வியாழன், 3 ஆகஸ்ட், 2017

கை அசைப்பு




சத்திய சாயிபாபா என்றும் பகவான் பாபா என்றும் பக்தர்களாலும், பக்தியைப் பரப்பி மக்களை மடத்தனத்தில் ஆழ்த்தி பணம் பறிக்கும் முதலைகளான ஊடகங்களாலும் புகழப்படும் சிறீமான் சாயிபாபா 4 வாரகாலம் படுத்த படுக்கையாகக் கிடந்து, செயற்கைப் பிராணவாயு (வென்டிலேட்டர்) அளிக்கப்பட்டு, படிப்படியாக ஒவ்வொரு உறுப்பும் பழுதுபட்டு, அதிகபட்ச துன்பங்களை அடைந்து பரிதாபமாக மரணம் அடைந்தது - மனிதாபிமானம் உள்ளவர்களால் வருத்தப்படக் கூடியதே!

1) அதே நேரத்தில் பகவான் என்று சொல்லிக் கொள்பவர் - இவ்வளவு கஷ்டங்களை அனுப வித்ததிலிருந்தே பகவான் என்று கூறுவதெல்லாம் அசல் பொய் மூட்டை என்பதை உணருவதற்கு பாபா ஒரு உதாரணப் புருசர் ஆகிவிடவில்லையா? சிந்திக்கலாம். 2) பகவான் சாயிபாபா என்பவருக்குச் சொத்து ஏன்? தங்கக் கட்டிகள் ஏன்? வைரக்கற்கள் ஏன்? வங்கிக் கணக்கு ஏன்? இவை எல்லாம் இல்லாமலேயே சாதித்துக் காட்டினால் தானே பகவான் என்று சொல்லுகிறார்களே, அதில் கொஞ்சம் அர்த்தம் இருக்கும் போலிருக்கிறது என்று எண்ணத்தோன்றும்.

சாயிபாபா செத்துப் போன ஒன்றரை மாதங்களுக்குப்பிறகு சாயிபாபா தங்கி இருந்த அறை (யஜீர் வேத மந்திரம் என்று அதற்கு நாமகரணமாம்.) சாயிபாபா அறக்கட்டளை உறுப்பினர்கள் முன்னிலையில் தக்க பாதுகாப்புகள் ஏற்பாட்டில் திறக்கப்பட்டுள்ளது (16.6.2011)

98 கிலோ தங்க நகைகளும், 307 கிலோ வெள்ளி நகைகளும், வைர நகைகளும், ரூ.11 கோடியே 56 லட்சம் ரொக்கப் பணமும் கிடந்தனவாம். இதைத் தவிர உலக நாடுகள் பலவற்றிலும் உள்ள சொத்துக்கள், வங்கி இருப்புகள் எல்லாம் சேர்ந்தால் ஒன்றரை லட்சம் கோடி ரூபாய் சொத்து மதிப்பாம்.

கடவுள் நிலையில் வைத்து மதிக்கப்பட்டவருக்கு இவ்வளவு சொத்துக்கள் ஏன் தேவைப்பட்டன என்ற கேள்வி சாதாரண மனிதனுக்குக்கூட ஏற்படக் கூடிய சாதாரண கேள்வியாகும்.

உடலுழைப்பாலோ தொழிற்சாலை வைத்தோ, வியாபாரம் செய்தோ இவ்வளவு சொத்துக்களையும் அவர் சேர்க்கவில்லை. மக்களின் மூடத்தனம்தான் அவர்தம் முதலீடு! சாகசமும் - தந்திரமும்தான் அவர் கையாண்ட தொழில்திறன்! பச்சையாகச் சொன்னால் மக்களை ஏமாற்றிச் சுரண்டியது தான் இவ்வளவு பெரும் தொகை.

3) அந்த அறையில் ஏராளமான தங்கச் சங்கிலிகளும் (Chains) மோதிரங்களும் இருந்தனவாம்.

புரியவில்லையா?

கை அசைப்பில் சங்கிலியையும், மோதிரங்களையும் கொண்டு வருவதாக ஏமாற்றி வந்தாரே - அவை எல்லாம் எந்த வெங்காயமும் கிடையாது. இத்தொழிலுக்கான கையிருப்புதான் அறையில் கிடந்த அவை! இந்த சங்கிலி மோதிரங்களைத்தான் கையில் மறைத்து வைத்து சாதுர்யமான முறையில் வேகமான கை அசைப்பில் (Quickness) கொண்டு வருவதுபோல் காட்டி மக்களை மயக்கி, அசத்தும் செயலாகும். பிரதமர் நரசிம்மராவ் கலந்து கொண்ட விழா ஒன்றில் கை அசைப்பில் சங்கிலி எப்படி வந்தது என்பது வீடியோவில் பதிவாகி, ஊர் சிரித்தது என்பதையும் நினைவுக்குக் கொண்டு வருகிறோம்.


18.6.2011

நூல் :  விடுதலை ஒற்றைப் பத்தி - 4
ஆசிரியர் : கலி.பூங்குன்றன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

அயோத்திதாசப் பண்டிதர், இரட்டைமலை சீனிவாசன் ஆகியோரைத் திராவிடர் கழகம் தவிர்க்கிறதா?

திராவிடர் கழகத்தை, அதன் நன்மதிப்பை, அதன் பிறப்பொக்கும் கோட்பாட்டை, சமூக நீதி சாதனைகளை மறைக்க இன எதிரிகள் தொடர்ந்து முயற்சிக்கின்றனர். அதற்...