக்குப் போங்களேன்! பார்ப்பான் உங்களையெல்லாம் ஒரே இடத்தில் விட்டு விட்டு உள்ளே நுழைகிறானா, இல்லையா பாருங்களேன்!
தந்தை பெரியார்
(நூல் : “மொழியாராய்ச்சி”
பவானியில் உள்ள வள்ளுவர் பதிப்பகம் வெளியீடு)
நூல் : பார்ப்பனர் புரட்டுக்குப் பதிலடி
ஆசிரியர் : கவிஞர் கலி.புங்குன்றன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக