உயர்திரு தலைவர் அவர்களே! இதனைக் கொண்டுவர தங்கள் அனுமதி
வேண்டுகிறேன்; அரசுப் பணியிடங்களுக்கு நியமனம் செய்யும் அதிகாரம் கொண்ட எல்லா
அதிகாரிகளுக்கும், குழுக்களுக்கும் அல்லது அதிகாரிகள் அடங்கிய குழுக்களுக்கும் மாதச்
சம்பளம் ரூ.100-ம் 100-க்கு மேலும் பெறும் பணிகளில் குறைந்தது 66 சதவிகிதமும், மாதச் சம்பளம்
ரூ.100-க்குக் கீழ் பெறும் பணிகளில் 75சதவிகிதமும் பிராமணரல்லாத
சமுதாயத்தினர்களால் நிரப்பப்படும்வரை இந்தத் தேதியிலிருந்து 7 ஆண்டு
காலத்திற்கு கிறிஸ்துவர்கள், முகமதியர்கள், இதர நலிவடைந்த பிரிவினர்கள் உள்ளடங்கிய பிராமணரல்லாத சமுதாயத்தைச்
சேர்ந்த விண்ணப்பதாரர்களுக்கே அளிக்க வேண்டும்; அத்தகையவர்கள் அந்தப் பணிகளுக்கு என்று
விதிக்கப்பட்ட குறைந்தபட்ச தகுதியே பெற்றிருந்தாலும், அவர்கள் பிராமண
விண்ணப்பதாரர்களைவிட குறைந்த தகுதி பெற்றிருந்தாலும், முன்னுரிமை
கொடுக்க வேண்டும் என்று அரசாங்கம் ஒரு நிலை ஆணையைப் பிறப்பிக்க வேண்டுமென்று
இந்தச் சபை அரசாங்கத்திற்குச் சிபாரிசு செய்கிறது
- இப்படி ஒரு
அழுத்தமான சமூகநீதிக் கோரிக்கையை வைத்தவர் ஓ. தணிகாசலம் செட்டியார் என்ற பெருமகன்.
இந்த முன்மொழிவை அப்படியே ஆதரித்தவர் டாக்டர் சி. நடேசனார். யார் அந்த ஓ.
தணிகாசலம் செட்டியார்? 1875 ஆம் ஆண்டில் வடசென்னையில் பிறந்தவர். மிகச் சிறந்த வழக்குரைஞர்.
அவருடைய வாதத்திறன் அந்தக் காலத்தில் புகழ் பெற்ற ஒன்றாகும். அவர்
காஞ்சிபுரம் நீதிமன்றத்துக்கு ஒரு வழக்குக்காக வாதாட வந்தார் என்பதற்காக அண்ணா
அவர்கள் படித்த பள்ளிக்கூடத்துக்கு விடுமுறை அளிக்கப்பட்டு, தணிகாசலம்
செட்டியார் விவாதத் திறனை நேரில் காண மாணவர்களுக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டதை அண்ணா
அவர்களே குறிப்பிட்டுள்ளார் என்றால் அந்த வழக்குரைஞரின் திறமையை எளிதில் தெரிந்து
கொள்ளலாமே!
நீதிக்கட்சியின் முக்கிய தலைவராகவும், சட்டப் பேரவை உறுப்பினராகவும், நீதிபதியாகவும்
ஒளி வீசிய பெருமகனார் இவர். சென்னை தியாகராயர் நகர் பகுதியில் ஒரு தெரு
ஓ.தணிகாசலம் (செட்டியார்) என்ற பெயரில் விளங்குகிறது.
தியாகராயர் நகர் பகுதி ஒரு கால கட்டத்தில் நீதிக் கட்சியின் கோட்டைக்
கொத்தளமாக விளங்கி வந்திருக்கிறது. தியாகராயர் நகர், பனகல் பூங்கா, டாக்டர் சி.
நடேசன் பூங்கா, சவுந்தர பாண்டியன் பஜார் (பாண்டி பஜார் என்று
கொச்சைப்படுத்தப்பட்டுள்ளதுதான் எத்தகைய கொடுமை!) உஸ்மான் சாலை, ஓ. தணிகாசலம்
சாலை என்று நீதிக் கட்சியின் தலைவர்கள் பெயர் சூட்டப்பட்டுள்ளன என்றால் இதன்
உண்மையைத் தெரிந்து கொள்ளலாம். தியாகராயர் நகரை டி.நகர் என்று சுருக்கிச்
சொல்வதில்கூட சூட்சமம் இருக்கிறதே!
துணைவியார் திருமதி மாணிக்கத்தம்மாள், மகள்கள் நால்வர். 1875இல் பிறந்த
தலைசிறந்த நீதிக்கட்சித் தமிழரான இவர் இந்நாளில் (29.7.1929) மறைவுற்றார்.
குறிப்பு: மேலும் தகவல்களுக்கு நூல்: ஓ.தணிகாசலம் செட்டியார் சமுதாய
நீதியின் மகத்தான தலைவர், எழுதியோர்: பேராசிரியர் மா.இளஞ்செழியன், பேராசிரியர்
ச.ரத்னசாமி.
29.7.2011
நூல் : விடுதலை ஒற்றைப் பத்தி - 4
ஆசிரியர் : கலி.பூங்குன்றன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக