ஞாயிறு, 16 ஜூலை, 2017

நாத்திகம்




சபரிமலை அய்யப்பன் கோயில் நிருவாகிகள், அறங்காவலர்கள் அசல் நாத்திகர்கள் போல தோன்றுகிறது. இல்லாவிட்டால் அய்யப்பனுக்கு சக்தியில்லை என்று இவ்வளவு கேவலமாக அறிவிப்பார்களா?

18 படிகளைத் தாண்டி அய்யப்பனைத் தரிசிக்க வரும் அனைத்துப் பக்தர்களையும் தீவிரமாக சோதனை நடத்திடத் திட்டமிடப்பட்டுள்ளதாம்.

இதன் பொருள் என்ன?

பக்தர்கள் வெடிகுண்டுகளை எடுத்துச் சென்று அய்யப்பன்மீது வீசி எறிவார்கள் என்ற பயம்தானே!

அய்யப்பன் சர்வசக்தி வாய்ந்தவன்; அவனை யாரும் அசைக்கவோ, அழிக்கவோ முடியாது என்ற நம்பிக்கை கோயில் அறங்காவலர்களுக்கு இருந்தால், இது மாதிரி நடவடிக்கைகளில் ஈடுபடுவார்களா?
அதேபோல, முதல் படிக்கட்டில் ஏறி 18 படிகளைத் தாண்டி பக்தர்கள் சரண கோஷம் எழுப்பி, தேங்காய் உடைப்பது வழமையாகும். இப்பொழுது அதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

அய்யப்பனை அசிங்கப்படுத்தியே தீருவது என்று அறங்காவலர்கள் தீர்மானித்துவிட்டதாகவே தெரிகிறது.

தேங்காய்க்குள் ஏதாவது வெடிப்பொருள்களை வைத்திருந்தால் அய்யப்பன் கதி என்னாவது என்ற எண்ணத்தில்தானே இந்தத் தடை?

நியாயமாக அய்யப்பன்மீதும், அவன் சக்தியின்மீதும் அபார நம்பிக்கை வைத்துள்ள யாராவது ஒரு பக்தர் அய்யப்பன் கோயில் அறங்காவலர் குழு நாத்திகப் பாணியில் செயல்படுகிறது; இது எங்களின் உள்ளத்தை அதிக ஆழமாகப் புண்படுத்துகிறது என்று கூறி நீதிமன்றத்திற்குச் செல்லவேண்டாமா?

நீதிபதிகளுக்குத்தான் வேறு என்ன வேலை? இதுபோன்ற நாட்டுக்குத் தேவையான பிரச்சினைகளில் தலையிடாமல் வேறு எந்தக் கடமையைச் செய்யப் போகிறார்கள்?

ஏற்கெனவே மகரஜோதி என்பது பொய்; அது ஒரு பித்தலாட்டம்; கேரள மின் வாரியத் தொழிலாளர்கள்தான் பொன்னம்பல மேட்டிலிருந்து ஒரு சட்டியில் சூடத்தைக் கொளுத்திக் காட்டுகிறார்கள் என்ற உண்மையைக் கேரள பகுத்தறிவாளர்கள் நிரூபித்து விட்டார்கள். அது உண்மைதான் என்று கேரள அறநிலையத் துறை அமைச்சர் ஜி. சுதாகர் அய்யப்பன் கோயில் தலைமைப் பூசாரி கண்டரேறு மகேஸ்வரரு, தேவஸ்வம் போர்டு தலைவர் சி.கே. குப்தனும், திருவாங்கூர் தேவஸ்வம் போர்டு முன்னாள் தலைவர் ராமன் நாயரும், முன்னாள் முதலமைச்சர் .கே. நாயனாரும், ஆமாம், மகர ஜோதி என்பது உண்மையல்ல; மோசடிதான். செயற்கையானதுதான் என்றும் ஒப்புக்கொண்டு விட்டனர்.

இவ்வளவுக்குப் பிறகும் மகரஜோதி என்றால், பக்தி என்பது அயோக்கியத்தனத்தின், மோசடியின் புகலிடம் என்பது விளங்கவில்லையா?

12.11.2009 (விடுதலை ஒற்றைப்பத்தி - 2)

நூல் : விடுதலை ஒற்றைப்பத்தி - 2,

ஆசிரியர் : கலி.பூங்குன்றன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

அயோத்திதாசப் பண்டிதர், இரட்டைமலை சீனிவாசன் ஆகியோரைத் திராவிடர் கழகம் தவிர்க்கிறதா?

திராவிடர் கழகத்தை, அதன் நன்மதிப்பை, அதன் பிறப்பொக்கும் கோட்பாட்டை, சமூக நீதி சாதனைகளை மறைக்க இன எதிரிகள் தொடர்ந்து முயற்சிக்கின்றனர். அதற்...