பிகார் மாநிலம் பெகுசாராய் மாவட்டத்தில் பச்வாரா என்ற கிராமத்தைச் சேர்ந்தவர் முகமது பக்ருல் இஸ்லாம் என்பவர். இந்தக் கிராமம் முஸ்லிம்கள் அதிகம் குடியிருக்கும் பகுதியாகும்.
இத்தகைய ஊரில் வாழும் இந்துக்கள் சிவன் கோயில் ஒன்றைக் கட்ட விரும்பினார்கள். இதற்காக நிலம் கொடுத்த பெரிய மனதுக்காரர்தான் முகம்மது பக்ருல்.
இந்துக்கள் கோயில் கட்டுவதற்கு நீ ஏன் நிலம் கொடுக்கவேண்டும்? என்று முஸ்லிம்களும் கேட்கவில்லை.
இந்துக்களாகிய நாம் சிவன் கோயில் கட்டுவதற்கு எதற்காக முஸ்லிம் ஒருவரிடம் நிலம் கேட்கவேண்டும் என்று அந்த ஊரைச் சேர்ந்த எந்த இந்துவும் போர்க்கொடி தூக்கவில்லை.
கடவுள் இருக்கிறதா? கோயில் தேவையா? என்பது வேறு பிரச்சினை.
கடவுள் நம்பிக்கை உள்ளவர்களிடத்தில் மதத்தின் காரணமாக ஏற்படும் மாச்சரியம்
அதனால் ஏற்படும் கலவரம். உயிரிழப்பு, சிறைவாசம் என்ற நடைமுறைக் கண்ணோட்டத்தோடு இந்தப் பிரச்சினையைப் பார்த்தால் பச்வாரா கிராம மக்களைப் பாராட்டத்தானே வேண்டும்? அதுவும் மதக் கலவரத்தைத் தூண்டுவதற்காகவே சதா கத்தியைத் தீட்டிக் கொண்டு அலையும் சங் பரிவார்க் கும்பலின் வேட்டைக்காடான வட மாநிலம் ஒன்றில் இந்த அணுகுமுறை என்கிறபோது தூரத்தில் நாம் இருந்தாலும் ஒரு சபாஷ் போடத்தானே வேண்டும் மனிதநேயத்தையும், சமத்துவத்தையும் விரும்புகின்ற நாம்.
இந்து, முசுலிம் என்பது இரு வேறுபட்ட மதங்கள் அவை தோற்றுவிக்கப்பட்டதும் வெவ்வேறு நாடுகளில்
ஆனால், ஒரே இந்து மதத்தில் உள்ளவர்களிடையே இங்கு என்ன வாழ்கிறது?
சைவ ஸ்தல கோயில்களின் திருப்பணிகளுக்கு உதவி செய்வீர்களா என்ற ஒரு கேள்வியை கல்கி இதழ் (11.4.1982) அகோபில மடத்து ஜீயரிடம் கேட்டது. அதற்கு ஜீயர் என்ன பதில் சொன்னார்? நான் சிவன் கோயிலுக்குச் செல்லமாட்டேன். ஏன்னு கேட்டா... ஸ்ரீமத் நாராயணன்தான் எல்லா தெய்வங்களுக்கும் மேற்பட்ட தெய்வம். என்னோட சித்தாந்தம் சிவனுக்கு நாராயணன் பாட்டன். பிரம்மா, சிவன் எல்லாம் தபஸ்பண்ணி தெய்வத் தன்மைக்கு உயர்ந்தவர்கள். ஆனால், நாராயணன் எப்பொழுதும் உள்ளவர். பாக்கிப் பேருக்குப் பலன் கொடுக்கிறவர். அவரை வழிபடற நாங்கள் வேறு தெய்வத்தை வழிபடமாட்டோம். அப்படி வணங்கினால் புத்தி கெட்டுப் போகும். அதனால் சிவன் கோயில் திருப்பணிக்கு பணம் இருந்தாலும் தரமாட்டோம் என்று ஜீயர் கூறினாரே.
சிவன் கோயில் கட்ட முஸ்லிம்கள் நிலம் தரும் நிலை எங்கே? ஒரே இந்து மதத்தில் வைணவத் தலைவர் ஜீயர், சிவன் கோயில் திருப்பணிக்குப் பண உதவி செய்யமாட்டோம் என்று கறாராகக் கூறும் நிலைமை எங்கே?
கேட்டால் இதுதான் அர்த்தமுள்ள இந்து மதம் என்று கதைப்பார்களோ!
26.12.2009 (விடுதலை ஒற்றைப்பத்தி -
2)
நூல் : விடுதலை ஒற்றைப்பத்தி - 2,
ஆசிரியர் : கலி.பூங்குன்றன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக