ஞாயிறு, 16 ஜூலை, 2017

செம்மொழி மாநாடு


உலகச் செம்மொழி மாநாடு கோவையில் வரும் ஜூன் திங்களில் வெகுசிறப்புடன் நடைபெறுகிறது. உலகின் பல்வேறு நாடுகளிலிருந்தும் தமிழ் அறிஞர்கள் பங்கு கொள்ள இருக்கிறார்கள்.

மாநாட்டுக்கான குழுவினர் போர்க்கால அடிப்படையில் பணிகளைத் தொடங்கி விட்டார்கள். கலைஞர் அவர்கள் ஒரு பணியைத் தொடங்கிவிட்டார் என்றால், அதன் சகலப் பரிமாணங்களும் அக்மார்க் முத்திரையாக ஒளி வீசவேண்டும்.

சின்னதோர் பிரச்சினை என்றாலும், அதிலும் கடுகு மூக்கு அளவுக்கும்கூட பிழை வந்துவிடக்கூடாது என்பதில் நூற்றுக்கு நூறு உரைத்துப் பார்க்கக் கூடியவராயிற்றே!

பொறுப்புகளும் பரவலாகப் பலரிடம் ஒப்படைக்கப்பட்டிருந்தாலும், தானே முன்னின்று முனைப்புக் காட்டி, அந்தப் பிரச்சினையின் துல்லியத்தை மேலோங்கச் செய்யும் வித்தகர் அவர்.

மாநாட்டு வெற்றி என்பது திட்டமிடுதல்  உழைத்தல்  செயல்படுத்துதல் இவற்றைப் பொறுத்ததே என்பது பகுத்தறிவாளர்களுக்குத் தெரியும்  மிகவும் தெரியும்.

செல்வி ஜெயலலிதா என்றால் விதியின்மேல் பழியைப் போட்டுத் தப்பித்துக்கொள்ளலாம். (எனக்கு விதியின்மீது நம்பிக்கை உண்டு என்று அண்மையில் அவர் சொல்லியிருக்கிறார்  வாழ்க அண்ணா நாமம்!)

ஆனால், கலைஞர் தலைமையில் அமைந்திருப்பது பகுத்தறிவாளர் ஆட்சியல்லவா? அணுகுமுறையிலும், செயல்முறையிலும் பகுத்தறிவின் மணம் கமழவேண்டும்.

ஒரு செய்தி தினமணியிலும், தினமலரிலும்; செம்மொழி மாநாடு சிறக்க இந்து சமய அறநிலையத்துறை சார்பில் முத்தமிழுக்கு மூன்றுகோடி தமிழ் அர்ச்சனைப் பெருவிழா கோவை மண்டலத்தில் 60 முக்கிய கோயில்களில் இன்றுமுதல் நடக்கிறது (14.3. 2010 விடுதலை ஒற்றைப்பத்தி - 3) என்று செய்தி வெளிவந்துள்ளது.

இது சரியான அணுகுமுறைதானா? தேவையானதுதானா? இந்து அறநிலையத் துறை என்பது கோயிலின் கணக்கு வழக்குகளை சரி பார்ப்பதும், நெறிபடுத்துவதும்தானேயொழிய, துறையின் சார்பில் அர்ச்சனை என்ற நிலைக்கு உரியதல்ல!

இந்து அறநிலையத் துறை அமைச்சராகயிருந்த டாக்டர் நாவலர் நெடுஞ்செழியன் அவர்களுக்கு சிதம்பரம் கோயில் அர்ச்சகர் பிரசாதம் கொடுத்தபோதுகூட இந்தக் கருத்தினை சொல்லத் தவறவில்லை அவர். அதற்காக சபாஷ் நாவலர் என்று தம் கையொப்பமிட்டு பெட்டிச் செய்தியை வெளியிட்டார் தந்தை பெரியார்.

உலகச் செம்மொழி மாநாட்டின் வெற்றி இந்த அரசின் செயல்திறனுக்கு வந்து சேரவேண்டுமே தவிர, கோயிலில் மூன்று கோடி அர்ச்சனை நடத்தியதால் கிடைத்த வெற்றி என்று மூட நம்பிக்கையாளர்-கள் தட்டிச் சென்றுவிடக் கூடாதல்லவா!

17.3. 2010 விடுதலை ஒற்றைப்பத்தி - 3

நூல் : விடுதலை ஒற்றைப்பத்தி - 3,


ஆசிரியர் : கலி.பூங்குன்றன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

அயோத்திதாசப் பண்டிதர், இரட்டைமலை சீனிவாசன் ஆகியோரைத் திராவிடர் கழகம் தவிர்க்கிறதா?

திராவிடர் கழகத்தை, அதன் நன்மதிப்பை, அதன் பிறப்பொக்கும் கோட்பாட்டை, சமூக நீதி சாதனைகளை மறைக்க இன எதிரிகள் தொடர்ந்து முயற்சிக்கின்றனர். அதற்...