தீக்கதிர், தீபாவளி வர்த்தக மலரின் நோக்கம் குறித்து அதன் முன்னுரையில் சமாதானம் கூறிவிட்டதாம். விடுதலைக்குப் பதில் சொல்ல முயற்சித்திருக்கிறது தீக்கதிர். அடேயப்பா, என்ன சமாதானமோ!
கும்பமேளா நடத்துகிறவர்களும் சமாதானமும், சாங்கியமும் கூறத்தான் செய்கிறார்கள். அய்யப்பன் கோயிலுக்குச் செல்லுகின்றவர்களும் கொட்டி அளக்கும் சரக்குகள் கொஞ்சமா, நஞ்சமா?
மகாவிஷ்ணுவின் பத்து அவதாரம் என்றால், சாதாரணமா? ஆமை,
மீன் என்று கூறுவதெல்லாம் பரிணாம வளர்ச்சியின் தத்துவம் என்று வாய்ப்பறை கொட்டுவதில்லையா? அந்தப் பட்டியலில் மார்க்சியம் பேசுவோரும் சேர்ந்ததை நினைத்தால் சிரிப்பு வருகுது! சிரிப்பு வருகுது!! விலா நோகச் சிரிப்பு வருகிறது!!!
மக்களின் இனிய கொண்டாட்டப் பொழுது களில் நமக்குரிய விதத் தில் நாமும் பங்கேற் பது தேவையன்றோ?
அடேயப்பா! எப்படிப்பட்ட டயலிட்டிக் மெட்டிரியலிசம்!
கந்த சஷ்டி, சூரசம்ஹாரம், கார்த்திகை தீபம், நவராத்திரி, சிவராத்திரி, வைகுந்த ஏகாதசி, சொர்க்கவாசல் திறப்பு, கள்ளழகர் திருவிழா, மாசி மகம் இப்படி மாதந்தவறாமல் பக்தர்கள் மூழ்கிக் கிடப்பதெல்லாம் இனிய கொண்டாட்டங்கள்தாம்.
12 வருடங்களுக்கு ஒருமுறை கும்பகோணத்தில் வரும் மகாமகத்தில் இலட்சக்கணக்கான மக்கள் கூடி மகிழ்கிறார்கள். அதிலும் மார்க்சிஸ்ட்கள் சங்கமமாகி விடுவார்களோ! அதற்கும் மலர் வெளியிடுவார்களோ!
மூட நம்பிக்கைகளைத் தவிர்த்து தீபாவளி கொண்டாடலாமாம்! அப்படி ஒரு தீபாவளியிருக்கிறதோ?
தீபாவளி என்றாலும், சூரசம்ஹாரம் என்றாலும், நவராத்திரி என்றாலும் அசுரர்கள் வதம் செய்யப்படுவதாகக் கூறுகிறார்களே, அந்த அசுரர்கள் என்றால் யார்?
சுரர்கள் என்றால் யார்?
வரலாற்றை வகையாகப் படிக்கவேண்டியவர்களுக்கு அரிச்சுவடி சொல்லிக் கொடுக்கும் நிலை ஏற்பட்டுவிட்டதே!
மூடச் சேற்றினில் மூழ்கிக் கிடக்கும் மக்களைக் கரையேற்றுவது மார்க்சிஸ்ட்களின் கடமையா? அல்லது அந்த மூடச் சேற்றில் தாமும் உருண்டு புரண்டு கோவிந்தா போடுவது மார்க்சிஸ்ட்களின் செயலா?
கம்யூனிசம் பரவாமல் இருப்பதற்குத்தான் கம்யூனிஸ்ட் கட்சியோ!
23.10.2009 (விடுதலை ஒற்றைப்பத்தி - 2)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக