- பாவாணர்
தஞ்சாவூரை ஆண்ட விசயராகவ நாயக்கர் தம் குடிகளின் சேமத்தைக் கருதி, நாள்தோறும் தாம் உண்ணுமுன் பன்னீராயிரம் பிராமணருக்கு உண்டி படைத்து வந்தார். ஓராண்டு பன்னாள் விடாப்பெருமழை பொழிந்து எங்கும் வெள்ளமாகி விட்டதனால் உண்டி சமைக்க விறகு கிடைக்கவில்லை. அதனால், அரண்மனையின் ஒரு பகுதியை இடித்து, அதிலுள்ள உத்தரம், துவாக்கட்டை, கைமரம், சட்டம், கம்பம், நிலை, கதவு, பலகணி முதலிய எல்லா மர உறுப்புக்களையும் வெட்டி யெரிக்க நாயக்கர் உத்தரவிட்டார். அவை தீர்ந்த பின், பிராமணரூண் தடையுண்ணவாறு, அரண்மனையிலுள்ள விலையுயர்ந்த பட்டாடைகளெல்லாம் எண்ணெயில் துவைத்து எரிக்கப்பட்டன.
இந்நிலையில் திருவரங்க நாய்ச்சியாரின் விலை மதிக்க முடியாத வயிர மூக்குத்தி களவு போய்விட்டது. அங்குள்ள இடவகன் (°தானிகள்) ஆன பிராமணப் பூசகன் திருடினான் என்று அக்கோவிலதிகாரிகள் அவனை நையப்புடைத்தனர். அவன் அடிதாங்காது நாயக்கரிடம் வந்து முறையிட்டான்.
உடனே ஒரு பிராமணப்பெண், அரங்கநாயகி தன் மீதேறியதாக நடித்து அணங்காடி “பிராமணவுண்டி சமைக்க அரண்மனைப் பட்டாடைகளை எண்ணெய்த் தோய்த்தெரித்தபோதெழுந்த புகையைப் பொறுக்கமுடியாது, மடைப்பள்ளியாரெல்லாம் ஓடிப்போய்விட்டனர். அரங்க நாயகியே ஒரு பிராமணமடைமகளாக வந்து சமைத்தாள். அவளும் புகையால் முகத்திலும் மூக்கிலும் தாக்குண்டு, அங்கிருந்த கழுநீர்த் தொட்டியில் மூக்குச் சிந்தியபோது, அவள் மூக்குத்தி அத்தொட்டிக்குள் விழுந்து இன்னும் அங்கேயே கிடக்கின்றது. அதற்காகக் கோயில் பூசகனை அடிப்பது அறங்கடை” என்று விளம்ப, நாயக்கரும் அங்ஙனமே மூக்குத்தியைக் கண்டெடுத்து,அரங்கநாயகியே தன் அரண்மனைக்கு வந்தருளினாள் என்று அளவற்ற மகிழ்ச்சிக் கொண்டாடி, அம்மூக்குத்திப்போல் என் மூக்குத்தியும் நாய்ச்சியார் பொற்படிமை ஒன்றும் செய்வித்து, மேளதாளங்களுடன் திருவரங்கத்திற்கு அட்டோலக்கமாய் அனுப்பி வைத்தார்.
(வெல்லும் தூய தமிழ் - பிப்ரவரி 2010 பக்கம். 45)
நூல் : பார்ப்பனர் புரட்டுக்குப் பதிலடி
ஆசிரியர் : கவிஞர் கலி.புங்குன்றன்
நூல் : பார்ப்பனர் புரட்டுக்குப் பதிலடி
ஆசிரியர் : கவிஞர் கலி.புங்குன்றன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக