ஞாயிறு, 16 ஜூலை, 2017

திருப்(பா)தி!


சாஸ்திரம், சம்பிரதாயம், ஆகமம், ஆச்சாரம், ஆண்டாண்டுக் காலமாக வந்த பரம்பரைப் பழக்கம் என்று எதற்கெடுத்தாலும் ஆஸ்திகச் சிகாமணிகள் சீறுவார்கள்; அதில் சிறு மாறுதல் ஏற்பட்டாலும் அய்யயோ போச்சு! போச்சு!! என்று அங்கலாயிப்பார்கள்.

ஆனால், அவர்களின் சுரண்டல் கேந்திரமான கோயில்களில் மட்டும் நவீன காலத்துக்கேற்ப நர்த்தனம் புரிவார்கள். அப்பொழுதெல்லாம் ஆகமம், சம்பிரதாயம், சாஸ்திரோத்தங்கள் பற்றி மூச்சுவிட மாட்டார்கள்.

இப்பொழுது ஒரு செய்தி வந்திருக்கிறது. திருப்()பதி வெங்கடாசல()பதி இருக்கிறாரே  இந்தியாவின் பெரிய கல் முதலாளி. அவரைப்பற்றி வண்ண வண்ணமாக விளம்பரப்படுத்திக் கொண்டே இருப்பார்கள். கோடிக்கணக்கில் வருவாய்க் கொட்டும் தொழில் நிறுவனமாயிற்றே! அடிக்கடி விளம்பர யுக்திகளை மாற்றி மாற்றி கையாண்டால்தானே வியாபாரம் படுத்துவிடாமல் போய்க் கொண்டேயிருக்கும்  அதில் கொஞ்சம் கோளாறானால் அய்யப்பன் கோயில்காரர்கள் அடித்துக் கொண்டு போய்விடுவார்களே! அதில் ஆந்திராவுக்கும், கருநாடகத்துக்கும் கடும் போட்டியல்லவா! (வெங்கடேச பெருமாள் ஏள  அய்யப்பன் என்றும் கொள்க!).

திருப்பதி வெங்கடேசப் பெருமாளுக்கு நாள்தோறும் நடக்கும் சேவைகள், அபிசேஷகங்கள், நள்ளிரவுக் காட்சிகள், திருவிழாக்களை இனி செல்போனிலேயே நேரிடையாகப் பார்க்கலாமாம்!

(தொலைத்தொடர்புத் துறை கொஞ்சக் காலமாக இதுபோன்ற வேலைகளில்தான் இறங்கி இருக்கிறது).
இப்படியே போனால் இன்னும் சில அறிவிப்புகள் வரலாம். திருப்பதி ஏழுமலையான் அபிஷேகம் இனி ஷெவர்பாத் முறையில் நடக்கும். சாமி உலா இனி மோட்டார் பைக்கில் இருக்கும்.

கிராஃபிக்ஸ் முறையில் ஏழுமலையானைப் பேச வைப்பார்கள். ஆட வைப்பார்கள். சுப்ரபாதம் பாடலை ஏழுமலையான் வாயசைக்க பின்னணிக் குரலில் இசைப்பார்கள்.

இன்னும் என்னென்ன படு தமாஷ்கள் எல்லாம் நடக்கப் போகின்றனவோ! ஒரு வகையில் அதுவும் நல்லதுதான். சாமி சமாச்சாரங்கள் எல்லாம் தமாஷாகி நாட்டு மக்கள் மத்தியில் மரியாதையையும் இழந்து அந்த உலோகச் சாமிகள் காயலாங்கடைக்குப் போனால் சரி!

21.12.2005 (விடுதலை ஒற்றைப்பத்தி - 2)

நூல் : விடுதலை ஒற்றைப்பத்தி - 2,

ஆசிரியர் : கலி.பூங்குன்றன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

அயோத்திதாசப் பண்டிதர், இரட்டைமலை சீனிவாசன் ஆகியோரைத் திராவிடர் கழகம் தவிர்க்கிறதா?

திராவிடர் கழகத்தை, அதன் நன்மதிப்பை, அதன் பிறப்பொக்கும் கோட்பாட்டை, சமூக நீதி சாதனைகளை மறைக்க இன எதிரிகள் தொடர்ந்து முயற்சிக்கின்றனர். அதற்...