ஞாயிறு, 17 டிசம்பர், 2017

கணக்கு வழக்கு எங்கே ? - இராம. சுப்பிரமணியன்



உலகுக்கெல்லாம் கணக்கு வழக்கு உண்மைகளை-அடிப்படைகளை வகுத்துத் தந்த தமிழன், தான் மட்டும் அவற்றினை உரியவகையில் வைத்துக் கொண்டானில்லை; போற்றிப் பாதுகாத்தானில்லை. அதனால், கலாச்சாரம் எனும் பெயரால் தமிழகத்துப் புகுந்த கண்மூடிப் பழக்க வழக்கங்களுக்கு அவனது இயற்கையோடியைந்த-தூய பண்பாடும், ஒருநிலையின்றி முக்கல், கனைத்தல் முதலாய நான்கு நிலைகளான் நடந்துவந்த ஒருமொழிக்கு அவனது தூய, எளிய, இனிய மொழியும் இரையாகி, அதனதன் வண்ணமாயின. இன்றோ, தூய தமிழ்ப் பண்பாடு யாது? தூய தமிழ்மொழி யாது? எனத் துணியக் கூடாநிலை உருவாகி விட்டது.

தன்னிடம் தமிழனுக்குக் கணக்கு வழக்கு இல்லாமலில்லை. ஒருகாலத்திலிருந்தன; இன்றும் இருக்கின்றன. ஆனால், கரந்துறைகின்றன.
உலக அரங்கினுள் தமிழ்மொழி ஈடிணையற்ற ஒன்றெனின் அது மிகையன்று. அம்மொழிக்குள்ள இனிமையும், எளிமையும் வேறெம்மொழிக்குமில்லை. அவ்விரண்டனுக்கும் காரணம் தமிழ் ஒலியமைப்பும், மொழி (சொல்) அமைப்புமேயாகும்.

தமிழெழுத்துக்கள் அனைத்தும் பெரும்பாலும் மிடறு, பல், இதழ், நா, மூக்கு எனும் அய்ந்துறுப்புகளையே இடமாகக் கொண்டு இயல்பாகப் பிறக்கின்றன. எவ்வெழுத்திற்கும் வலிய முயற்சி தேவைப்படுவதில்லை. தமிழெழுத்துக்களோடு பிறமொழியெழுத்துக்களை ஒப்பிட்டொலித்துக் காண்போர்க்கு இது நன்கு புலனாகும்.

எழுத்து என்றால் எழச்செய்வது என்பது பொருள். எழு-வேர்ச்சொல், து-பிறவினை இறுதி (விகுதி), விழுத்து-விழச்செய் என்பதுபோல, எழுப்ப எழுவது ஒலி. ஆக, எழுத்தென்றால் ஒலி என்பது பொருளாயிற்று. எழுதப்படுவது எழுத்தெனக் கூறுதல் பொருந்துவதன்று. எழுத்தாகிய ஒலிகள் தமிழ்க்கண் முப்பத்தொன்று மட்டுமே உள்ளன. இம்முப்பத்தோரொலிக்குள் தமிழ்மொழி இயங்குகிறது.

உயிர் மெய்யென்பது தனியொலியன்று. உயிருமெய்யும் இணைந்த ஈரொலி; அதனைத் தொல்காப்பியர் ஓரெழுத்தாகச் சுட்டவில்லை. பவணந்தியார் ஓரெழுத்தாகச் சுட்டினாலும், குற்றியலுகரங்களையும் நிலைமொழி, வருமொழிகளின் ஈறு, முதல்களையும் சுட்டும்போது அதனை ஈரொலியாகவே காண்கின்றார்.

எடுத்துக்காட்டு :
வரகு - உயிர்த்தொடர்
நாடு - நெடிற்றொடர்
ஈண்டு உயிர்மெய்த் தொடர் என்று கூறாது ஈற்றயலெழுத்துக்களை மெய்யும் உயிருமாய்ப் பிரித்து, ஈற்றயல் நின்ற எழுத்தாய உயிர்மேல் வைத்து, உயிர்தொடர், நெடிற்றொடர் எனச் சுட்டுகிறார்.

யானை + கால் = யானைக்கால்
உயிர் மெய்முன் உயிர்மெய் வந்தது எனக் கொள்ளாது, உயிர்முன் மெய்வந்தது எனக் கொள்ளுமாறு அவர்.,

“நின்ற நெறி யேயுயிர் மெய்முதல் ஈறே”

என விதி கூறுகின்றார். இதனால் உயிர் மெய்யெழுத்து ஓரொலியன்று; ஈரொலியேயென்பது பவணந்தியார் உள்ளக்கிடக்கை என்பதனை அறிகிறோம்.
உயிரெழுத்து-12; மெய்யெழுத்து-18; ஆய்தம்-1; உயிர்மெய்யெழுத்து-216; ஆக 247 எழுத்தெனச் சின்னஞ்சிறார் உள்ளத்தில் தவறான கருத்தினைப் புகுத்துதல் ஏற்றதன்று.

ஆங்கிலமொழி 26 எழுத்துக்களாலாய மொழி எனவும், உலக மொழிகளுள் அதுவே குறைந்த எழுத்துக்களாலாய மொழியெனவும் கூறுதலுண்டு; இஃது உண்மைக்குப் புறம்பாயது. ஆங்கில மொழி வரி வடிவால் 26 எழுத்துக்களையுடையதே தவிர ஒலி வடிவால் நூற்றுக்கு மேற்பட்ட ஒலிகளையுடையது என்பதனை அதன் ஒலி வேறுபாடுகளின் நுட்பங்களை நுனித்துணர்வார் பலரும் உணர்வர்.

(A),, ஜி (G) இவ்வீரெழுத்துகளை எடுத்துக் கொண்டாலே ஒவ்வொன்றும் சொற்களில் இடம்பெறும்போது எத்துணை ஒலிகளாக ஒலிக்கின்றன என்பது புலனாகும்.

தமிழெழுத்துக்களின் நிலை அத்தகையதன்று. தனித்து ஒலிக்கும்பொழுதும், மொழியிடை ஒலிக்கும் பொழுதும் அதன் நிலை வேறுபடுவதில்லை; பல்வேறு நிலையாய் நின்று, பல்வேறு பொருளைத் தருவதில்லை.
தமிழ்மொழியின் எழுத்துகள் முப்பத்தொன்றே உயிர்-12, மெய்-18, ஆய்தம்-1.
தமிழ்க்கண் நாலெழுத்துகளுக்கு மேற்பட்ட மொழியே (சொல்லே) இல்லை. சிலருக்கு இது வியப்பாகத் தோன்றலாம்; இஃது உண்மை.
தமிழ்ச் சொற்களை ஆய்தலைவிட அவற்றுக்கு அடிப்படையாய அசைகளை ஆய்ந்தாலே அதன் உண்மை புலனாகும்.
நேர், நிரை, நேர்பு, நிரைபு இவை தொல்காப்பியர் சுட்டும் அசை நிலைகள். தமிழ்ச் சொற்கள் அனைத்தும் இவ்வசை நிலைகளின் கண் அடங்கிச் செய்யுளாகவும், உரைநடையாகவும் வெளிவருகின்றன.
சான்றுக்கு உடலுறுப்புகளை எடுத்துக்கொண்டாலும், ஒரு மரத்தின் உறுப்புகளை எடுத்துக் கொண்டாலும் அவை இந்நான்கசைகளின் கண் அடங்கி நிற்றலைக் காணலாம்.
உடல் - நிரை
நா - நேர் (நாக்கு-நேர்பு)
கால் - நேர்
மார்பு - நேர்பு
கழுத்து, வயிறு - நிரைபு
மரம் - நிரை
வேர், காய் - நேர்
இலை, கனி, கிளை - நிரை
ஏனைய உறுப்புகளையும் பொருத்திக் காண்க.

தமிழ்மொழி அசைகளாகிய இவற்றை நுனித்து நோக்குவார்க்கு, தமிழ்மொழி அமைப்பினை இவைகொண்டு காட்டுதல் நன்கு புலனாகும். அஃதாவது நான்கெழுத்துகளுக்கு மேற்பட்ட தமிழ்ச் சொல் இல்லை என்பது புலனாகும். நான்கெழுத்துச் சொல் ஆயிரத்திற்கு ஒன்று கிடைத்தலே அரிது.

நேர்-ஓரெழுத்து; ஒற்றினைக் கணக்கிட்டால் ஈரெழுத்து.

நிரை - ஈரெழுத்து
நேர்பு - ஈரெழுத்து; ஒற்றினைக் கணக்கிட்டால் மூவெழுத்து
நிரைபு - மூவெழுத்து (கருத்து போன்றவை நான்கெழுத்து)
“தாமரை புரையும் காமர் சேவடி”
தாமரை - மூவெழுத்து
புரையும் - (புரை+உம்) ஈரெழுத்து; ஈரெழுத்து
காமர் - மூவெழுத்து
சேவடி - மூவெழுத்து (செம்மை+அடி)
எனப் பிரிப்பினும் மூவெழுத்து ஈரெழுத்தாய் நிற்றல் காண்க.
இத்தகைய சொற்களைத்தன்பால் கொண்ட ‘தமிழ்’ என்பதும் மூவெழுத்தாலாயதே.

இத்தமிழ்க்கண் தோன்றிய நூல்களைத் தொகுத்துச் சுட்டும் சொற்கள் எத்துணை எழுத்துக்களால் இருக்க வேண்டும் ? மேற்குறிப்பிட்ட நால்வகை அசை நிலைகளின் கண் அடங்கியல்லவா நிற்றல் வேண்டும்? அஃதல்லவா தமிழ் மரபு ?

சங்ககாலம் முதல் இன்று வரை தமிழ்க்கண் தோன்றிய நூல்களை எத்தொடரால் இன்று சுட்டுகிறோம் ?

“இலக்கிய இலக்கணம்” என்னும் தொடராலல்லவா சுட்டுகிறோம் ?

இலக்கியம், இலக்கணம் இவை இரண்டும் எத்துணை எழுத்துகளானானவை? அவ்வாறெழுத்துகளானானவையல்லவா?

இவைபோல ஆறெழுத்துகளானான ஒரு தமிழ்ச்சொல்லைச் சுட்ட முடியுமா?
அந்தணர் என்பதைச் சுட்டலாம்; அஃது ஒரு சுட்டுச் சொல்; அம்+தண்+அர் எனப்பிரிந்து நின்று அழகிய குளிர்ச்சியையுடையார் எனப் பொருள்தரும் (குளிர்ச்சி-அருள்)

அடுத்து ‘ஒட்டகம்’ என்பதனைச் சுட்டலாம். அஃது இரு சொற் புணர்ச்சி; ஒட்டு+அகம் எனப்பிரிந்து நின்று பொருள்தரும்; அகத்தினுள்ளே நீர்பை ஒன்று ஒட்டி நிற்கும் விலங்கினை அச்சொல் சுட்டுகிறது என்பது நுனித்துணர்வார்க்குப் புலனாகும்.

வேறு ஏதேனும் ஒரு சொல்லினை-ஆறெழுத்துடைய ஒரு சொல்லினை - தமிழ்ச் சொல்லாக யாரேனும் சுட்டமுடியுமா?

பகாப்பதம் ஏழெழுத்து, பகுபதம் ஒன்பதெழுத்தெனப் பவணந்தியார் சுட்டுகிறார், தமிழ்மொழியை வடமொழியாக்கும் பெரும் பணியைத் தலைமைதாங்கிச் செய்தவர்களுள் குறிப்பிடத்தக்க அவர் அவ்வாறு சுட்டாது வேறு எவ்வாறு சுட்டுவார் ?
“பகாப்பக மேழும் பகுபத மொன்பது
மெழுத்தீ றாகத் தொடரு மென்ப” - 130
என்பது அவர் திருவாக்கு.

இந்நூற்பாவுக்குச் சான்று காட்டவந்த நன்னூலுரையாசிரியர்களுள் ஒருவரும் நான்கெழுத்திற்கு மேற்பட்ட தமிழ்ச் சொல்லினைச் சான்று காட்டிலர்.
அணி, அறம், அகலம், அருப்பம், தருப்பணம், உத்திரட்டாதி-பகாப்பதம்.
கூனி, கூனன், குழையன், பொருப்பன், அம்பலவன், அரங்கத்தான், உத்திராடத்தான், உத்திரட்டாதியான்-பகுபதம்.

இவை நன்னூலுக்குப் பேருரை (விருத்தியுரை) எழுதிய சிவஞான முனிவர் காட்டியவை. இவற்றுள் பகாப்பதத்துள் அகலம்வரை தமிழ், பகுபதத்துள் பொருப்பன்வரை தமிழ்.

அகலம் என்பது நான்கெழுத்தாலாயது; அகல்+அம் எனப் பிரித்துக் காணின் மூன்றெழுத்து, ஈரெழுத்தாய் நிற்கும்.
பொருப்பன் என்பது பொருப்பு+அன் எனும் இரு சொற்புணர்ச்சி; பொருப்பு நான்கெழுத்தாலாயது. ஏனைய உரையாசிரியர் சான்றுகளை விரிப்பின் பெருகும்.

பதம் என்பது வடசொல், மொழி, சொல், கிளவி என்பன தமிழ். இம்மூன்றனையும் இன்று பதம், பதம் பார்த்து வருகிறது.
தொல்காப்பியர் ஓரெழுத்தொரு மொழி, ஈரெழுத்தொருமொழி,  தொடர்மொழி எனச் சுட்டுகிறார். ஈண்டுத் தொடர்மொழி என்பது மூவெழுத்து மொழியினையும், நான்கெழுத்து மொழியினையும் சுட்டும்.

“ஓரெழுத் தொருமொழி ஈரெழுத் தொருமொழி
இரண்டிறந் திசைக்கும் தொடர்மொழி உளப்பட
மூன்றே மொழிநிலை தோன்றிய நெறியே”
என்பது தொல்காப்பியர் திருவாக்கு.
ஆ, கா, நா - ஓரெழுத்தொருமொழி
மணி, வரகு, கொற்றன் - ஈரெழுத்தொருமொழி
கணவிரி (அலரி) - நாலெழுத்தொருமொழி
அகத்தியனார் - அய்யெழுத்தொருமொழி
திருச்சிற்றம்பலம் - ஆறெழுத்தொருமொழி
பெரும்பற்றப்புலியூர் - ஏழெழுத்தொருமொழி

இவை உச்சிமேற் புலவர்கொள் நச்சினார்க்கினியர் அந்நூற்பாவிற்குக் காட்டும் சான்றுகள். இவற்றுள் நாலெழுத்தொருமொழிவரை தமிழ் ஏனையவை பகுத்தற்குரியன.

ஆ, மணி, வரகு, கொற்றன் இவை உரையாசிரியர் இளம்பூரணர் காட்டும் சான்றுகள். நான்கெழுத்துச் சொல்லுக்கு மேற்காட்டாமை இவரது தமிழ் மரபை உணர்ந்து உரை எழுதும் திறத்தைக் காட்டுகிறது.

மேற்கண்ட விளக்கங்களால் நான்கெழுத்திற்கு மேம்பட்ட தமிழ்ச்சொல் இல்லை என்பது தெளிவாகப் புலனாகிறது.

இந்நிலையில் இலக்கியமும் இலக்கணமும் எவ்வாறு தமிழ்ச் சொற்களாக இருக்க முடியும்? அவை தமிழ்ச் சொற்கள் அல்லவே அல்ல; வடமொழிச் சொற்கள்.

லக்ஷியம் எனும் வடமொழியின்
தற்பவம் இலக்கியம்.
லக்ஷணம் எனும் வடமொழியின்
தற்பவம் இலக்கணம் ;
(தற்பவம் - தன்னிலிருந்து தோன்றியது)
இவற்றைத் தமிழெனக் கொண்டு மனம் போன போக்கில் விளக்கம் காண்பது ஏற்புடைத்தன்று.

இலக்கணம் எனும் சொல் தொல்காப்பியத்தில் இடம் பெற்றிருப்பதைக் கொண்டு அது தமிழ்ச்சொல் என வாதிடுதல் பொருந்துவதன்று. தொல்காப்பியர் காலத்திற்கு முன்பே வடமொழி மயமாக்கும் பணி தொடங்கப்பட்டதன் விளைவு அது.

அவ்வாறாயின் இலக்கிய இலக்கணம் எனும் தொடருக்கு ஈடாய்த் தமிழ்த் தொடர் ஒன்று இருக்க வேண்டுமல்லவா?

அத்தொடர் யாது ?

“கணக்கு வழக்கு” என்பதே அத்தொடர்
அக்கணக்கு வழக்கு எங்கே? -

அன்னை மொழியின் அருமையை உணராது அயல்மொழிக்கு ஆக்கம் தேடக் கருதிய பண்டைக்கால உரையாசிரியர் சிலரால் அத்தொடர் தன்னிடத்தை இழந்து, பிளவுபட்டுத் தன் பொருளை மட்டும் விடாது, கரந்து நிலவுகிறது.
பதினெண்கீழ்க்கணக்கு, பதினெண்மேற்கணக்கு எனும் தொடர்களின் கண்வரும் கணக்கு என்பதும்,
காணக்காயர் எனும் சொற்கண் நிற்கும் கணக்கு என்பதும்
-“கணக்கினை
முற்றப்பகலும் முனியா(து) இனிதோதிக் கற்றலின்
கேட்டலே நன்று”
எனும் பழமொழிப் பாடல் தொடர்க்கண் வரும் கணக்கு என்பதும்,
“கணக்கறிந்தும் விடுவானோ கண்டாய் என் தோழி” எனும் வள்ளலார் தொடர்க்கண் வரும் கணக்கு என்பதும் எப்பொருளைச் சுட்டுகின்றன?

‘கருதுதல்-கருத்து, கருதுதற்குரிய நூல் எனும் பொருளைச் சுட்டுகின்றன. இலக்கியத்தைச் சுட்டுகிறது என்றால் தெளிவாகப் புரியும். அந்த அளவிற்கு வடமொழி, நம்மைத் தன்மயமாக்கிவிட்டது.

“எண்ணென்ப ஏனை எழுத்தென்ப இவ்விரண்டும்
கண்ணென்ப வாழு முயிர்க்கு”
எனும் திருக்குறட்கண்ணும்
“எண்ணு மெழுத்தும் கண்ணெனத் தகும்”“எண்ணெழுத்திகழேல்”
எனும் முதுமொழிகளின் கண்ணும் இடம் பெற்றுள்ள எண் என்பதும் கணக்கையே உணர்த்தும்.

