நான் அய்யாவுக்கு (பெரியாருக்கு) பத்து வயது இளையவன். எனக்கு மூத்தவரை வாழ்த்துவதற்கு நான் தகுதி உடையவன் அல்லன். பெரியார் அவர்கள் இன்னும் 100 வயதுவரை வாழவேண்டும். அவர் ஏற்படுத்திய புரட்சிகளின் பயனை வெற்றிகரமாகப் பார்வையிடவேண்டும். அவரது புரட்சிகள் பயங்கரமாகத் தோன்றலாம். வேகமாகப் போகிறார் என்று படும். அவரது புரட்சி பெரும் புரட்சி. எனக்கு வெகுநாளாக ஒரு யோசனை உண்டு. பொது இடம் ஒன்றில் பெரியார் அவர்களின் சிலை இருக்க வேண்டும் என்ற ஆசை உண்டு. இதை நான் மந்திரிகளிடமும் கூறியிருக்கிறேன். இந்த நிலத்தில் பெரிய மண்டபம் கட்டி பெரியார் அவர்களின் நல்ல சிலையை வைக்கும்படி திராவிடர் கழகத்தினரைக் கேட்டுக் கொள்கிறேன். பெரியார் நீடூழி வாழ விரும்புகிறேன்.
தந்தை பெரியார் அவர்கள் 78 ஆம் ஆண்டு பிறந்த நாளில் (17-9-1956) வாழ்த்துரையுடன் ஆக்கரீதியான யோசனையைச் சொன்ன டாக்டர் பி. வரதராசலு நாயுடு அவர்களின் பிறந்த நாள் இந்நாள் (4.6.1887).
டாக்டர் வரதராசலு அவர்களிடத்தில் இந்து மகா சபையின் அனுதாபம் உண்டு என்றாலும், பார்ப்பனர் - பார்ப்பனர் அல்லாதார் உணர்ச்சியில் கூர்மையான ஆயுதம் என்பதில் அய்யமில்லை.
நெல்லை மாவட்டம் சேரன்மாதேவியில் நடத்தப்பட்ட குருகுலத்தில் ஜாதி வேறுபாடு காட்டப்பட்டது. வ.வே.சு. அய்யர்தான் அந்தக் குருகுலத்தின் பொறுப்பாளர். சேரன்மாதேவி குருகுல ஜாதிப் பிரச்சினை அன்றைய சென்னை மாகாணத்தில் வெடித்துச் சிதறிய எரிமலை போன்ற பிரச்சினையாகும். அது தொடர்பாக திருச்சியில் காங்கிரஸ் செயற்குழு கூட்டப்பட்டது (27-4-1925). கூட்டத்திற்கு மாகாண காங்கிரஸ் தலைவர் டாக்டர் வரதராசலு தலைமை வகித்தார்.
காரசாரமான வாக்குவாதங்கள் நடைபெற்றன. பார்ப்பன உறுப்பினர் ஒருவர் வ.வே.சு. அய்யர் வெவ்வேறு இடங்களில் பந்தி வைத்ததில் என்ன தவறு இருக்கிறது? பாரத கலாச்சாரத்தைக் காப்பாற்றவே குருகுலம் நடத்தத் தீர்மானிக்கப்பட்டது. பாரத கலாச்சாரம் என்பது என்ன? வேதங்களிலும், சாஸ்திரங்களிலும் வருணப்பாகுபாடும், ஜாதிப் பாகுபாடும் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கின்றன. வேத விதிமுறைப்படிதானேஅய்யர் நடந்து கொண்டிருக்கிறார். இதில் என்ன தவறு? என்று கேட்டார்.
ஜாதிப் பாகுபாட்டுக்கும், உயர்வு தாழ்வுக்கும் வேதமும், சாஸ்திரமும் விதி வகுத்திருந்தால், அந்த வேதத்தையும் சாஸ்திரத்தையும் தீயிட்டுக் கொளுத்த வேண்டும் என்றார் தந்தை பெரியார்.
ஆரியர்களின் வேதகால கலாச்சாரம்தான் நம்முடைய கலாச்சாரமா? அதற்கு முந்திய திராவிடக் கலாச்சாரத்தில், ஜாதிப் பிரிவினைக்கே இடமில்லையே! அந்த உயர்ந்த கலாச்சாரத்தைத் தான் நாம் பின்பற்ற வேண்டும் என்று தலைமை வகித்த டாக்டர் வரதராசலு வெடித்தார்.
ராஜாஜி, டாக்டர் டி.எஸ்.எஸ். ராஜன், கே. சந்தானம் அய்யங்கார், டாக்டர் டி.வி. சுவாமிநாதன் ஆகிய நான்கு பார்ப்பனர்களும் உடனடியாக காங்கிரஸ் செயற் குழுவிலிருந்து விலகுவதாகக் கடிதம் கொடுத்தனர் என்றால், பார்ப்பனர்களின் யோக்கியதையைத் தெரிந்து கொள்ளலாமே.
4.6.2011
நூல் : விடுதலை ஒற்றைப் பத்தி - 4
ஆசிரியர் : கலி.பூங்குன்றன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக