ஞாயிறு, 16 ஜூலை, 2017

பைத்தியம்?


மதுரை மாவட்டம் காஞ்சரம்பேட்டை அருகில் ஒரு கிராமம்; பெயர் அண்டமான் என்பது.

இந்த ஊரில் ஒரு விசித்திரம்  யாருமே இந்த ஊரில் செருப்பு அணிந்து நடப்பதில்லையாம்.
இன்று நேற்று அல்ல தலைமுறை தலைமுறையாக இந்த நிலைதானாம்.

ஒருக்கால் ஊரில் செருப்புத் தைப்பவர்கள் இல்லையோ! அங்கு இல்லையென்றால் என்ன, பக்கத்து ஊரில் போய் வாங்க முடியாதா, என்ன?

செருப்புகள் வீட்டில் இருக்கத்தான் செய்கின்றன. வெளியூர்களுக்குச் செல்லும்போது, செருப்புகளைக் கையில் எடுத்துக்கொண்டு போய், ஊர் எல்லையைத் தாண்டியபின் செருப்பை அணிந்துகொண்டுதான் போகிறார்கள். அதுபோல இந்த ஊருக்குள் வருபவர்களும் ஊர் எல்லையின் ஆரம்பம்வரை செருப்புகளை அணிந்துகொண்டுதான் வருகிறார்கள். ஊருக்குள் நுழையும்போது மட்டும் காலில் இருந்த செருப்பு கைக்கு மாறிவிடுகிறது.

என்ன ஒரே மர்மமாக இருக்கிறதே  இதில் குடிகொண்டு இருக்கும் சூட்சமம்தான் என்ன? அதெல்லாம் ஒரு மண்ணாங்கட்டியும் இல்லை.

இந்த ஊரில் மந்தையம் மன், கருப்பசாமி கோயில்கள் இருக்கின்றனவாம்!

மக்களைக் காக்கும் இந்த சாமிகள் வாழும் ஊருக்குள் செருப்புப் போடுவது மரியாதை இல்லையாம். அதனால்தான் யாரும் செருப்புப் போட்டுக்கொள்வதில்லையாம். (தகவல்: தினகரன் வெள்ளிமலர்).

செருப்புப் போட்டால் மரியாதை குறைவு என்றால், இந்த சாமிகள் இருக்கும் ஊரின் மண்ணைக்காலால் மிதிக்கலாமா? ஒருவன் கால் இன்னொருவன்மீது பட்டால் அவமானகரமாகத்தானே நினைக்கிறார்கள். அதன் காரணமாக அடிதடி சண்டைக்கூட நடப்பது உண்டே! அப்படியிருக்கும்போது மந்தையம்மன் குடியிருக்கும் மண்ணை மிதிக்கலாமா?

அந்த ஊரில் உள்ள குளத்தில் கால் கழுவலாமா? அந்த ஊர் மண்ணில் மலம் கழிக்கலாமா? சிறுநீர் பாய்ச்சலாமா? வாய்க் கொப்பளிக்கலாமா?

இந்த ஊரில் மட்டும்தான் சாமி கோயில்கள் இருக்கின்றனவா? வெளியூர்களிலும் கோயில்கள் இருக்கத்தானே செய்கின்றன.அங்கெல்லாம் போகும்போது மட்டும் இதே ஊர்க்காரர்கள் செருப்பு அணிந்துகொண்டு செல்லுகிறார்களே இது என்ன போக்கிரித்தனம்? அடுத்த ஊர் சாமி என்றால் இளக்காரமா? அந்தச் சாமிகளுக்கெல்லாம் சக்தி-யில்லை என்று முடிவு கட்டிவிட்டார்களா?

இந்து மதத்தில் எதுதான் சாமியில்லை? பன்றிகூட மகாவிஷ்ணுவின் அவதாரம் தான்! நாய்கூட பைரவக் கடவுளின் வாகனம்தான். அப்படியிருக்கும்போது, அட நாயே! என்று ஒருவனைத் திட்டலாமா?

பக்திப் பையத்தியம் பிடித்தால் மலம்கூட மலர்தானோ? ராமகிருஷ்ண பரமஹம்சர் தம் மலத்தையே புசித்தார் என்பதுதான் அவருக்குள்ள பெருமையாம்! சிரியுங்கள்! பின்பொறியாலும் சிரியுங்கள்!!

5.6. 2010 விடுதலை ஒற்றைப்பத்தி - 3

நூல் : ஒற்றைப்பத்தி - 3

ஆசிரியர் : கவிஞர் கலி.பூங்குன்றன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

அயோத்திதாசப் பண்டிதர், இரட்டைமலை சீனிவாசன் ஆகியோரைத் திராவிடர் கழகம் தவிர்க்கிறதா?

திராவிடர் கழகத்தை, அதன் நன்மதிப்பை, அதன் பிறப்பொக்கும் கோட்பாட்டை, சமூக நீதி சாதனைகளை மறைக்க இன எதிரிகள் தொடர்ந்து முயற்சிக்கின்றனர். அதற்...