சென்னையில் பார்ப்பனரல்லாத சமூகத்தினர் ஒரு பிரபலஸ்தர். அச் சமூகத்துக்கு ஆக உழைத்தவரென்று பெரிதும் பாராட்டப் பெற்றவரான காலம் சென்ற தணிகாசலம் செட்டியார் பேரால் இருந்த ஒரு தெருவுக்கு அப்பெயர் எடுக்கப்பட்டு ஒரு பார்ப்பனர் பெயர் அதாவது ரங்கசாமி அய்யங்கார் தெரு என்று பெயர் இடப்பட்டு விட்டது. இது சாதாரண சங்கதி என்று சொல்லிவிட முடியாது. செட்டியாருடைய பெயர் மறைந்து விட்டதே என்பதற்கு ஆக நாம் இதைப் பெரிதாக்க வரவில்லை. இதன் கருத்து என்ன என்பதைப் பொது மக்கள் உணர வேண்டுமென்பதே நமது நோக்கம்.
சீனிவாசபுரம், தாசில் சீனிவாசபுரம், முனிசீப்பு சீனிவாசபுரம், சிவகாமிபுரம், ராஜகோபாலபுரம் என்பது 100 கணக்கான அய்யர், அய்யங்கார், ஆச்சாரியார், சாஸ்திரி வீதிகள் இருக்க ஒரு பார்ப்பனரல்லாத பிரபலஸ்தருடைய அதுவும் சாகும் வரை 30 வருட காலம் கவுன்சிலராய் இருந்தவரின் பெயர் ஒரு வீதிக்கு இருந்ததை மாற்றி அதற்குப் பதிலாக - ஒரு பார்ப்பனர் பெயரைக் கொடுப்பது என்றால் அதுவும் ""ஜனநாயகத்தின் பேரால் அமைக்கப்பட்ட ஒரு ஸ்தாபனத்தின் மெஜாரிட்டி ஓட்டைக் கொண்டு செய்யப்படுகின்ற காரியம்'' என்பதே இப்படி இருக்கும்படியாய் இருந்தால் இனி அவர்களது ஆட்சியுள்ள ஸ்தாபனங்களில் நம் மக்கள் கதி என்ன ஆகும் என்று சொல்ல வேண்டுமா? என்று கேட்கின்றோம். இந்த காரியம் இதுவரை பார்ப்பனர்கள் செய்து வந்த கொடுமைகளில் எல்லாம் மிக மிக கொடுமையான காரியம் என்றுதான் சொல்ல வேண்டும். இனி இந்த பார்ப்பன ஆதிக்கத்தால் என்ன ஆபத்து நாம் எதிர்பார்க்க வேண்டியது பாக்கி இருக்கிறது என்று கேட்கின்றோம்.
- குடிஅரசு, 07.08.1938
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக