கடவுளைப் பரப்பினால்தான் மக்கள் நினைப்பார்கள். அதற்குத் தக்க ஏற்பாடுகளையும் நிறுவனம் வைத்துச் செய்தும் வருகிறார்கள்! இதன்மூலம் கடவுளுக்குச் சர்வ சக்தி உண்டு என்பதை நம்பிக்கையாளர்களே மறுக்கிறார்கள் என்பது தெளிவு
இன்னும் சொல்லப்போனால், இது ஒரு தன்னிலை விளக்கம்கூட!
அய்யப்பன் என்றால் நடிகர் எம்.என்.நம்பியார் நினைவுக்கு வருவார் அவருக்கு இதே வேளைதான். அதுவும் மலையாளியல்லவா
அந்தக் கலாச்சாரம் வேறு. அதனால் தங்கள் மாநிலக் கடவுளைத் தமிழர்களின் முதுகின்மீது ஏற்றுவதில் கவனம் செலுத்துகிறார்.
அவர் ஒரு வேண்டுகோள் கடிதத்தை ஏடுகளுக்கெல்லாம் அனுப்பியுள்ளார். அய்யப்பன் பக்தியை மக்களிடம் கொண்டு செல்லுவதற்கு மாநாடுகளை நடத்தி வருகிறார்களாம். டிசம்பர் 16 ஆம் தேதி மாநாடு குறித்து அவர் கையொப்பமிட்டு அனுப்பியுள்ளார். அம்மாநாட்டுக்குச் செய்தியாளர்களை அனுப்பக் கோரியுள்ளார்.
விவரம் தெரியாமல் அத்தகைய கடிதம் ஒன்று விடுதலைக்கும் வந்துள்ளது. வரட்டும், நல்லதுதான்.
மாநாடு நடத்தித்தான் கடவுள் சமாச்சாரங்களை மக்கள் மனதில் பதிய வைக்க வேண்டியுள்ளது. இந்த விசயத்தில் அரசியல்வாதிகள் தோற்றுப் போகவேண்டும் போலும்!
கடவுளை மற,
மனிதனை நினை என்ற தந்தை பெரியாரின் கருத்துதான் நினைவிற்கு வருகிறது. கடவுளைப்பற்றிப் பிரச்சாரம் செய்ய மனிதர்களின் துணையை நாடியிருக்கிறாரே குருசாமியான நடிகர் நம்பியார். அப்படியென்றால், தந்தை பெரியாரின் கணிப்பு மிகவும் சரியானதுதானே!
இதில் ஒரு நகைச்சுவை ததும்புகிறது. கடிதத்தின் தொடக்கத்தில் தாங்களும் தங்கள் குடும்பமும் நலமாக இருக்க சபரிமலை சாஸ்தாவை பிரார்த்திருக்கின்றேன் என்று எழுதியுள்ளார்.
கடிதத்தின் முடிவில் என்ன எழுதியிருக்கிறார்?
உடல்நலக் குறைவு காரணமாக என்னால் நேரில் வர இயலாததால், இக்கடிதத்தை நான் நேரில் வந்து அழைத்ததாகவே பாவித்து தாங்கள் அனைவரும் இம்மாநாட்டில் கலந்துகொள்ள அன்புடன் அழைக்கின்றேன் என்று கடிதத்தை முடித்துக் கையொப்பம் போட்டுள்ளார்.
மிகவும் சரி...
மற்றவர்களின் குடும்பம் நலமாக இருக்க சபரிமலை சாஸ்தாவைப் பிரார்த்திப்பது ஒருபுறம் இருக்கட்டும்; அப்படி எழுதுகிறவர் உடல்நலக் குறைவாக இருப்பதாகச் சொல்லித்தானே கடிதத்தை முடிக்கிறார். அந்தச் சபரிமலை சாஸ்தா
இந்தக் குருசாமியாகிய எம்.என்.
நம்பியாரை உடல்நலக் குறைவாகவே வைத்துள்ளாரே ஏன்?
வருடா வருடம் பயபக்தியோடு சபரிமலைக்குச் செல்லுவதை வழக்கமாகக் கொண்டு இருப்பவர்களுக்கே சபரிமலை சாஸ்தாவின் சக்தி பயனளிக்கவில்லை என்கிறபோது, மற்றவர்களுக்காக அவர் பிரார்த்தனை செய்வது அறிவு நாணயம்தானா?
பக்திமான்களே, கொஞ்சம் புத்தியைச் செலவழிக்கக் கூடாதா?
20.12.2005 (விடுதலை ஒற்றைப்பத்தி - 2)
நூல் : விடுதலை ஒற்றைப்பத்தி - 2,
ஆசிரியர் : கலி.பூங்குன்றன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக