இசை, ஆடற்கலைகள்
சமற்கிருத மயமாக்கப்பட்டவை
ப. தண்டபாணி, B.E., M.Sc., (Engg.)
இசை ஆராய்ச்சியாளர்,
தமிழ்நாடு அரசு இசைக் கல்லூரி.
“வடமொழியாளர் தமிழர்களது ஒழுக்க வழக்கங்களை யுணர்ந்து அவற்றிற்கேற்ப
வடமொழியில் நூல்கள் வகுப்பான் புகுந்தனர். அவர்களெல்லாம் ஆன்ம நூற்பயிற்சி
மிக்குடையாராயும் கலையுணர்ச்சி சான்றவராயுமிருந்தமைப்பற்றித் தமிழரது
திவ்விய ஸ்தலங்களுக்குப் புராணங்கள் வகுத்தனர்........ இன்னும் அவர்தம்
புத்திநலங் காட்டித் தமிழரசர்களிடம் அமைச்சர்களெனவும் மேலதிகாரப்
பிரபுக்களெனவும் அமைந்து கொண்டனர்; தமிழரிடத்திருந்த பல அரிய விஷயங்களையும்
மொழிப்பெயர்த்துத் தமிழர் அறியுமுன்னரே அவற்றைத் தாமறிந்தனர் போலவும்
வடமொழியினின்றுமே தமிழிற்கு அவை வந்தன போலவும் காட்டினர்.”(1)) இப்படிக்
கூறியவர் சமற்கிருத மொழியிலே மிகுந்த பற்றுக்கொண்டிருந்த தமிழ்ப் பண்டிதரான
வி.கோ. சூரிய நாராயண சாஸ்திரியார் என்னும் அறிஞர். அவ்வாறுதான்
இசைக்கலையும் ஆடற்கலையும் சமற்கிருதத்திலிருந்து தமிழுக்கு வந்தன என்று
எண்ணும்படியாகிவிட்டது.
ஆனால் உண்மை யாது ?
“The Indus people knew some sort of writing, and
in art they had made considerable progress. The Rigvedic Age is, however,
devoid of any tangible proof of Aryan achievement in
this direction”(2) என்று ரமாசங்கர் திரிபாதி என்னும் வரலாற்றறிஞர் கூறுகிறார்.
ஆரியர், கலைத்துறையில் எவ்வளவு பின்தங்கியவர்கள் என்பதையே இது எடுத்துக்
காட்டுகின்றது.
அதே நேரத்தில் சிந்துவெளி நாகரிக மக்களின் கலைவளத்தைப்பற்றி உலகப் பொதுக் கலைக்களஞ்சியம் கூறுவதாவது:
“Some
musical instruments such as the arched or bow-shaped harp and more than one
variety of drum have been identified from the small terra-cotta figures and
among the pictographs on the seals that were probably used by the merchants.
Further, it has been suggested that the brouze statuette of a dancing girl
represents a class of temple dancers similar to those found much later in Hindu
culture”(3)
இதிலிருந்து 5000 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த சிந்துவெளி மக்கள் இசைக்
கலையிலும் ஆடற் கலையிலும் எவ்வளவு மேம்பட்ட நிலையிலிருந்தனர் என்பதும்
நன்கு புலனாகிறதல்லவா?
இனி அந்த சிந்துவெளி மக்கள் யாரென்பதையும் காண்போம்.
“
The earliest inhabitants were apparently negroids or Dravidians, a short, dark
people, who still inhabit the jungles and mountains and form the majority
of the inhabitants of the povince of Madras, especially the rural areas. They were
highly civilised and the remains of their great cities have been recently
unearthed at places like Mohenjo - daro and Harappa on the banks of the river
Indus.” ( 4 )
இவ்வாறு உலக நூலொன்று அய்யந்திரிபறக் கூறுகின்றது. ஆகையால், சிந்துவெளி
மக்கள் நாகரிகம் மிக்க திராவிடரே என்பதும், அவர்கள் இசை, நடனம் முதலான
நுண்கலைகளில் சிறந்து விளங்கினார்கள் என்பதும் நன்கு விளங்குகின்றது.
அந்தத் திராவிடப் பெருங்குடி மக்களின் கலை வளத்தைப்பற்றி இனி ஆராய்வோம்.
திராவிடர் 25,000 ஆண்டுகளுக்கு முன்னரே இசைக்கலையிலும் ஆடற்கலையிலும்
சிறந்து விளங்கினர் என்று அறிஞர்கள் கருதுகின்றனர். தலை, இடை, கடைச்சங்க
காலங்களில் தமிழகத்தே இருந்த தனி இசை நூல்களில் பெருநாரை, பெருங்குருகு,
பேரிசை, சிற்றிசை, முறுவல், சயந்தம், குணநூல், செயிற்றியம், இசை நுணுக்கம்,
நாடகத் தமிழ்நூல், பரூசபாரதீயம், பரதசேனாபதியம், கூத்தநூல்,
இந்திரகாளியம், பஞ்சமரபு என்பன சில, அவற்றுள் பஞ்சமரபு தவிர மற்ற இசை
நூல்கள் யாவும் அழிந்து போயின.( 5 ) அந்த இசை நூல்களிலிருந்து சிற்சில
பாடல்களைச் சிலப்பதிகாரத்துக்கு உரை எழுதிய அடியார்க்கு நல்லார்
மேற்கோள்களாகக் குறிப்பிட்டுள்ளார்.
ஒவ்வொரு வகை நிலத்துக்கும் ஒரு பெரும் பண் உரியது என்று தொல்காப்பிய
நூலுக்கும் முற்பட்ட காலத்திலேயே தமிழர் வகுத்திருந்தனர். அவை முல்லை யாழ்,
குறிஞ்சி யாழ், மருத யாழ், நெய்தல் யாழ் என்பன. நிலத்துக்குரிய சிறுபண்களை
‘யாழின் பகுதி’ என்றனர்.
எனவேதான் தொல்காப்பியர் தாம் எழுதிய இலக்கண நூலில் ஒவ்வொரு வகை
நிலத்துக்கும் முதற்பொருளையும் கருப்பொருளையும் கூறப்புகுந்தவிடத்துக்
கருப்பொருள்களின் வரிசையில் யாழையும் பறையையும் சேர்த்துள்ளனர். இசையை
நாடெங்கும் பரப்பிவந்த பாணர்களைப் பற்றியும், ஆடலை வளர்த்த
கூத்தர்களைப்பற்றியும், தொல்காப்பியம் கூறுகிறது.
எனவே, சரித்திர காலத்துக்கும் பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு
முன்பிருந்தே தமிழகத்தில் இசை, கூத்து முதலிய கலைகள் வளர்ந்தோங்கி இருந்தன
என்பது பெறப்படுகின்றது. அதனாற்றான் “தொல்காப்பியம், பத்துப்பாட்டு,
எட்டுத்தொகை ஆகிய முதுபெரும் நூல்களில் பழந்தமிழிசை முளைத்துச்
சிலப்பதிகாரத்தில் செழித்து வளர்ந்து நிழல்தரும் மரமாகி நிற்கிறது. எனவே,
தென்னக இசை வரலாறு எழுதுங்கால் தொல்காப்பியத்திலிருந்து தொடங்குதல்
வேண்டும்” என டாக்டர் வீ. ப. கா. சுந்தரம் 23-12-1984 ஆம் நாளன்று
சென்னையில் நடைபெற்ற தமிழிசைச் சங்கப் பண் ஆராய்ச்சிக் கூட்டத்தில்
குறிப்பிட்டார். சங்க இலக்கியத்துள் பரிபாடல் என்பது இசைக்காகவே
இயற்றப்பட்ட இலக்கியமாகும்.
சிலப்பதிகாரத்துக்கு உரை எழுதிய அடியார்க்கு நல்லார் ஒவ்வொரு
நிலத்துக்கும் உரிய பெரும் பண்ணும் சிறுபண்ணும்சிலப்பதிகாரத்தில்
எந்தெந்தக் காதையில் எங்கெங்கு எவ்வாறு இடம் பெற்றுள்ளன என்று வரிசையாக
நிறுத்தியும் காட்டியுள்ளார். குரவைக் கூத்து ஆடுதற்கு ஏழு ஆய்ச்சியர்கள்
வரிசையாக ஒரு வட்டத்தில் நிற்கின்றனர். அவர்களுக்குக் குரல், துத்தம்,
கைக்கிளை, உழை, இளி, விளரி, தாரம் என ஏழு நரம்பு ( சுரங் ) களின் பெயர்கள்
இடப்பட்டுள்ளன. சிலப்பதிகாரம் அரங்கேற்றுக் காதையிலும், கானல் வரியிலும்,
வேனிற் காதையிலும், ஆய்ச்சியர் குரவையிலும் அக்காலத் தமிழிசையின்
இலக்கணத்தைப் பற்றியும் ஆடற்கலையைப்பற்றியும் விவரமாகக் கூறப்பட்டுள்ளன.
இசைக்கு இயைய ஆக்கப்படும் பாடல்களைத் தமிழ்நூலார் வரிப்பாடல் என்பர்.
தமிழகத்தின் இசைக்கலையும் ஆடற்கலையும் அவ்வளவு பழைமையானவை. ( 6 )
ஆனால், இசையைப்பற்றியும் நாட்டியத்தைப்பற்றியும் சமற்கிருதத்தில்
முதன்முதலாகக் கி.பி. 5 ஆம் நூற்றாண்டில் எழுந்த ‘நாட்டிய சாத்திரம்’
என்னும் நூலில்தான் குறிப்புகள் காணப்படுகின்றன. முன்னாளில் இந்திய
உபகண்டம் முழுவதும் தமிழ் மரபுப்படி நிலவிவந்த இசையையும் ஆடலையும் பார்த்தே
‘நாட்டிய சாத்திரம்’ எனும் நூல் ஆரிய மரபில் இயற்றப்பட்டுள்ளது. அதற்கான
ஆதாரம் அந்த நூலிலேயே உள்ளது. ஏனெனில், விந்திய மலைக்கும் தென்கடலுக்கும்
இடையிலுள்ள தென்னாட்டார் பாட்டிலும், பல இசைக்கருவிகளை வாசிப்பதிலும்,
கூத்திலும் மிக்க திறமை வாய்ந்தவர்கள் என்று அந்த நாட்டிய சாத்திரமே
கூறுகிறது.(6) சிலப்பதிகாரத்தில் காணப்படும் இராகப் பாகுபாடுகள்
பதினொன்றையும் நாட்டிய சாத்திரம் கூறும் இராக இலக்கணங்கள் பத்தையும் தஞ்சை
கே. பொன்னையா பிள்ளையவர்கள் நன்கு ஒப்பிட்டுக் காட்டியுள்ளார்.
இந்திய இசையின் வரலாற்றைக் குறித்து அறிஞர் கோசுவாமி கூறியுள்ளதும் இங்கு ஒப்பு நோக்கத்தக்கதாம்.
“All
the developments that were taking place in the Aryan musical culture were not
their own discovery. Others contributed much to this. They (Aryans) were
innately gifted race eager to learn and appreciate the cultural achievements
of the pre-Aryan people. Some of tham
were the architects of a higher order of civilization”(7)
ஆயினும், இந்த உண்மையை மறைக்கவே ஆரியர் திட்டமிட்டு இன்றைய இந்தியாவில்
நிலவும் இசைமுறைகள் யாவும் சாமவேதத்திலிருந்து தோன்றியவை எனப் புரட்டுச்
செய்தனர். ஆனால், சாமகானம் என்பது சரியான இசைக்கணக்கு முறையும் இடைவெளி
அமைப்பும் இன்றித் தாறுமாறாகப் பாடப்பட்டதாகும். சாமவேதத்துக்கும்
(நெடுங்காலத்துக்கு) முன்பே இசைத்தமிழில் வழங்கி வந்த ஏழு சுரங்களும்
சாமவேதத்திலிருந்து பிறந்தன என மக்களை ஏமாற்றி இந்த நாட்டின் இசையையே
சமற்கிருதமயமாக்கத் தலைப்பட்டனர். அதன் பொருட்டுச் ‘ச’ என்பதை ‘ஸ‘ என
எழுதினர். சுமார் 700 ஆண்டுகளுக்கு முன்பு சாரங்கதேவர் தாம் இசைத்தமிழில்
வழங்கிவந்த ச, ரி, க, ம, ப, த, நி என்னும் ஏழு குறியீடுகளுக்கும் வடமொழிப்
பெயர்களை வலியக் கொடுத்து, அந்த ஏழு சுரங்களும் சமற்கிருதக் குறியீடுகள்
எனும் பெரும்புரட்டை
ஏற்படுத்தினார். இதனை மறைத்திரு நாராயண சாத்திரிகள் மிக அழகாக விளக்கியுள்ளார்.
அது மட்டுமன்று தமிழகத்தின் பாணர்கள் தம் செவ்வழி இசையை வடநாட்டிலும்
பரப்பி வந்தனர். அதனைத்தான் ஆரியர் ‘மார்க்க இசை’ என அழைத்தனர். யாழ்கொண்டு
இசையைப் பரப்பிய தமிழ்ப் பாணர்களுக்கும் ‘கந்தர்வர்’ என ஆரியர் பெயரைச்
சூட்டினர். கந்தர்வர் தமிழினத்தவர் என்று தமிழ்ப் பேராசிரியர்
இராகவய்யங்கார் ‘தமிழ் வரலாறு’ என்னும் நூலில் கூறியுள்ளார். பாணர்கள்
யாழைக் கொண்டு இசைப் பாடுவதையே தொழிலாகக் கொண்டவர்கள். ஆகையால்,
பாணர்களுக்கு ‘யாழோர்’ என்ற பெயரும் உண்டு. ‘யாழோர்’ என்பதன் நேர்
வடமொழியாக்கம்தான் ‘கந்தர்வர்’ என்பதாம். கந்தர்வ இசையின் தொடக்கம்
வீணையில் என்று பரதர் கூறியுள்ளார். கந்தர்வர் கையாண்டதாகப் பரதர் கூறும்
வீணையும் பாணரின் யாழே ஆகும்.(8)
இது குறித்து மேனாட்டு ஆராய்ச்சியாளர் ஒருவர் மிகவும் அழகாகக் குறிப்பிட்டுள்ளார்:
“There
seems to have been no doubt that this name Vina or this word was applied to the
arched harp represented on the bas-reliefs, contemporary with the texts that
used the word... This arch harp disappears from the instrumental stock of India
towards, the 8th century”.(9)
எனவே, ஆரியர் வீணை என்றழைத்தது தமிழரின் யாழையே என்பது தெளிவாகின்றது.
இதே கருத்தினைப் பெரும்புலவர் க. வெள்ளைவாரணர் தாம் எழுதியுள்ள
‘தேவாரத்திற் பயின்ற பண்களும் இசைக் கருவிகளும்’ என்னும் நூலில்
வலியுறுத்திச் “செங்கோட்டி யாழினை அடியொற்றி அமைத்தது வீணை என்னும் இசைக்
கருவியாகும்” என்று குறிப்பிட்டுள்ளார்.(10)
“பெரும்பான்மையாய்ப் பழக்கத்திலுள்ள நால்வகை யாழ்களுள் கடைசியாகக்
கூறப்பட்டதும், மிகச் சிறியதும், ஏழு நரம்புகளையுடையதுமான செங்கோட்டி
யாழொன்றே முதற் சங்க காலந் தொடங்கி இன்று வரை வாழையடி வாழையாய் நம்
தமிழகத்தில் நிலை பெற்றிருக்கின்றது. இச் செங்கோட்டி யாழையே தற்காலம் நாம்
வீணையென வடமொழிப் பெயரால் வழங்குகிறோம்” என ‘யாழின் சிறப்பு’ என்னும்
கட்டுரையில் (11) டாக்டர் வரகுணபாண்டியன் குறிப்பிட்டுள்ளதும் இவண் ஒப்பு
நோக்கத்தக்கதாம்.
இனி, இன்று ‘கருநாடகச் சங்கீதம்’ என்றழைக்கப்படும் இசை முறையில்
முறைப்படி எழுதப்பட்ட அடிப்படை நூல் கி.பி. 13ஆம் நூற்றாண்டில்
சாரங்கதேவரால் எழுதப்பட்ட ‘சங்கீத ரத்னாகரம்’ என்னும் நூல்தான் என்பது
யாவராலும் ஒப்புக் கொள்ளப்படும் உண்மையாகும். அவர் தக்கணத்தில்
தவ்லதாபாத்து என்னும் ஊரில் வாழ்ந்தவர். அவர் தமிழ்நாட்டில் சுற்றித்
தேவாரப் பண்கள் முதலியவற்றின் இசை முறையைக் கேட்டறிந்து அன்று
தென்னிந்தியாவில் பரவியிருந்த தமிழிசை இலக்கணத்தை அடிப்படையாகக் கொண்டுதான்
அந்த நூலை எழுதினார் என்பதற்கான ஆதாரமும் அந்த நூலிலேயே உள்ளது.
ஏனெனில், அவர் தம் நூலில் தமிழ்ப் பண்களைப்பற்றியெல்லாம் எடுத்துக்
கூறியுள்ளார். எனவேதான், “தமிழில் திருஞான சம்பந்தருடைய பாடல்களுக்கு
இசைக்கப்பட்டிருந்த 19 தமிழ்ப் பண்களுக்கும் சாரங்கதேவரின் 19 மேள
கர்த்தாக்களுக்கும் ஏதோ இயைபு இருந்ததென்று நினைக்க இடமுண்டு. அப் பண்களே
அம் மேளகர்த்தாக்களின் அடிப்படையாக இருந்திருக்கலாம்” என்று ‘தமிழிசையும்
கர்னாடக சங்கீதமும்’ என்னும் கட்டுரையில்(12) இசைத் தமிழ்ச் செல்வர் தி.
இலக்கு மணப்பிள்ளை கூறுகின்றார். ஆகையால், தென்னிந்தியாவில் அக்காலத்தில்
வழக்கிலிருந்த தமிழ்ப் பண்களைத்தாம் ஆரியர் மேளகர்த்தாக்களாக்கி உள்ளனர்.
பண், பண்ணியல் திறம், திறம், திறத்திறம் முதலிய தமிழ்ப் பெயர்களைத்தாம்
சம்பூர்ணம், ஷாடவம், அவ்டவம், சதுர்த்தம் என வடமொழிப் பெயர்களாக்கினர்.
சிலப்பதிகாரத்துக்கு உரை எழுதிய அடியார்க்கு நல்லார் கூறுவதிலிருந்து இது
நமக்குத் தெரியவருகிறது. அதுபோலத்தான் ‘ஆளத்தி’யையும் ‘ஆலாபனை’யாக்கி
விட்டனர்.
இது சம்பந்தமாக டி.கே. சிதம்பரநாத முதலியார் செய்துள்ள ஆராய்ச்சியும்
நமக்கு வெளிச்சத்தைத் தருகிறது. “ஓதுவார் தனித் தமிழ்ப் பண்களை இயைத்துத்
தேவாரம் முதலிய தோத்திரப் பாட்டுகளைப்பாடுவோர், நட்டுவர் நட்டுவாங்கமும்
சங்கீதமும் கோயிற் பணியிலும் மற்ற நடைமுறைகளிலும் தொழிலாக எடுத்துக்
கொண்டவர். மேளக்காரரும் அப்படியே. வடமொழியில் இயற்றப்பட்டிருக்கும்
சைவாகமங்களைச் சரிவரப் பொருள் கூறிக் கோயிற் காரியங்களை நடத்துவதற்கு
வடமொழி பயின்ற தீட்சிதர்களே (இவர்களும் தமிழ்ப் பிராமணரே யாவர்)
ஏற்பட்டனர். இத்தீட்சிதர்களில் சங்கீத ஞானமுடைய சிலர் மேளக்காரரின்
சங்கீதம், நட்டுவர் முகாந்திரம் சங்கீதம் கற்றும் கர்னாடக சங்கீத
சாத்திரத்தை எழுதப் புகுந்தனர். அப்போது தனித்தமிழ்ப் பண்களுக்கு வட இந்திய
இராகங்களோடு அவை பொருந்துமாறு வடமொழிப் பெயர்களைக் கொடுத்தார்கள். தமிழ்ப்
பண்கள், கர்நாடக ராகங்கள் இவை தம்மிலுள்ள மிகுந்த ஒற்றுமைப் பாட்டுக்குக்
காரணமும் இதுவே என்று உய்ந்துணர்ந்து கொள்ளலாம்”(13) வேங்கடமகி என்பவர்
தாம் கி.பி. 17 ஆம் நூற்றாண்டில் அவற்றையெல்லாம் வரிசைப்படுத்திச்
‘சதுர்த்தண்டிப் பிரகாசிகை’ என்னும் நூலை எழுதினார். அதில் வரும் 72
மேளகர்த்தாக்களுக்கும் இராகமாலிகை பாடிய மகா வைத்தியநாதய்யரும் தமிழைத்
தாய்மொழியாகக் கொண்டிருந்தும் வடமொழியில்தான் அந்த இராகமாலிகைக்குப் பாட்டு
இயற்றினார்.
பண்டைக்காலத்தில் கைகளினால் கொட்டினால் அது ‘பாணி’ எனப்பட்டது.
கால்களினால் தட்டினால் அது தாளம் எனப்பட்டது. முற்காலத்தில் குழல், யாழ்க்
கருவிகளை இசைத்தவர்கள் முதலில் இயற்கையாகப் பாதங்களினால் தட்டினர். எனவே,
பாதத்தின் ஒலி என்ற பொருளில் தாள் + அம் = தாளம் எனத் தமிழர் பெயர்
வைத்தனர். ஆரியர் அதையும் வடமொழிச் சொல்லாகத் திரிக்க முயன்றுள்ளனர்.(14)
பதப்படுவது பதம் என்றும் அத்தகைய பாட்டுகளை நாட்டியக் கலையுடன் சேர்த்து
அனுபவிக்க வேண்டும் என்றும் டி.கே. சிதம்பரநாத முதலியார் கூறுகிறார்.
ஆனால், அந்தப் பதத்தையும் ஆரியச் சொல்லாகக் காட்ட முற்பட்டுவிட்டனர்.
ஆரியரின் புரட்டுகளைக் குறித்து ஆபிரகாம் பண்டிதர் பின்வருமாறு கூறுகின்றார்.
“பூர்வம் தமிழ் மக்கள் சுரங்களையும் சுருதிகளையும் இராகமுண்டாக்கும்
விதிகளையும் அனுசரித்துப் பாடிவந்த 12,000 ஆதி இசைகளும், அவற்றின்
பரம்பரையிலுதித்த இராகங்களும் பாடப்பட்டும் வேறு பெயர்களால்
அழைக்கப்பட்டும் அந்நிய பாஷைச் சொற்களால் உருவமைந்தும் நாளது வரையும்
வழங்கி வருகின்றன” (15)
“தமிழில் வழங்கும் அநேக வார்த்தைகளைத் தங்கள் பாஷையில் முதல் முதல்
இருந்ததாக மற்றவர் நினைக்கும்படி காலாகாலங்களில் மாற்றி, மாற்றியதற்கிணங்க
நூல்களும் புராணங்களும் கட்டுக் கதைகளும் செய்து பரப்பி வந்தார்கள்....
அவர்கள் சொன்னதையெல்லாம் நம்புகிறவர்கள் ஏற்பட்ட பின் சமற்கிருத பாஷையின்
அநேக வார்த்தைகள் தமிழில் வந்து வழங்கத் தலைப்பட்டன. இதை விவேகிகள்
அறிவார்கள். அதிகம் சொல்ல இங்கு அவசியமில்லை. இயல், இசை நாடகமென்னும்
முத்தமிழிலுள்ள இசைத் தமிழாகிய சங்கீதத்தைத் தென்னாட்டிலிருந்தே மற்றவர்கள்
கொண்டு போனார்களென்பது பற்றியும், வடபாஷைக்காரரும் தமிழ்நாட்டினின்றே
இசைத் தமிழைக் கொண்டு போயிருக்க வேண்டுமென்பதுபற்றியும் இங்கு எழுத
நேரிட்டது.”(16)
ஆபிரகாம் பண்டிதரின் நூலுக்குப் பாயிரம் எழுதிய திருப்பாதிரிப்புலியூர்
ஞானியார் மடாலயத்துச் சிவசண்முக மெய்ஞ்ஞான சிவாச்சாரிய சுவாமிகளும்
கூறுகிறார்:
“பண்டைத் தமிழர்களிடமிருந்துதான் இசையின் நுணுக்கங்களும் பாகுபாடுகளும்
தோன்றி வளர்ந்து ஆரியர் கைப்படலாயின என்பது யான் நெடுநாட்களுக்கு முன்னரே
ஆராய்ந்து கண்டமுடிவு. பல சிறந்த மேற்கோள்களோடும் அறிவு நுணுக்கத்தோடும்
இந்நூலுள் விளக்கப்படுதல் கண்டு இந்நூலாசிரியரின் ஆராய்ச்சித் திறத்திற்கு
மிக மகிழ்ந்தேன்.”(17)
சிலப்பதிகாரத்தில் பொழுதுபோக்குக்காக அல்லியம் முதல் கொடுகொட்டி ஈறாக 11
வகையான ஆடல்கள் விவரிக்கப்பட்டுள்ளன. ஒன்பது வகைச் சுவைகள்
கூறப்பட்டுள்ளன. இருபத்து நான்கு வகையான அவிநயங்கள் விளக்கப்பட்டுள்ளன.
‘பஞ்ச மரபு’ நூலில் அவிநய மரபு பகுதியில் 33 ஒற்றைக் கை முத்திரைகளும் 15
இரட்டைக் கை முத்திரைகளும் தரப்பட்டுள்ளன. அவ்வாறெல்லாம் சிலப்பதிகாரம்,
பஞ்சமரபு முதலிய நூல்களில் விவரிக்கப்படும் தமிழரின் ஆடலையும்
அவிநயத்தையும்தாம் நாட்டிய சாத்திரம், அபிநயதர்ப்பணம் முதலான வடமொழி
நூல்கள் கையாண்டுள்ளன. ‘அவிநயம்’ என்னும் தமிழ்ச் சொல்லையே ‘அபிநயம்’ என
வடமொழியில் மாற்றிவிட்டனர். தமிழரின் ஆடற்கலையை இசை வேளாள மரபினர்
தொடர்ந்து பயின்றுவந்தனர். அதைத் “தாசியாட்டம்” என்று நாடு இழிவுபடுத்தி
வந்தது. ஆனால், இந்த நூற்றாண்டில் 1930ஆம் ஆண்டு வாக்கில்தான் அதற்குப்
‘பரத நாட்டியம்’ என்று புதுப்பெயர் சூட்டிச் சமற்கிருதமயமாக்கி அதையும்
ஆரியம் அபகரித்துக் கொண்டது. அது காசுமீரத்திலிருந்து வந்த கலை என்று கூடக்
கூறத்துணிந்தது.
எனினும், நாட்டியத்தைப்பற்றி நூலொன்று எழுதிய சி.ஆர். சீனுவாச அய்யங்கார் கூறுகிறார்:
“இசை, நாட்டியம் முதலிய கலைகளெல்லாம் தமிழ் நூல்களிலிருந்துதான்
வடமொழிக்குக் களவாடப்பட்டன என்று மறைந்த என் நண்பர் ஆபிரகாம் பண்டிதர்
கூறுவதுண்டு. அது உண்மைதானோ என இன்று யானே கருதவேண்டியுள்ளது. ஏனெனில்,
இப்பொழுது நாட்டியத்தில் கையாளப்படும் பல சொற்கள் ஆரியச் சொற்கள் அல்ல.
அவற்றின்மூலம் சந்தேகத்துக்கிடமின்றித் திராவிடமே”(18)
பண்டைத் திராவிடரின் இசைக் கலையும் ஆடற் கலையும்தான் பின்னாள் ஆரியரால் சமற்கிருத மயமாக்கப்பட்டன என்பதற்கு இனியும் ஆதாரம் வேண்டுமோ?
(நூல்
- சமற்கிருத ஆதிக்கம்)
பதிப்பாசிரியர் : கி.வீரமணி
பதிப்பாசிரியர் : கி.வீரமணி
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக