தமிழ் மொழிக்கு அருந்தொண்டு ஆற்றிய - திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம்
தந்த அறிஞர் கால்டுவெல் பாதிரியார் 50 ஆண்டு காலம்
வாழ்ந்த நெல்லை மாவட்டம் இளையான்குடி வீட்டினைப் புதுப்பித்து மானமிகு கலைஞர்
தலைமையிலான தி.மு.க. அரசு நினைவுச் சின்னமாக நாட்டுக்கு அர்ப்பணித் துள்ளது.
முதல்வர் கலைஞர் காணொலிக் காட்சி மூலம் இன்று திறந்து வைத்தார்.
தமிழுக்கு உழைத்தவர்களையெல்லாம் வரலாற்றில் வாழ வைத்த பெருமை தி.மு.க. அரசுக்கு
உண்டு.அதிலும் குறிப்பாக கால்டுவெல் அவர்களுக்குச் செய்யப்பட்டுள்ள சிறப்பு
மிகமிகப் போற்றுதலுக்கு உரியது.
கால்டுவெல் பற்றி மொழிஞாயிறு தேவநேயப் பாவாணர் கூறுகிறார்:
மொழி நூலானது உலக மொழிகள் எல்லாவற்றையும் தழுவும் ஒரு பொதுக்கலை. உலக
மொழிகள் எல்லாவற்றையும் ஆரியம் (Aryan), சேமியம் ((Semitic) துரேனியம் Turanian) என்னும் முப்பெருங்குலங்களாகப் பிரித்துள்ளார் மாக்கசு முல்லர்.
அவற்றுள் துரேனியத்தைச் சேர்ந்ததாகக் கருதப்படும் திராவிடக் குடும்பத்தின்
மொழிகளைத் திறம்பட வகுத்துக் காட்டியவர் கால்டுவெல். இங்ஙனமே பிறரும் பிற
குடும்பங்களை வகுத்துக் காட்டி உள்ளனர். மேற்கூறிய முக்குலங்கட்கும் உள்ள தொடர்பை
ஆராய்வதே இந்நூலின் நோக்கம். அவற்றுக்கொரு தொடர்புண்டென்று; அஃதாவது அம்மூன்றும் ஒரு குலத்தினின்றும் கவைத்திருக்க வேண்டுமென்று
சென்ற நூற்றாண்டிலேயே மாக்கசு முல்லர் (Max Muller திடமாகக் கூறிவிட்டார்.
அம்மூலத்திற்குத் திராவிடம் மிக நெருங்கியதென்று கால்டுவெல் கூறியுள்ளார்.
இக்கூற்றை என்னாலியன்ற வரை முயன்று மெய்ப்பித்திருக்கிறேன் - என்று மொழி ஞாயிறு
அவர்களின் உயர்ந்த படைப்பான ஒப்பியன் மொழி நூல் எனும் நூலின் முன்னுரையில்
குறிப்பிட்டுள்ளார் என்றால் முந்நூறு ஆண்டுகளுக்கு முன்பே இத்திசையில் சிந்தனையை
செலுத்திய ஒரு வெளிநாட்டு அறிஞரை - அயர்லாந்துக்காரரை - அதுவும் வெளிநாட்டு
மதத்தைச் சேர்ந்த கிறித்துவப் பாதிரியாரை - தமிழர்கள் எவ்வளவுத் தூரம் தூக்கி
வைத்தும் புகழ வேண்டுமே!
தெலுங்கு ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்பும், கன்னடம் 1500 ஆண்டுகளுக்கு முன்பும், 750 ஆண்டுகளுக்கு முன்பு மலையாளமும் ஆரிய மொழியான சமஸ்கிருத கலப்பால்
பிரிந்தன என்பது தமிழ் அறிஞர்கள் ஆய்ந்து சொன்ன அதே கருத்தை தந்தை பெரியார்
அவர்களும் கூறியிருக்கிறார் என்பது சுட்டிக் காட்டத் தகுந்ததாகும்.
கிறித்துவப் பாதிரியார்கள் செய்துள்ள தமிழ்த் தொண்டில் கால்டுவெல்
இயற்றிய திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம் அடிக்கோடிட்டுக் குறிப்பிடப்பட வேண்டிய
பொன்னேடாகும். ஓவியக் கல்லூரியில் பயின்றவர்; 1838 முதல் மரணத்தின் வாயிலில் புகும் வரை ( 1891 ஆகஸ்ட் 28) தமிழ்த் தொண்டாற்றிய பெருமகனாரை நன்றி
உணர்வோடு போற்றுவோம்!
17.2.2011
நூல் : விடுதலை ஒற்றைப் பத்தி - 4
ஆசிரியர் : கலி.பூங்குன்றன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக