ஞாயிறு, 16 ஜூலை, 2017

தங்கத் துடைப்பம்!


ஒரிசா மாநிலம் பூரியில் உள்ள ஜெகந்நாதர் ஆலயம் பற்றி ஒரு செய்தி. அக்கோயில் மூலவருக்கான ரதத்தை  மன்னர் பரம்பரையில் வந்த ஒருவர் (அரசர்) தூய்மைப்படுத்தினாராம்!

எதைக் கொண்டு தூய்மைப் படுத்தினாராம், துடைப்பத்தைக் கொண்டுதுடைப்பம் என்றால் சாதாரணமாகக் கூறும் விளக்குமாறு அல்ல  அது தங்கத்தினாலான துடைப்பமாம்.

தங்க முலாம் பூசிய அந்தப் பல்லக்கை தங்கத் துடைப்பம் கொண்டு தூய்மைப்படுத்தும் முதல் சேவகர் அந்த அரசப் பரம்பரையில் வந்தவராம்.

துடைப்பம் என்றால் துடைப்பம்தான்! அது தென்னை மட்டை குச்சிகளால் செய்யப்பட்டு இருந்தாலும் சரி, தங்கத்தினால் செய்யப்பட்டு இருந்தாலும் சரி, துடைப்பம், துடைப்பம்தானே?

எடுத்துக்காட்டாக தங்க முலாம் பூசப்பட்ட செருப்பினால் ஒருவனை அடித்தால், அடிபட்டாலும் தங்கத்தினாலான செருப்பால்தானே அடிபட்டோம் என்று மகிழ்வானா?

மதத்தின் பெயரால் எந்த கிறுக்குத் தனத்தைச் செய்தாலும், அதற்கொரு வெண்டைக்காய், விளக்கெண்ணெய் விளக்கம் சொல்லித் தப்பித்துக் கொள்வதைக் கவனிக்க வேண்டும்.

ஸ்ரீஜெகந்நாதருக்கு சேவை செய்வது கிடைத்ததற்கரிய பாக்கியம் என்கிறாராம் அரசர். `தினமணி இவ்வாறு கூறுகிறது. இந்தச் சம்பிரதாய நிகழ்ச்சி சமூக சமத்துவத்தின் அடையாளமாம். ஆண்டவன் முன் சேவகனும் ஒன்றே அரசனும் ஒன்றே என்பதை இது காட்டுகிறதாம்.

என்ன பம்மாத்து? கடவுள் முன் எல்லோரும் ஒன்றுதான் என்று கூற வருகிறார்களா? அப்படி என்றால் அரச குடும்பத்தைச் சேர்ந்த ஒருவர் ஏன் கடவுள் பல்லக்கை தங்கத்தினாலான துடைப்பத்தால் சுத்தம் செய்ய ஏற்பாடு செய்ய வேண்டும்?

பரம்பரைப் பரம்பரையாக சேவகம் செய்து கிடைக்கும் ஒரு நகர சுத்தித் தொழிலாளரின் கையில் அந்தத் தங்கத் துடைப்பத்தைக் கொடுத்து சுத்தம் செய்யச் சொல்ல வேண்டியதுதானே!

கோபுரதரிசனம் பஞ்சமர்களுக்கு  (தாழ்த்தப்பட்டோருக்கு);  மூல விக்ரகத்திலிருந்து இத்தனை இத்தனை அடி தூரத்தில் இன்னின்ன ஜாதியார் நிற்க வேண்டும் என்று விதி வகுக்கும் ஒரு கூட்டம், ஆண்டவன் முன் அரசனும், சேவகனும் ஒன்றே என்று நயவஞ்சகமாகச் சொல்லுவதை நம்ப வேண்டுமா?

5.7.2008(விடுதலை ஒற்றைப்பத்தி - 2) 

நூல் : விடுதலை ஒற்றைப்பத்தி - 2

ஆசிரியர் : கலி.பூங்குன்றன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

அயோத்திதாசப் பண்டிதர், இரட்டைமலை சீனிவாசன் ஆகியோரைத் திராவிடர் கழகம் தவிர்க்கிறதா?

திராவிடர் கழகத்தை, அதன் நன்மதிப்பை, அதன் பிறப்பொக்கும் கோட்பாட்டை, சமூக நீதி சாதனைகளை மறைக்க இன எதிரிகள் தொடர்ந்து முயற்சிக்கின்றனர். அதற்...