ஞாயிறு, 16 ஜூலை, 2017

எது உண்மை?



மாநிலங்களவை உறுப்பினர் தோழர் டி.கே. ரங்கராஜன் (சி.பி.எம்.) மாநிலங்களவையில் எழுப்பிய கேள்வி  கச்சத்தீவு பகுதியில் இந்தியர்களுக்கு மீன் பிடிக்கும் உரிமை உண்டா என்பதாகும்.

இக்கேள்விக்கு வெளியுறவுத் துறை இணை அமைச்சர் பிரிநீத் கவுர் எழுத்து மூலமாகக் குறிப்பிட்டிருப்பதாவது:

இந்திய மீனவர்கள் கச்சத்தீவில் ஓய்வு எடுப்பதற்கும், மீன் வலைகளை உலர்த்துவதற்கும், அந்தோணியார் பண்டிகையில் பங்கேற்கவும் உரிமை உண்டு. கச்சத்தீவில் மீன் பிடி உரிமை இருப்பதாகத் தெரியவில்லை.
(தீக்கதிர், 18.7.2009, பக்கம் 3)

தோழர் டி.கே. ரெங்கராஜன் அவர்களின் கேள்விக்கு, இந்திய வெளியுறவுத் துறை இன்னொரு இணை அமைச்சர் சசிதருர் அளித்த பதில் என்று தினமணியில் (18.7.2009, பக்கம் 3) வெளிவந்துள்ள செய்தி வருமாறு:

இந்தியா  இலங்கை இடையே ஏற்பட்ட ஒப்பந்தப்படி கச்சத்தீவில் ஓய்வெடுக்கவும், மீன் வலைகளை உலர்த்தவும், புனித அந்தோணியார் திருவிழாவில் கலந்துகொள்ளவும் உரிமை உண்டு. இந்த உரிமையின்படி கச்சத்தீவை சுற்றியுள்ள பகுதிகளில் மீன் பிடிக்கக் கூடாது என்று அர்த்தமல்ல. அங்கு மீன் பிடிக்க இந்திய மீனவர்களுக்கு உரிமையுண்டு!

வினா தொடுத்தவர் ஒருவரே  பதில் அளித்த வெளியுறவுத் துறை இரு இணை அமைச்சர்களோ முரண்பாடான பதிலைச் சொல்லியிருக்கிறார்கள்.

நமது வெளியுறவுத் துறை இந்தத் தன்மையில் தான் இருக்கிறது என்று அர்த்தமா? தமிழர்களின் இந்த மிக முக்கியமான உயிர்ப்பிரச்சினையில், உயிர்களைப் பலிவாங்கும் பிரச்சினையில் காட்டும் அக்கறை இவ்வளவுதான் என்று பொருளா? அல்லது வெளியுறவுத் துறை இணை அமைச்சர்களாக உள்ளவர்கள் இந்தப் பிரச்சினைபற்றி தெரிந்து வைத்துள்ள தகவல்கள் போதுமானதல்ல என்று எடுத்துக்கொள்ளலாமா?

கச்சத்தீவு தொடர்பான இந்தியா இலங்கை ஒப்பந்த சரத்திலேயே தெளிவாக இல்லை என்று கூறலாமா?
ஒரே கேள்விக்கு ஒரே துறையைச் சேர்ந்த இரு அமைச்சர்கள் கூறும் தகவல்கள் முரண்பாடாக இருக்கின்றன என்பதை எப்படி எடுத்துக்கொள்வது?

கச்சத்தீவை மீட்பதைத் தவிர இதற்கு நிரந்தரத் தீர்வு கிடையாது. திராவிடர் கழகத் தலைவர் மானமிகு கி. வீரமணி அவர்கள் இது தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடுத்த வழக்கினை (1997) உயர்நீதிமன்றம் விரைவில் விசாரிக்குமா? விடிவு கிடைக்குமா?

19.7.2009 (விடுதலை ஒற்றைப்பத்தி - 2)



நூல் : விடுதலை ஒற்றைப்பத்தி - 2
ஆசிரியர் : கலி.பூங்குன்றன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

அயோத்திதாசப் பண்டிதர், இரட்டைமலை சீனிவாசன் ஆகியோரைத் திராவிடர் கழகம் தவிர்க்கிறதா?

திராவிடர் கழகத்தை, அதன் நன்மதிப்பை, அதன் பிறப்பொக்கும் கோட்பாட்டை, சமூக நீதி சாதனைகளை மறைக்க இன எதிரிகள் தொடர்ந்து முயற்சிக்கின்றனர். அதற்...