சுயமரியாதைச் சுடரொளி கரூர் வழக்கறிஞர் மானமிகு வீர.கே. சின்னப்பன் - இலக்குமி ஆகியோரின் திருமணத்தில் (27.11.1960) கலந்து கொண்ட தவத்திரு குன்றக்குடி அடிகளார் அவர்கள் நம் நாட்டுக் கோயில்கள்பற்றி அவருக்கே உரித்தான பாங்கில் படம் பிடித்துக் காட்டினார்.
இன்று கோயிலுக்கும், ஹோட்டல்களுக்கும் வித்தியாசமின்றி வியாபார ஸ்தலமாக ஆக்கி விட்டார்கள் காப்பிக் கடையில் விற்கப்படும் பலகாரங்களின் விலை ஒவ்வொன்றும் என்ன என்ன என்று வரிசையாய் பலகையில் விலை போட்டு இருப்பது போல, கோயிலிலும் இறைவனை வழிபடுவதற்கும் இன்ன இன்ன ரேட் (விகிதம்) என்று ஆக்கிவைத்து விட்டார்கள் (விடுதலை - 6.12.1960 பக்கம் 3) என்று குறிப்பிட்டார் தவத்திரு குன்றக்குடி அடிகளார் அவர்கள்.
இதன்மூலம் கோவில் என்பது வழிபாட்டுக்குரிய இடம் என்பதைவிட, வியாபார நிறுவனம் ஆகிவிட்டதைச் சுட்டிக் காட்டுகிறார். கருஞ்சட்டைத் தலைவர் தந்தை பெரியார் அவர்களின் கருத்தை காவி உடையில் சொன்னவர்தான் தவத்திரு குன்றக்குடி அடிகளார்.
தந்தை பெரியாரும், தவத்திரு அடிகளாரும் ஒருவரை ஒருவர் மதிக்கும் பாங்கு குறித்தும், தவத்திரு அடிகளார் உதிர்க்கும் கருத்துகள் வித்தியாசமாக ஒலிப்பது குறித்தும், தவத்திரு அடிகளார் அவர்களைக் கருப்புச்சட்டை சாமியார் என்று பொதுமக்கள் வருணிக்கும் அளவுக்கு நிலைமை இருந்ததை, யார்தான் மறுக்க முடியும்?
அதனால்தான் சென்னை பெரியார் திடலில் விடுதலைப் பணிமனையை திறந்து வைப்பதற்குத் தவத்திரு குன்றக்குடி அடிகளார் அவர்களை அழைத்திருந்தார் தந்தை பெரியார் அவர்கள். அந்த விழாவில் உரையாற்றிய அடிகளார் குறள்போல குறுகத் தரித்து பொன்னால் வேய்ந்த சொல் மணிகளை உதிர்த்தார்.
தமிழர்களின் இல்லங்கள் என்பதற்கு அறிவிப்புப் பலகைபோல் விடுதலை தமிழரது ஒவ்வொருவர் வீட்டிலும் இருக்க வேண்டும். என்றாரே - என்னே இனநலம் - தமிழ்நலம்!
ஆதாரம் : விடுதலை 2.11.1965 தந்தை பெரியார் மறைந்த நிலையில், பெரியார் திடலுக்கு வரும்பொழுதெல்லாம் அய்யா அருங்காட்சியகத்தில் உள்ள அவரது படுக்கையின் அருகே நிற்கும் பொழுதெல்லாம் அடிகளார் தம் கண்கள் பொல பொலவென நீர்மணிகளைக் கொட்டிட - அந்த நெகிழ்ச்சி மிகு நிகழ்ச்சிகளை என் சொல்வது!
1962 சனவரி 6, 7 நாள்களில் சென்னை பெரியார் திடலில் இருநாள் மாநாடுகளைக் கூட்டினார் தந்தை பெரியார். இரண்டாம் நாள் வாக்காளர் மாநாடு. அதன் தலைவர் தவத்திரு குன்றக்குடி அடிகளார் ஆவார்கள். மாநாட்டுக்கு மகாசந்நிதானம் தவத்திரு குன்றக்குடி அடிகளார் எழுந்தருளயிருக்கிறார் என்று தந்தை பெரியார் அறிவித்தார் என்றால், அடிகளாரைத் தந்தை பெரியார் மதித்தவிதம், மாற்றுக் கருத்துள்ளவர்களை அவர்கள் முறையில் எப்படி அழைக்க வேண்டும் என்ற உயரிய பண்பாட்டையும் இதன் மூலம் தந்தை பெரியார் போதனை செய்துள்ளார். அடிகளாரைப்பற்றி எழுதுவதற்குக் காரணம் இன்று அடிகளாரின் நினைவு நாள்! (15.4.1995).
15.4.2011
நூல் : விடுதலை ஒற்றைப் பத்தி - 4
ஆசிரியர் : கலி.பூங்குன்றன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக