கரூர் மாநகரில் மனுதர்ம எரிப்புப் போராட்ட விளக்க மாநாடு திருச்சி மாவட்ட திராவிடர் கழகத்தின் சார்பில் வழக்குரைஞர் வீர.கே. சின்னப்பன் நினைவுப் பந்தலில் நடைபெற்றது. பாவலரேறு பெருஞ்சித்திரனார் தலைமை வகித்தார்.
அம்மாநாட்டில் ஜாதி ஒழிப்பிலும், சம வாய்ப்புச் சமூகத்தை உருவாக்குவதிலும் ஆழ்ந்த நம்பிக்கையுள்ள திராவிடர் கழகமானது தனது எதிர்ப்பையும், வெறுப்பையும் காட்டும் அறிகுறியாக மே 17ஆம் தேதியன்று (1981) நாடெங்கும் மனுதர்மத்தின் முக்கிய சுலோகங்களை உள்ளடக்கிய அச்சுத்தாளை திறந்த வெளியில் கொளுத்தி, நமது ஜாதி ஒழிப்பு உணர்வைப் பகிரங்கமாக வெளிப்படுத்துவது என்று அறிவிக்கப்பட்டது. தடை விதிக்கப்பட்டால் தடையை மீறிக் கொளுத்துவது என்றும் அறிவிக்கப்பட்டது.
அம்மாநாட்டில் மராட்டிய மாநில தாழ்த்தப்பட்டோர் விடுதலை இயக்கத் தலைவர் தலித் பந்தர் தலைவர் அருண்காம்ப்ளே கலந்து கொண்டு சங்கநாதம் செய்தார்.
தமிழ்நாடெங்கும் பெண்களே தலைமை வகித்துப் பல்லாயிரக்கணக்கானோர் மனுதர்ம எரிப்புப் போராட்டத்தில் ஈடுபட்டு கைதானார்கள். சென்னையில் கழகப் பொதுச் செயலாளர் கி. வீரமணி அவர்கள் கைது செய்யப்பட்டார்.
மனுதர்ம எதிர்ப்புப் போராட்டத்தினை வெறும் தடை மூலம் தடுத்து நிறுத்தலாம் என்று மனப்பால் குடித்த அன்றைய எம்.ஜி.ஆர். அரசு அதில் தோல்வி கண்டது.
ஜாதியை ஒழிக்க வேண்டும் என்று உண்மையிலே விரும்பும் எவரும் - அதற்கு மூல ஊற்றாக இருக்கக் கூடிய இந்துமத ஸ்மிருதிகளை, இராமாயணம் போன்ற இதிகாசங்களைக் கொளுத்தத்தானே வேண்டும்?
இன்றைக்கு யார் மனு தர்மத்தைத் தூக்கிப் பிடிக்கிறார்கள் - இதற்கான எதிர்ப் போராட்டம் எல்லாம் தேவையா என்று நுனிப்புல் மேயும் மனப்பான்மையில் போகிற போக்கில் கேட்போர் உண்டு.
பூனாவில் நடைபெற்ற (1981 டிசம்பர்) ஆர்.எஸ்.எஸ். அணி வகுப்பில் மனுதர்ம சாஸ்திர நூலை அலங்கரித்து எடுத்துச் சென்றார்களே!
இப்பொழுதுகூட திருவாளர் சோ ராமசாமி துக்ளக் இதழில் மனுதர்மத்தைத் தூக்கிப் பிடித்துத் தத்துவார்த்த முலாம் பூசிக் கொண்டு திரிகிறாரே!
பல்லாயிரம் வருடங்களுக்கு முன்பாக ஆழ்ந்த சிந்தனை (மனுதர்மம்) இங்கே இருந்திருக்கிறது என்பதைக் கண்டு மேல் நாட்டு அறிஞர்கள் கூட வியந்து பார்க்கின்றனர். நாம்தான், மனு ஸ்மிருதியை இகழ்ந்து பேசுவது பெருமை என்று நினைக்கிறோம் (துக்ளக் 24.11.2010) என்று இந்த கால கட்டத்திலும் துணிச்சலாக எழுதுகிறார் என்றால், அந்தத் தன்மையை நினைத்துப் பார்க்க வேண்டும்.
சூத்திரன் ஏழு வகைப்படுவான் என்றும், அதில் ஒன்று விபசாரி மகன் என்றும் (மனு தர்மம் அத்தியாயம் 8 சுலோகம் 415) எழுதி வைத்திருக்கும் மனுதர்மம் மிக உயர்ந்தது என்றும் மேல்நாட்டவர்களும் பாராட்டுகிறார்கள் என்றும் ஒரு பார்ப்பனனால் இன்றைக்குக்கூட எழுத முடிகிறது என்றால் இதன் பொருள் என்ன?
நம்மைத் தேவடியாள் மகன் என்று சொல்வதிலே பெருமைப்படக் கூடிய ஆணவக்காரர்கள் இன்றும் இருக்கிறார்கள் என்று தானே கொள்ள வேண்டும்?
சூத்திரன் என்றால் ஆத்திரம் கொண்டு அடி! என்னும் முழக்கம் இந்தக் கால கட்டத்திலும் தேவைப்படுகிறது அல்லவா?
17.5.2011
நூல் : விடுதலை ஒற்றைப் பத்தி - 4
ஆசிரியர் : கலி.பூங்குன்றன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக