தமிழர் தலைவர் பிறந்த இதே நாளில் பிறந்தவர் அவரின் குருநாதரான ஆ. திராவிடமணி (1914).
சிறுவன் சாரங்கபாணி, வீரமணியானதற்கும், தலைசிறந்த சொற்பொழிவாளராக உருப்பெற்றதற்கும், தந்தை பெரியார் அவர்களின் கரங்களைப் பற்றியதற்கும், திராவிடர் கழகப் பொதுச்செயலாளராக, தலைவராக, தமிழர் தலைவராக பரிணாமம் பெற்றதற்கும் அடித்தளமிட்ட அவரின் ஆசிரியர் ஆ. திராவிடமணி அவர்களுக்கு ஆயிரம் ஆயிரம் வணக்கங்களையும், நன்றியினையும் பெருமிதத்தோடு தெரிவித்துக் கொள்வோம் இந்நாளில். அவரின் சொந்த ஊர் பொன்னேரியை அடுத்த ஆசான் புதூராகும். அந்தக் காலத்திலேயே பி.ஏ. பட்டதாரி என்பது சாதாரணமானதல்ல. தொடக்கத்தில் கடலூரில் இஸ்லாமியர்களால் நடத்தப்பட்ட இடைநிலைப் பள்ளியில் தலைமை ஆசிரியராகப் பணியாற்றி, அதன்பின் மணிலா மார்க்கெட்டிங் சொசைட்டியில் அலுவலைத் தொடர்ந்தார். அப்போது அவரின் சக எழுத்தர்தான் பிற்காலத்தில் தமிழக அமைச்சராக வந்த திரு.
ஏ. கோவிந்தசாமி ஆவார்கள்.
ஆசிரியர் திராவிடமணி தங்கியிருந்த இடம் இராமலிங்க பக்த ஜனசபையாகும். மாலை நேரத்தில் மாணவர்களுக்குத் தனியே பாடம் (டியூசன்) சொல்லிக் கொடுப்பார். பள்ளிப் பாடங்களோடு, தந்தை பெரியார் அவர்களின் பகுத்தறிவுக் கருத்துகளையும் குழைத்துக் கொடுப்பார். குடிஅரசு, திராவிட நாடு இதழ்களையும் கொடுத்துப் படிக்கச் செய்வார். அந்தப் பட்டறையில் தயாரிக்கப்பட்ட போர்வாள்தான் நமது ஆசிரியர் கி.
வீரமணி. அவரின் இயற்பெயர் சுப்பிரமணியம்
தன்னிடத்தில் பாடம் பயின்ற மாணவர்களின் பெயர்களையெல்லாம் நல்ல தமிழில் மாற்றம் செய்தார்.
ஆசிரியர் திராவிடமணி என்னை ஒரு வளர்ப்புப் பிள்ளைபோல கருதி பகுத்தறிவையும், பாட அறிவையும், கல்வியையும் அளித்து வருகிறார் என்பதால், என் தந்தையார் அவரிடமே, என்னை முழுமையாக ஒப்படைத்ததுபோல் ஆக்கிவிட்டார் என்று கூறுகிறார் நமது ஆசிரியர் வீரமணி அவர்கள். (ஆதாரம்: அய்யாவின் அடிச்சுவட்டில் பக்கம் 29).
ஆசிரியர் திராவிட மணியைச் சுற்றி 20, 30 மாணவ சீடர்கள் எப்பொழுதும் சூழ்ந்து கொண்டே இருப்பார்கள். வாங்கும் சம்பளத்தில் பெரும்பகுதி கட்சிப் பணிக்கே!
குடும்பம் ஒரு பக்கம், இவர் இன்னொரு பக்கம்!
வெளியூர்ப் பேச்சாளர்களை வரவழைப்பது, வழிச் செலவுக்குப் பணம் கொடுப்பது, தங்க வைப்பது, உணவளிப்பது எல்லாமே அவர் செலவுதானாம்!
அவர் எழுதிக் கொடுத்ததை மனப்பாடம் செய்து மேசைமீது ஏற்றப்பட்டு பேச ஆரம்பித்தவர்தான்
இன்றைய நாடறிந்த தலைசிறந்த சொற்பொழிவாளரான நம் தலைவர் வீரமணி. அப்படி சிறுவன் வீரமணி பேசிய பேச்சைக் கேட்டுத்தான் திராவிடர் கழகத்தின் திருஞான சம்பந்தர் என்று அறிஞர் அண்ணா (29.7.1944, திருப்பாதிரிப்புலியூர்) பாராட்டினார். ஆ. திராவிடமணி அவர்கள் திராவிடர் கழகத்தின் கூட்டுப் பொதுச்செயலாளராகவும் பிற்காலத்தில் இருந்திருக்கிறார் என்பது முக்கியமான வரலாற்றுக் குறிப்பாகும்.
ஆசான் திராவிடமணியையும், அவர்தம் சீடர் மானமிகு வீரமணியையும் ஒரே பிறந்த தேதியில் சந்திப்பதும், சிந்திப்பதும் எவ்வளவுப் பொருத்தமானது, விசித்திரமானது!
வாழ்க திராவிடமணி!
2.12.2009 (விடுதலை ஒற்றைப்பத்தி - 2)
நூல் : விடுதலை ஒற்றைப்பத்தி - 2,
ஆசிரியர் : கலி.பூங்குன்றன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக