கேள்வி: 14.10.2009 துக்ளக் இதழில் பழ.
கருப்பையா குறிப்பிட்டுள்ளதைப் போன்று மனுஸ்ம்ருதியில் பார்ப்பனருக்கும், பார்ப்பனர் அல்லாதவருக்கும் குற்றங்களுக்கு தண்டனை வழங்குவதில் பாரபட்சம் காட்டப்பட்டுள்ளதா? இதுபற்றித் தங்கள் கருத்து?
பதில்: என் கருத்தா? இதில் கருத்து என்ன வேண்டியிருக்கிறது? மனுஸ்ம்ருதி சொல்கிறது: அறிந்து திருட்டுக் குற்றத்தைச் செய்கிற சூத்திரனுக்கு, வழக்கமான தண்டனையைவிட எட்டு மடங்கு அதிகமான தண்டனை விதிக்கவேண்டும்; வைச்யனுக்கு பதினாறு மடங்கு; க்ஷத்ரியனுக்கு முப்பத்திரண்டு மடங்கு; குற்றத்தின் தன்மையை அறிந்தவன் என்பதால், பிராமணனுக்கு அறுபத்தி நான்கு மடங்கு தண்டனை அல்லது நூறு மடங்கு அல்லது நூற்றி இருபத்தெட்டு மடங்கு தண்டனை விதிக்க வேண்டும்.
இது பிராமணர்களுக்குக் காட்டப்படுகிற பாரபட்சமா? பழ.கருப்பையா கூறியுள்ளது தவறு.
(துக்ளக், 4.11.2009).
இதன்மூலம் திருவாளர் சோ ராமசாமி என்ன கூற வருகிறார்?
பார்ப்பனர்களுக்கு மனு சலுகைகளைக் காட்டவில்லை; சொல்லப்போனால் பாதகமாக நடந்துகொண்டார் என்றுதானே கூற வருகிறார்?
சோ எதைச் சொன்னாலும் அதற்கான ஆதாரத்தை
(மனுதர்மம் அத்தியாயம் சுலோகம் முதலியவற்றை) கூறுவது கிடையாது. மொட்டை தாதன் குட்டையில் விழுந்தான் என்ற போக்கில்தான் அவர் எழுதுவது வழக்கமாகும்.
மனுதர்மம்
பார்ப்பனர்களுக்குச் சாதகமானது பார்ப்பனர்களை உயர்வாகவும், சூத்திரர்களை இழிவாகவும் கூறக்கூடியது என்பதற்கு சோ பாணியில் கூறாமல் ஆதாரத்துடன் அத்தியாயம், சுலோகம் எண்ணிக்கை உள்பட இதோ ஆதாரத்துடன் கூறுகிறோம்.
அந்தப் பிர்மா ஆனவர் இந்த உலகத்தைக் காப்பாற்றுவதற்காக தன்முகம், தோள்,
தொடை,
பாதம் இவைகளினின்று உண்டான பிராமண, க்ஷத்திரிய, வைசிய, சூத்திர வருணத்தார்க்கு இம்மைக்கும், மறுமைக்கும் உரிய உபயோகமான கருமங்களைத் தனித்தனியாகப் பகுத்தார் (அத்தியாயம் 1, சுலோகம் 87).
பிராமணன் முதல் வருணத்தான் ஆனதாலும், பிரம்மாவின் உயர்ந்த இடத்தில் முகத்தில் பிறந்ததனாலும் உலகத்தில் உண்டாயிருக்கிற சகல வருணத்தாருடைய பொருள்களையும் தானம் வாங்க அவனே பிரபுவாகிறான் (அத்தியாயம் 1, சுலோகம் 100).
சூத்திரன் சுவர்க்கத்திற்காவது, ஜீவனத்துக்காவது அல்லது இரண்டிற்குமாவது பிராமணனையே தொழவேண்டும். இவன் பிராமணனை அண்டிய சூத்திரன் என்று ஒருவனுக்குப் பெயர் வந்தால் அதே அவனுக்குப் பாக்கியம். (அத்தியாயம் 10, சுலோகம் 122).
பிராமணனுக்குத் தலையை முண்டிதம் (மொட்டை அடிப்பது) கொலைத் தண்டனையாகும். மற்ற வருணத்தானுக்குக் கொலை தண்டனையுண்டு (அத்தியாயம் 8, சுலோகம் 379).
சூத்திரன் உயிரும், பார்ப்பான் மயிரும் சமம் என்பதை உணர்க!
இந்த ஒரு குலத்துக்கொரு நீதி கூறும் மனுதர்மத்தைத்தான் தன் மொட்டைத் தலையில் தூக்கி வைத்துக் கூத்தாடுகிறார் திருவாளர் சோ!
பார்ப்பான் யோக்கியதைக்கும், புளுகுகளுக்கும் வேறு என்ன சான்று தேவை?
07.11.2009 (விடுதலை ஒற்றைப்பத்தி - 2)
நூல் : விடுதலை ஒற்றைப்பத்தி - 2,
ஆசிரியர் : கலி.பூங்குன்றன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக