தமிழர் வேறு,
ஆரியர் வேறு
தமிழர்கள் ஆரியரை, நகைப்புக்குரிய நடமாடும் உருவங்களாகக் கருதிய காலம். ஆரிய இனம் வேறு என்ற எண்ணம், மங்காதிருந்த காலம், ஆரியத்தைக் கேலிக்கூத்தாகக் கருதிய காலம்! இன்றோ, ஆரியரைப்போன்ற புத்திக்கூர்மை, ஆசார அனுஷ்டானம், நேம நிஷ்டை, பூஜை புனஸ்காரம், நடையுடை பாவனை இருப்பதே, தமிழருக்குச் சீலத்தையும், சிலாக்கியத்தையுந் தரும் என்ற தவறான கருத்துத் தழைத்துக் கிடக்கிறது! காலம் முளைக்கச் செய்த இந்தக் கள்ளி படர்ந்திருப்பதாலேயே, நாச நச்சரவுகள் இங்கு நடமாடித் தமிழர் சமுதாயத்தைத் தீண்டித் தீய்த்து வருகின்றன!
ஆரியக் கலாச்சாரம் வேறு, திராவிடக் கலாச்சாரம் வேறு என்பதுபற்றி, ஆராய்ச்சியாளர்கள் தெளிவாகவே கூறியுள்ளனர். ஜெர்மன் ஆராய்ச்சியாளர்களே, முதலில்ஆரிய நாகரிகம், மொழி, கலை ஆகியவற்றினை வானளாவப் புகழ்ந்தனர். மாக்ஸ் முல்லர் எனும் ஜெர்மானியர், இப்பணியிலே ஈடுபட்டபோது, இங்கு அக்ரகாரம் ஆனந்தக் கூத்தாடிற்று! ``வேதம், ஸ்மிருதி என்பவைகளுக்கு மேனாட்டார் எவ்வளவு மதிப்பு தருகின்றனர் பாரீர்! எமது புகழ் எங்கும் பரவிடக்கேளீர்!! என்று பேசினர், பூரித்தனர். ஆபி டியூபா போல, ஆரிய இனத்தின் இயல்பினைக் கடிந்து கூறாமல், புகழ்ந்து பேசிய ஜெர்மன் ஆராய்ச்சியாளர்களின் புல்லறிவினைப் பொசுக்கப் புதிய ஆராய்ச்சியாளர் தோன்றலாயினர். இந்தியாவிலேயே முதன்முதல் நாகரிகத்தைப் புகுத்தியவர்கள் ஆரியர்தான் என்ற பொய்யுரை ஒழியக் காலம் பிடித்தது. ஆரியத்தின் துணையின்றி, மிகப் பழங்காலந் தொட்டு இங்கே வளமான ஒரு நாகரிகம் ஓங்கியிருந்த உண்மையை உலகு உணர நாட்களாயின. பண்டைத் தமிழரின் வாழ்வு பாழ்பட்டதும், வீரம் சரிந்ததும் கலை கறையானதும், நிலை குலைந்ததும் ஆரியத்தின் கூட்டுறவால் நேரிட்ட அவதிதான் எனும் உண்மையை, உலகு முதலிலே தெரிந்து கொள்ளவில்லை.
இந்தியாவை ஆரியவர்த்த மென்று கூறியும், இந்திய நாகரிகத்தையே ஆரிய நாகரிகம் என்று மொழிந்தும், உலகு கிடந்தது. பேராசிரியர் சர். ஜான்மார்ஷல் திராவிடப் பண்புகளை ஆராய்ந்தறிந்து கூறியபோதுதான் மேனாட்டாரின் கண்களிலிருந்த கறையும் கருத்திலிருந்த மாசும் நீங்கிற்று. பிறகு ஆரியம், திராவிட நாகரிகத்தை எவ்வளவு பாழ்படுத்திற்று என்ற ஆராய்ச்சி வரலாயிற்று. இயற்கை இன்பத்தை நுகர்ந்து, வீரத்தை வணங்கி, அறத்தை ஓம்பி வாழ்ந்த திராவிடரிடையே, கட்டுக் கதைகளைப் புகுத்தி கோழைத்தனத்தை வளர்த்தவர் ஆரியரே என்பதும், ஆரியக் கோட்பாடுகள் புகாமுன்னம் திராவிடர் அறிவுத் துறையிலேயே ஆர்வங் கொண்டிருந்தார் களேயல்லாமல் கண்ணுக்குப் புலனாகாததும், கருத்துக்கு எட்டாததும், வாதத்திற்குக் கட்டுப்படாததும், பிரத்யட்சம் பிரமாணத்துக்கு ஒத்து வராததுமான கொள்கைகளிலே மூழ்கிக்கிடக்கவில்லை என்பதும், பிறகு ஆராய்ச்சிக்காரர்களால் விளக்கப்பட்டது. ஆனால், இவையாவும் பிரேத விசாரணையாகக் கருதப்பட்டதேயல்லாமல், வீழ்ச்சியுற்ற இனத்திற்குத் திருப்பள்ளி எழுச்சியாக உபயோகிக்கப் படவில்லை. சாதாரணக் கல்வியும் பொது அறிவும் அதிகம் பரவாத திராவிட சமுதாயத்திடையே, புதிய ஆராய்ச்சி முடிவுகள் பரவ வழி இல்லாமற் போய்விட்டது. ஆகவேதான், ஆரியம் அழிவைத் தருவது. திராவிடம் தீரரை வளர்ப்பது என்ற நற்கருத்து இன்றும் நம் இனத்தவரிடையே புகவில்லை.
கல்வி கேள்விகளிற் சிறந்தவர்களும் ஆராய்ச்சி வசதி நிறைந்தவர்களுமாவது இந்தத் துறையிலே சற்று உழைப்பார்களானால், திராவிட இனம் உய்ய வழி உண்டு. இல்லையேல் உலகிலே பல இனங்கள் பாழ்பட்டு மறைந்து போனது போல, ஓர் காலத்திலே உலகம் புகழ் வாய்ந்த திராவிட இனமும் அழிந்தேதான் போகும்! எந்த இனம் தனது பண்பை இழந்து, பண்டைய பெருமையை மறந்து எதிரியிடம் அடைக்கலம் புகுந்துவிடுகிறதோ, அந்த இனம் அழிவுக் குழிக்கு அவசர அவசரமாக நடக்கிறது என்றுதான் பொருள்.
நூல் : ஆரியமாயை
ஆசிரியர் “ அறிஞர் அண்ணா
நூல் : ஆரியமாயை
ஆசிரியர் “ அறிஞர் அண்ணா
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக