மனிதப்
பிறவி என்பதில் புகழைத் தேடுவதுதான் மற்ற
ஜீவனுக் குள்ளதைவிட மேலான தன்மை என்று
கூறப்படும். ஆனால் மனிதனும் புகழைத்
தேடவில்லை என்றால் மற்ற ஜீவன்களின்
வாழ்க்கைக்கும் இவனுக்கும் வித்தியாசமே இல்லாது போவதும் அன்றி
மனித வாழ்க்கை மேலானது என்றோ உயர்வென்றோ
கூறுவதற்கில்லை.
மற்றும்
மனிதன் இறந்து போதல் என்பதிலும்
மற்ற ஜீவன்களைப் போன்றே இவனும் இறந்து
விடுகிறான் என்றேன்.
மனிதன்
சாதல் என்பது மனிதனுக்குக் கருவி
கரணாதிகள் - இயங்கும் சக்தி நின்று போன
பின் செத்துப் போதல் என்றாகிறது; அதாவது
மனிதனுடைய சகல அவயங்களும் நகரும்
(இயங்கும்) சக்தியை இழந்துவிட்ட பின்பு
செத்துப் போகிறான். (சத்துப் போய்விட்டது) என்றாகிவிடுகிறான்.
மரம் பட்டுப் போய்விட்டது என்கிறோம்.
அதாவது மரத்திற்கு இதுவரை இருந்த வளர்ச்சிக்குள்ள
சத்தானது போய்விட்டது. சத்துப் போனதைத் தான்
செத்துப் போய் விட்டது என்று
கூறுகிறோம். இப்படி மிருக இனங்களும்,
பறவை இனங்கள், ஊர்வன, நீர்வாழ்வன போன்ற
எல்லா வற்றுக்கும் நகரும் சக்தியும் வளரும்
சக்தியும் போய்விட்ட பின் செத்து விடுகிறது
என்கிறோம். மரம், செடி, கொடி,
புல்பூண்டு இவைகளுக்கு வளர்ச்சியைக் கொடுக்கும் சத்து அதாவது காற்றையும்
நீரையும் இழுக்கும் சக்தி போனதும் செத்துப்போகிறது.
அத்துடன் இவைகளின் வாழ்க்கை முடிந்தது என்று பொருள்.
அவைகளைப்
போன்றே மனிதனும் செத்துப்போனபின் அதனுடன் அவன் வாழ்வு
முடிந்தது. அத்தோடு சரியாகி விடுகிறது.
ஆனால் வைதீகர்கள் கூறுவதோ அப்படி இல்லை.
மனிதன் செத்துப் போனவுடன், அவனுடைய உடலிலிருந்து ஆத்மா
என்று ஒன்று பிரிந்து சென்று
மேல் லோகம் அடைகிறது. என்கிறார்கள்.
அத்துடன் கூட விடவில்லை. பிரிந்து
சென்ற ஆத்மா, தான் செய்த
பாவபுண்ணியங் களுக்குத் தக்கவாறு, நரகமோ, மோட்சமோ அடைகிறதாம்.
அங்கு இன்பதுன்பங்கள் அனுபவிக்கிறதாம்! அவ்வளவோடும் விடுவதில்லை. ஒரு சரீரத்தில் இருந்து
பிரியும் ஆத்மா வேறு ஒரு
சரீரத்தைப்பற்றிக் கொண்டுதான் நீங்குகிறதாம். அதாவது ஒட்டுப்புழுப்போல்.
எப்படியோ
ஆத்மா என்பதை பற்றிப் புளுகிவிட்டு;
அதைநிலை நாட்டுவதற்கென்று ஒன்றன்பின் ஒன்றாகப் பாவ புண்ணியம், மோட்சம்,
நரகம், மறு ஜன்மம், பிதிர்லோகவாசம்,
கடவுள், என்றெல்லாம் புளுகிக் கொண்டேபோகும் அவசியம் ஏற்பட்டுவிட்டது. ஒரு
புளுகை மறைக்க எண்ணற்ற அபாண்ட,
அ°திவார மற்றதுமானப்
புளுகுகள் அதுவும் கண்ணை மூடிக்கொண்டு
எப்படி எப்படி புளுகவேண்டும் என்றுகூட
சிந்தித்துப் புளுகாமல் மலைபோன்ற புளுகும்படி ஆகிவிட்டது. அப்படிக் கூறினால்தான் மனிதன் ஓரளவு நம்புவான்
என்பதற்கே ஆகும்.
மனிதன்
செத்தான் என்றவுடன் அவனுடைய சக்திக் குறைந்து
போய் அசையும் தன்மையற்று மனிதனின்
உள் அவயவங்களான சுவாச உறுப்புகளும், காற்றை
இழுத்து வெளியிடும் இயங்கும் சக்தியை இழந்துபோனபின் மூச்சும்
நின்றுவிடுகிறது மூச்சு நின்றுவிட்டபின், உடல்
அழுகி நாற்றமடைகின்றது. அப்படி செத்துப்போன உடலை
பூமியில் புதைத்துவிடுகிறோம். புதைத்தால் மக்கிப் போய் மண்ணோடு
மண்ணாய்ப் போய் விடுகிறது. எரித்துவிட்டால்
சாம்பலாகிப் போய்விடுகிறது. ஒரு ஆட்டை, ஒரு
கோழியை, ஒரு மீனை அறுத்துச்
சாப்பிட்டு விடுவது போல் ஒரு
மரத்தை வெட்டி எறிந்து விடுவதுபோல்
மனிதன் எரிக்கப்படுவதை புதைக்கப்படுவதை நாம் கண்ணால் நேரில்
பார்க்கிறோம்.
ஆனால் கண்ணுக்குத் தெரியாமல் ஆத்மா என்று ஒன்று
பிரிந்து செல்லுகிறது என்றால் இதைப் பெரும்
பித்தலாட்டம் என்றுதான் கூறவேண்டும். இத்தன்மை மனிதனுக்கு மட்டும் உண்டு! மற்ற
ஜீவன்களுக்கு ஈ, எறும்பு, பூச்சி,
புழு அணுக் கிருமிகளுக்கு ஆத்மா
என்றொன்று கிடையாது என்றும் கூறுவது கொஞ்சமேனும்
மனிதப்பண்புக்கு ஏற்றதென்று கூறமுடியாது. விவகாரத்திற்கு ஆக அவற்றிற்கும் ஆத்மா
உண்டு என்றால் அந்த ஆத்மாக்கள்
எங்கே போய் என்ன மோட்சநரகத்தை
எதற்கு ஆக அனுபவிக்கக் கூடும்?
மனிதனுக்கு
மட்டும் ஆத்மா உண்டு. இதன்
மேன்மைக்கு ஆக அதன் சந்ததிகள்
பார்ப்பனனுக்குத்தான் தர்மம் செய்ய வேண்டும்!
“அதாவது ஆத்மா சுகமடைய பார்ப்பனனுக்குச்
சுகமுண்டாக்க வேண்டும்” என்றால் இவை பார்ப்பனர்களால்
- புரோகிதர்களால் அவர்களது நன்மைக்கென்று ஏற்படுத்தப்பட்டதென்பதற்கு வேறு ஆதாரங்கள் தேவையில்லை.
கண்ணுக்குத்
தெரியாததும், சூட்சமமாகவும் யாருக்கும் தெரியா மலும் மேலே
செல்லுகிறது என்கிறார்கள்! இப்படிக் கூறுகிறவர்கள் கண்ணுக்குமட்டும் இந்த ஆத்மா எப்படித்
தெரிந்ததோ தெரியவில்லை. கேட்டால் “வேதம் சொல்லுகிறது, சா°திர புராணம், கருடபுராணம்
சொல்லுகிறது, என்பார்கள்! இவைகள் எப்போது யாரால்
ஏற்படுத்தப் பட்டன? என்றால் ரிஷிகள்,
முனிவர்கள், கடவுள் அவதாரங்கள், கடவுள்கள்
வெங்காயங்கள், கருவேப்பிலைகள் கூறியவைகள் என்பார்கள். காலம் எப்போது என்றால்
பல யுகங்களாயிற்று என்பார்கள். இவர்கள் யார்? இவர்களின்
யோக்கியதை என்ன? இந்த நபர்களுக்கும்
நமக்கும் என்ன சம்பந்தம்? யாரோ
உளறியவைகளை வைத்துக் கொண்டு இந்த விஞ்ஞானக்
காலத்திலும் நாம்கட்டி அழுவது பொருத்தமாகுமா? என்று
கேட்டால், “அப்படிக்கேட்காதே நா°திகம் பேசாதே.
நீ பாவி, உன்னைக் கடவுள்
நரகத்தில்தான் தள்ளுவார்” என்றுதான் கூறமுடியுமே தவிர ஒன்றுக்கும் சரியான
பதில் கூறமுடியாது.
இப்படியே
எதையும் பார்ப்பனர்கள் கடவுளின் பெயரையும், மதம் சா°திரபுராணங்கள்
பெயரையும், கண்ணுக்குத் தெரியாத சூட்சுமங்கள் நம்புத்திக்கு
எட்டாத தத்துவங்கள் என்பதையும் கூறி நம்மை மிருகத்தினும்
கேடானவர்களாக்கிவிட்டனர். மனிதன் என்று கூறப்படுவது
ஒரு குறிப்பிட்ட தனிப்பட்ட பொருளின் பெயரில்லை. மன்மத சிந்தாமணி லேகியம்
என்கிறார்கள். அந்த லேகியம் பல
பொருள்களைக் கூட்டமாகக் கொண்டது. தாது விருத்தியை உண்டாக்கும்
சத்துள்ள பொருள்கள் பலவற்றையும் அளவுடன் சேர்த்துப் பக்குவப்படுத்தப்பட்ட
கூட்டுப் பொருள் தான் அந்த
லேகியம். அதன்பிறகுதான் அதற்கு மன்மத சிந்தாமணி
லேகியம் என்று பெயர் வந்தது.
அதற்கு முன் சேர்க்கப்பட்ட பல
பொருள்கள் ஒவ்வொன்றுக்கும் தனித்தனியே பெயர் உண்டு.
மேஜை என்பதை எடுத்துக் கொண்டால்
மேஜை என்ற சாமான் அப்படியே
விளையக்கூடியது இல்லை. பல சாமான்களைச்
சேர்த்துச் செய்யப்பட்டது மேஜை மரத்தால் செய்த
கால்கள், மரப்பலகை, மர ஆய்ப்புகள் இவைகளைப்
பிணைக்கும் இரும்பு ஆணிகள், இரும்புப்
பட்டைகள் இவைகளை எல்லாம் பொருந்தும்படி
ஒன்று சேர்த்து உண்டாக்கப்பட்டதற்கு மேஜை என்று பெயர்.
மேஜை என்ற உருவம் வருமுன்பாக
அதில் உள்ள கூட்டுப் பொருள்கள்
யாவற்றிற்கும் தனித்தனியே ஒவ்வொரு பெயர் இருந்தது.
மேஜை பயனற்றுப் போய் விட்டபின் அதன்கூட்டுப்
பொருள்களை தனித்தனியே பிரித்து விட்டால் சட்டம் பலகை ஆணிகள்
இவை தனித்தனியே இருக்கும். மரப்பலகையும் சட்டமும் பிறகு அடுப்பெரிக்கத்தான் உபயோகப்படும்.
எரித்தவுடன் கரியாக சாம்பலாக போய்விடுகிறது.
அதைப்போன்றே
மனிதன் என்பது கற்பனைப் பெயர்
கொண்ட கூட்டுப் பொருள்களை கொண்ட ஒரு உருவத்தோற்றமாகும்.
மனிதனைத் தொட்டுக் காட்டு என்றால் நீங்கள்
எதைத் தொட்டு காட்டுவீர்கள்? கையை,
காலை, தலை முதலியனவற்றைத் தொட்டு
காட்டினால் அதற்குத் தனித்தனிப் பெயர்தான் கூறலாம். தொடுவதை எல்லாம் மனிதன்
என்று கூறமுடியாது. ஏன் எனில் காலையோ,
மார்பையோ, வயிற்றையோ, தலையையோ ஏதாவது ஒன்றைத்
தொட்டுக் காட்டினாலும் அதனதற்குத் தனித்தனிப் பெயரிருக் கிறது. மனிதன் என்பது
தனிப்பட்ட ஒன்றின் பெயராக இருக்குமானால்
அதைத் தொட்டுக் காட்டலாம்.
ஆனால் இத்தனைப் பெயர்களையும் கொண்ட உறுப்புக்களை ஒன்று
சேர்ந்திருப்பது மனிதன் என்றிருக்க எப்படி
மனிதனைத் தொட்டு காட்ட முடியும்?
மேலும்
இந்த அவயவங்களில் ஏதாவது ஒன்று அல்லது
சில இல்லை என்றாலும் அவனை
மனிதன் என்றுதான் கூறுகிறோம். ஒருவனுக்குக் கை இல்லை என்றால்
அவனும் மனிதன்தான். ஒருவனுக்குக் கால் இல்லை என்றாலும்
அவனும் மனிதன்தான். ஆனால் மனிதன் என்ற
பெயர் எப்போது மறைகிறதென்றால் ஒருவன்
மூச்சு வாங்கி விடுவது நின்றுவிட்டதானால்
மனிதன் என்ற பெயர் மாறி
பிணம் என்ற பெயர் வருகிறது.
அதன் பிறகும் அதைச் சுடும்வரை
பிணம், சுட்ட பின் சாம்பல்
என்ற பெயர் வருகிறது. மீதியுள்ளவை
எலும்புகள். அவைகளும் மண்ணுடன் மக்கிப்போன பின் எலும்பு மண்ணாகிவிடுகிறது.
மற்றும்
மனிதனின் சுபாவம் என்ன என்று
பார்த்தால் மற்ற ஜீவன்களுக்கில்லாத சுபாவம்
கொண்டவனாக இருக்கிறான். நாய்க்கு ஆகிலும் நன்றி விசுவாசம்
என்பது மிகுதியும் உண்டு. நன்றியைக்
கொஞ்சம்
கூட மறக்காமல் நாய் தன் எஜமானனிடம்
விசுவாசத்துடன் இருக்கும். தன் எஜமான் தன்னைவிட்டு
வெளியில் சென்று விட்டு பிறகு
வந்ததும் தன் நன்றியின் அறிகுறியாக
எட்டித்தாவி, வாலை ஆட்டிக்கொண்டு துள்ளிக்
குதித்து மேலே விழுந்து விளையாடுவதற்கு
முயற்சிக்கும். மனிதனோ நாயைப் போல்
நன்றி இயல்பு உடையவனல்ல. நாயைத்
தன் எஜமான் எவ்வளவு அடித்தாலும்,
உதைத்தாலும், மறு நிமிடத்தில் அதே
நாய் தன் எஜமானனிடம் அன்பு
காட்டுவதைப் பார்க்கலாம். சோறு போடாவிட்டாலும் வி°வாசம் காட்டும். ஆனால்
மனிதன் அப்படி அல்ல. என்ன
நன்மை அடைந்தாலும் ஒருதீமை நேர்ந்துவிட்டால் முன்பு
அடைந்த நன்மைகளை மறந்து தீமையை மட்டும்
எடுத்துக் கொள்வான். இது மனித ஜீவனின்
சுபாவம் ஆகும். மனிதனுக்குச் சகலமும்
சுயநலம்-வியாபாரமுறை-மனிதனுக்குத் துரோகம் என்பது இயல்பு.
இப்படி
மற்ற ஜீவன்களில் பூனையை எடுத்துக்கொண்டால் அதன்
சுபாவப்படி, மனிதன் எப்பொழுது ஏமாறுவான்
அல்லது எப்போது இருட்டு ஆகும்.
அடுக்கில் அறையில் உள்ள பால்
தயிர்ப் பானையை உருட்டிவிட்டு ருசி
பார்க்கலாம் என்று காத்துக் கொண்டு
இருக்கும். மற்றவரை ஏமாற்றும் சுபாவத்திலேயே
கருத்துடன் இருக்கிறது. அது போல் மாத்திரமல்லாமல்
மனிதனை மனிதன் குரோதக் கருத்திலும்,
துரோகக் கருத்திலும் கொல்வான்! விஷமிடுவான்! சாகத்தவம் கிடப்பான். இது மனித இயல்பு.
பூமிக்கு
மேல் மைல் கணக்கில் தூரத்தில்
பறக்கும் பருந்து பூமியில் கிடக்கும்
சிறிய வ°துக்களைக் கண்டு
பிடித்து விடுகிறது. நம்முடைய கண் பருந்தின் கண்ணை
விடப்பெரியது. நம் கண் உருவத்தில்
பெரிதே தவிர, பறவைக்குள்ள கண்ணின்
சக்தியைப் போன்று சக்தி அதிகம்
கொண்டதில்லை. பருந்தின் கண்களுக்குத் தனி சக்தி இருக்கிறது.
மனிதன் கரும்பை உற்பத்தி செய்கிறான்.
ஆனால் யானைக்குக் கரும்பை தின்னுவதற்குத் தான்
தெரியும். கரும்பை பயிர் செய்யத்
தெரியாது. மனிதன் பெரிதும் பிறருக்குத்
தொண்டு செய்து வாழ்வதையே குறியாய்க்
கொண்டுள்ளான். ஆனால், இந்தக் குறிக்கோள்
மற்ற ஜீவனுக்கு இல்லை.
நூல் -
மனித வாழ்வின் பெருமை எது?
(நீத்தார்
நினைவுநாள் சிந்தனைகள்)
ஆசிரியர் : தந்தை பெரியார்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக