சனி, 15 ஜூலை, 2017

கடவுள் கதைகள்

ஆரியர், தங்களுடைய கருத்துக்களையும் கடவுள் கதையும் கூறிவரும்போது, அறிவுக்கு இவை பொருந்துமா? ஆராய்ச்சிக்கு ஈடுகொடுக்குமா? என்பனபற்றி கவலையே கொள்ளவில்லை. ஆண்டை, அடிமைக்குக் காரணம் கூறிக்கொண்டிருப்பானா? குழந்தையை மிரட்டக் கிழவர்கள், அய்ந்து கண்ணனைப்பற்றியும், ஆறு காலனைப்பற்றியும் கதை கூறும்போது, குழந்தைகள் மிரட்சியுடன் கேட்டு, வாய்ப்பொத்திக் கொண்டிருக்குமேயன்றி, `தாத்தா இதை நான் நம்பமுடியாது என்று கூறுவதுண்டா? குழந்தைப்பருவம், மனித சமுதாயத்துக்கு இருந்தபோதுதான், இடிதேவன், மின்னல்மாதா, மழைமாகாளி, தீக்கடவுள் எனக் கடவுள் கதைகள் கட்டிவிடப்பட்டன. உலகிலே இதுபோலத் தோன்றிய கதைகள், அறிவுப்பருவத்தை அவனியோர் பெற்றதும் மறையலாயின! ஆனால் இங்கு மட்டும், ஆரியர் அந்தநாள் ஆபாசத்தை இன்றும் விடாப்பிடியாக வைத்துக்கொண்டிருப்பதுடன். அதே கருத்துக்களை மக்களிடைப் பரப்புவதையே தங்கள் பிழைப்பாக வைத்துக்கொண்டுள்ளனர். அதனாலேயே, அறிவு சூன்யமே ஞானமென்றும், இருப்பதை இல்லையென்று கூறுவதே வேதாந்தமென்றும், இல்லாததை உண்டு என்று நம்பச் செய்வதே மார்க்கமென்றும், போதிக்கப்பட்டுவிட்டது. அபின் விற்று வாழுபவன், போதை கூடாது என்ற பிரசங்கம் புரிவானா?

மற்ற மக்களுக்குத் தெரியாதது தங்கட்குத் தெரியுமென்றும், மற்றவர்களால் சாதிக்க முடியாததைத் தாங்கள் சாதிக்கமுடியுமென்றுங் கூறிடுபவனை, ஆராய்ச்சியுடையோர், அவன் ஓர் புரட்டன் என்று ஏசி ஒதுக்குவார்; ஆராயுந் திறனற்றாரோ, `அப்படியா! என்று ஆச்சரியத்தால் வாய் பிளக்க நின்று கேட்பர், கைகூப்புவர்! இந்த முறையிலே, ஆரியம், தமிழரிலே தன்னுணர்வு, அறிவு நுணக்கம் அற்றவர்களைப் பலிகொண்டது. வீராவேசங்கொண்ட வேங்கை யானாலும், சதுப்புநிலத்திலே - படுகுழியிலே - வீழ்ந்துவிட்டால் சாகத்தானே வேண்டும்! நீள்வையம் எதிர்த்தாலும், எமக்கு நிகர் இல்லை என்று கூறிப்போரிடும் மறத்தமிழரும், ஆரிய மதக்குழியிலே வீழ்ந்ததால் அறிவு, ஆற்றல், ஆண்மை, மானம் எனும் பண்புகளை இழக்கவேண்டி நேரிட்டது. ``இந்தியாவில் ஆரிய ஆட்சி என்றோர் நூல், ஹாவல் (ழயஎநடட) என்பவர் எழுதியுள்ளார். அதிலே  மதச்சடங்குகளைச் செய்விக்கும் புரோகிதத் தொழிலிலே, பிராமணர்கள் ஏகபோக உரிமை பெற்றனர். இதனால் சுரண்டிப் பிழைக்கவும் ஆபாசமான, காட்டு மிராண்டித்தனமான மூட நம்பிக்கைகளைப் பரப்பவும் முடிந்தது. மந்திரத்தால் ஆகாதது ஒன்றுமில்லை! போரில் ஜெயமோ, அபஜெயமோ, மந்திர உச்சாடனத்தாலே சாதிக்கமுடியும்! சமஸ்தானங்களின் க்ஷேமத்துக்கு எதிரியின் வாயை அடக்குதற்கு, இருமலை நீக்குதற்கு, சடை வளர்தற்கு, எதற்கானாலுஞ் சரியே மந்திரத்தால் பலன் உண்டு! நித்திய கர்மானுஷ்டானங்களிலே, பிரமாத காரியமோ அற்பவிஷயமோ எதற்கும் அந்த மந்திரம் அவசியம் தேவை என்று ஆரியர் கூறிவைத்தனர்!! என்று ஆசிரியர் கூறுகிறார். இவர் ஈரோட்டு வாசியா? பெரியாரின் சீடரா? சுயமரியாதைப் பிரசாரகரா? ஏன் சுரண்டிப் பிழைக்க ``மந்திரம் என்று மயக்க மொழிபேசிப் பார்ப்பனர் வாழ்ந்தனர் என்பதை எழுதுகிறார்? `ஆரியமாயையிலே சிக்கி நம்மவர்மீது ``துவஜம் தொடுக்கும் தமிழர்கள், இந்த ஆராய்ச்சியாளரின் கண்டனத்தைப்பற்றி யோசிக்கக்கூடாதா, ``வேத கால முதற்கொண்டு ஆரியர்கள் அனுஷ்டித்து வந்த யாகம், பிராமணருக்கு, மற்றவரைக் கொடுமைப்படுத்தவும் ஏமாற்றவும் ஓர் கருவியாக உபயோகப்பட்டது என்றும் ஹாவல் எழுதுகிறார். மந்திரம், யாகம் என்பவைகள் பார்ப்பன புரட்டு என்று தன்னுணர்வு இயக்கத்தார் கூறினால் கோபங்கொள்ளும் ``தாசர்கள், இந்த ஆராய்ச்சிக்காரனின் உரை கேட்ட பிறகாவது தம் கருத்தை மாற்றிக்கொள்ளக் கூடாதா? `ஆரிய ஆட்சி, ஒரு புரட்டர் கூட்டம் வெள்ளை மனத்தினரை வாட்டிவதைத்த வரலாறேயாகும். இல்லை என்பதற்கு எங்கிருந்தாவது ஆதாரம் தேடிக்காட்ட, யாராவது முன்வருவார்களா என்று கேட்கிறேன்.

நூல் : ஆரியமாயை

ஆசிரியர் “ அறிஞர் அண்ணா

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

அயோத்திதாசப் பண்டிதர், இரட்டைமலை சீனிவாசன் ஆகியோரைத் திராவிடர் கழகம் தவிர்க்கிறதா?

திராவிடர் கழகத்தை, அதன் நன்மதிப்பை, அதன் பிறப்பொக்கும் கோட்பாட்டை, சமூக நீதி சாதனைகளை மறைக்க இன எதிரிகள் தொடர்ந்து முயற்சிக்கின்றனர். அதற்...