கண் என்பது கணக்கு என்பதன் வேர்ச்சொல்; கண் - கருது
எண் - எண்ணுதல் - கருதுதல்
கருதுதற்கு-எண்ணுதற்கு-சிந்தித்தற்கு உரியதாய்த் திகழ்வது கணக்கு.
இலக்கியம் எனும் வடமொழி மயத்தால் கணக்கு இவ்வாறு கரந்து மறைந்து திரிந்து வருகிறது; என்னே தமிழ் நிலை ?
ஏவல் கண்ணிய (கண்ணிய - கருதிய)
கண்ணிய மரபு
கண்ணிய நிலைத்தே
கண்படை கண்ணிய கண்படை
கபிலை கண்ணிய வேள்வி
காலம் கண்ணிய ஓம்படை
காமம் கண்ணிய நிலைமைத்து
கண்ணிய புறனே
முதலாய தொடர்களுள் கண்ணிய (கண்) எனும் சொல்லினைக் கருது-கருத்து எனும் பொருளில் தொல்காப்பியர் கையாண்டுள்ளமையைக் காண்க. மேலும் பல இடங்களிலும் இவ்வாறு கையாண்டுள்ளதைப் புலவர் உலகம் நன்கறியும்.
வழக்கு - வழங்கு - வழங்குவது வழக்கு வழங்குதலால் அமையும் மொழியின் அமைதியே வழங்கு, வழக்கு, இயல், மரபு முதலாயவை ஒரு பொருட் சொற்கள்.

இயல் என்பது இலக்கணம் எனும் பொருளில் வழங்கி வந்த சொல்லாகும். எழுத்தியல், பிறப்பியல், புணரியல் முதலாய பல இடங்களில் இடம் பெற்றிருக்கும் இயல் என்பதற்கு இளம்பூரணர். நச்சினார்க்கினியர், பேராசிரியர், சங்கரநமச்சிவாயர் முதலாயவர்களை உள்ளிட்ட உரையாசிரியப் பெருமக்கள் அனைவரும் இலக்கணம் என்றே உரை காண்கின்றனர்.

இயல் (இயல்பு)-மொழியின் இயல்பு-மொழி இயல்பாய் அமைந்த நிலை.

வழங்கியல் மரபு
வழக்கத்தான
வழங்கியல் மாவென் கிளவி
வழக்கு வழிப்பட்டன
முதலாய தொடர்களுள் வழக்கு (வழங்கு) எனும் சொல்லினை இயல் (இலக்கணம்) எனும் பொருளில் தொல்காப்பியர் கையாண்டுள்ளமையைக் காண்க.

இக்கருத்துணராது இயல் என்பதற்கு சிறு பகுதி  (Chapter) என்று பொருள் காண்பது பொருந்துவதன்று. ஆறுமுக நாவலரும் தொல்காப்பிய நூற்பாக்களைக் குறிப்புரையுடன் வெளியிட்ட இளவழகனாரும். அப்பொருள் இருப்பதாகச் சுட்டுதல் ஏற்புடைத்தன்று. அதற்கு ஒத்து எனும் சொல்லொன்று இருப்பதை அவர்கள் அறியாதவர்களல்லர்.

கணக்கு வழக்கு எனும் தொடர் இலக்கிய இலக்கணம் எனும் வடமொழி மயத்தால் கரந்துறைந்து, கரைந்து வருதலைப் போல, படலம், பால் எனும் தமிழ்ச் சொற்கள் அதிகாரம் எனும் வடமொழி மயத்தில் கரைந்துறைகின்றன. இவைபோன்றே எத்துணையோ தூய தமிழ்ச்சொற்கள் தம்மிடத்தை வடமொழிச் சொற்கள் கைப்பற்றிக் கொள்ள, வாழவழியின்றி, ஏங்கிக் கரந்து நின்று தவிக்கின்றன. அவற்றையெல்லாம் வெளிக்கொணர்தல் தமிழ் மக்களின் தலையாய கடமையாகும்.

(நூல்  - சமற்கிருத ஆதிக்கம்)
பதிப்பாசிரியர் : கி.வீரமணி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

அயோத்திதாசப் பண்டிதர், இரட்டைமலை சீனிவாசன் ஆகியோரைத் திராவிடர் கழகம் தவிர்க்கிறதா?

திராவிடர் கழகத்தை, அதன் நன்மதிப்பை, அதன் பிறப்பொக்கும் கோட்பாட்டை, சமூக நீதி சாதனைகளை மறைக்க இன எதிரிகள் தொடர்ந்து முயற்சிக்கின்றனர். அதற்...