ஞாயிறு, 16 ஜூலை, 2017

அதிர்ஷ்டமாம்?


விளையாட்டு என்பது உடல் தொடர்பு சம்பந்தப்பட்டது மட்டுமல்ல; அங்கு விவேகத்திற்கும் இடமுண்டு. உடல் வலிமை என்பதால் முரட்டுத்தனம் என்று பொருள் கொண்டிட முடியாது, கூடாது.

உடல் ஆற்றலும், உரிய சிந்தனைக் கூர்மையும் சேர்ந்து குவிக்கும் வெற்றிகள்தான் விருதுகளின் விளைச்சல்.

இந்தியாவைப் பொறுத்தவரை உடல்திறனுக்குக் கொடுக்கும் முக்கியத்தும், உள்ள வலிமைக்குக் கொடுப்பதில்லை என்ற ஒரு குற்றச்சாற்று உண்டு.

பயிற்சி பெறும் தோழர்களைவிட பயிற்சி அளிக்கும் ஆசாமிகள் இங்கு ஆன்மிகக் குளத்தில் நீச்சல் அடிப்பவர்களாக இருப்பதால், அதன் தாக்கம் விளையாட்டு வீரர்களையும் விலாவில் குத்தி வீழ்த்துகிறது. உலகம் பூராவும் இந்த மூடத்தனம் உண்டென்றாலும், இந்தியாவில் அதிகத் தூக்கல்!
ஒரு செய்தி  தினமலரில் திருச்சி கல்லூரி மாணவர் ஒருவர், உயரம் தாண்டுதலில் சாதனை படைக்கக் கூடிய ஆற்றல் உள்ளவர். ஒலிம்பிக் வரை செல்லவேண்டும் என்ற ஆசை அலைகளை அகத்தில் தேக்கி வைத்துள்ளார், பாராட்டுகள்.

அவர் சொல்கிறார்: உயரம் தாண்டுதலுக்கு அதிர்ஷ்டம் தேவை. உயரே தாண்டும்போது அந்த வேகத்தில் எழும் காற்றால் குறுக்குக் கம்பி விழாமல் இருக்கவேண்டும்; அப்படி விழாமல் இருக்க அதிர்ஷ்-டம் வேண்டும் என்று கூறியிருக்கிறார்.

ஒன்றை அவர் உணரவேண்டும். உயரந்தாண்டுதலில் பங்கு பெறும் அனைவருக்கும் உள்ள பொதுவான பிரச்சினைதானே இது. இது இவருக்கு மட்டும் எப்படி அதிர்ஷ்டப் பிரச்சினையாக மாற முடியும்? அந்தத் தடையையும் கணக்கில் எடுத்துக்கொண்டு அறிவை இலாவகமாகயுக்தியுடன் பயன்படுத்துவதுதானே வெற்றிக்கான திறன்? இதில் அதிர்ஷ்டம் எங்கே வந்து குதிக்கிறது?

இந்திய அளவுக்கு வெளிநாட்டு வீரர்களுக்கு மிகப்பெரிய அளவில் இந்தத் தாக்கம் இல்லை என்றாலும், தோல்வி அடையும் நேரத்தில் அதைக் கொண்டு வந்து திணித்து விடுவார்கள்.

1994 இல் உலகக் கோப்பைக்கான கால்பந்து போட்டியில் சுவீடனிடம் ருமேனியா தோற்றுப் போய்விட்டது.
ருமேனிய அணியின் தலைவர் (கேப்டன்) ஜியார்ஜி ஹாஜி சொன்னார்:

சுவீடனுக்கு எதிரான போட்டியில் நாங்கள் வெற்றி பெற்று இருக்கவேண்டும். வெற்றிக்காக நாங்கள் செய்த பிரார்த்தனை பலிக்கவில்லை. கடவுள் சுவீடன் அணியின் பக்கம் இருந்துவிட்டார் என்றார்.
(கடவுள் என்ற ஒன்று இருந்தால்தானே பலன் கிடைக்க முடியும்?)

ஆக, வெற்றி  தோல்வி என்பது விளையாட்டுத் திறன் சம்பந்தப்பட்டதல்ல; அது கடவுள் சம்பந்தப்பட்டது என்றால், விளையாட்டு வீரர்களுக்கு விருது கொடுப்பதும், பாராட்டுவதும் வெட்டி வேலைதானே!

இன்னொன்று உண்டு, திருஷ்டம் என்றால் பார்வை; அதிர்ஷ்டம் என்றால் பார்வையற்ற குருட்டுத்தனம் என்ற பொருள். அப்படியென்றால் அதிர்ஷ்டக்காரர்கள் என்பவர்கள் குருட்டு மனிதர்கள் என்று தானே பொருள்?

13.2. 2010 விடுதலை ஒற்றைப்பத்தி - 3

நூல் : விடுதலை ஒற்றைப்பத்தி - 3,


ஆசிரியர் : கலி.பூங்குன்றன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

அயோத்திதாசப் பண்டிதர், இரட்டைமலை சீனிவாசன் ஆகியோரைத் திராவிடர் கழகம் தவிர்க்கிறதா?

திராவிடர் கழகத்தை, அதன் நன்மதிப்பை, அதன் பிறப்பொக்கும் கோட்பாட்டை, சமூக நீதி சாதனைகளை மறைக்க இன எதிரிகள் தொடர்ந்து முயற்சிக்கின்றனர். அதற்...