ஞாயிறு, 16 ஜூலை, 2017

கனவு




டில்லி 30, பிரித்வி ராஜ் சாலையில் தனி மரமாக நின்று கொண்டிருக்கும் பா... பிரமுகர் லால்கிஷண் அத்வானி, தான் காணும் கனவு ஒன்றைக் கூறியிருக்கிறார்.

அயோத்தியில் ராமன் கோயில் கட்டப்படவேண்டும் என்பதுதான் தமது ஒரே கனவு என்று கூறியிருக்கிறார்.

கடைசிக் காலத்தில் இந்தியாவின் பிரதமராக ஆக வேண்டும் என்று கனவு கண்டார். அந்தக் கனவு கானல் நீராய் போய்விட்டது.

மீண்டும் ரத யாத்திரை ஒன்றை நடத்தி தன்னைப் புதுப்பித்துக் காட்டிக்கொள்ளலாம் என்று கருதினார்; அதுவும் கருகிப் போய்விட்டது.

எதைத் தின்றால் பித்தம் தெளியும் என்ற வெறியில் அவர் இருப்பதாகத் தெரிகிறது. ராமன் கோயில் என்ற தீவட்டியை எடுத்துக்கொண்டு சூறாவளியாகக் கிளம்பி, காவிப் படையினர்க்கு வெறியேற்றி, 450 ஆண்டுகால வரலாறு படைத்த சிறுபான்மை மக்களின் வழிபாட்டுத் தலமான பாபர் மசூதியை இடித்து முடித்தாயிற்று. அந்த வைபவத்துக்கு அவர் தலைமையேற்றதன்மூலம், அந்த உணர்ச்சியால் கிடைக்கும் அரசியல் லாபம் என்கிற மகுடம் தன் தலையைத்தான் தேடிவரும் என்றும் கனவு கண்டார். தலையிருந்ததே தவிர, மகுடத்தை வாஜ்பேயி அடித்துக்கொண்டு போய்விட்டார்.

பாபர் மசூதி இடிப்பின்மூலம் வீராதி வீரராகப் பவனி வரலாம் என்று நினைத்த இந்த வீராதி வீரர் சூராதி சூரர் என்ன செய்தார் தெரியுமா?

நீதிமன்றத்தில் வந்த வழக்கை சந்திக்கும் திராணியில்லாமல், சட்டத்தின் சந்து பொந்துகளில் நெளிந்து வளைந்து முதுகு காட்டி ஓடித் தப்பிக்கலாம் என்று திட்டமிட்டார்.

ஏன், ஒரு கட்டத்தில் அந்த வழக்கிலிருந்து தன்னை விடுவித்தும் கொண்டார் அதிகாரத்தைப் பயன்படுத்தி; பாச்சா பலிக்கவில்லை; வழக்கில் சேர்க்கப்பட்டார்; குற்றப் பத்திரிகையில் முதல் நபர் அவர்தான்.

நம் நாட்டின் நிருவாகம், நீதி பரிபாலனம் எந்த யோக்கியதையில் இருக்கிறது என்பதற்கு அடையாளம் 17 ஆண்டுகள் ஓடிய பிறகும்கூட குற்றவாளிகள் தண்டிக்கப்படவில்லை. மாறாக, பெரிய பெரிய பதவிகளை அனுபவித்ததோடு அல்லாமல், அதற்கு மேலும் பிரதமர் பதவி என்ற சொர்க்க வாசல் கதவு திறக்காதா? என்று கொட்டாவி விட்டுக் கொண்டு கால்கடுக்க நின்று கொண்டிருந்தார்.

அதுவும் கனவாகிவிட்ட நிலையில், மீண்டும் ராமன் கோயில் கனவுபற்றிப் பேச ஆரம்பித்துள்ளார்.

ராம் ராம் என்று சொல்லி கடலில் ஒரு கல்லைத்தூக்கிப் போட்டவுடன் பாலமே அமைந்துவிட்டது என்று இதே அத்வானி சென்னை தங்கசாலை கூட்டத்தில் பேசினாரே  அதேபோல, ராம், ராம் தாரக மந்திரத்தை செபிக்கவேண்டியதுதானே!  பாபர் மசூதி இடிக்கப்பட்ட இடத்தில் எங்கே ராமன் கோயில் எழுகிறதா என்று பார்ப்போம்!

13.10.2009 (விடுதலை ஒற்றைப்பத்தி - 2) 

நூல் : விடுதலை ஒற்றைப்பத்தி - 2,

ஆசிரியர் : கலி.பூங்குன்றன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

அயோத்திதாசப் பண்டிதர், இரட்டைமலை சீனிவாசன் ஆகியோரைத் திராவிடர் கழகம் தவிர்க்கிறதா?

திராவிடர் கழகத்தை, அதன் நன்மதிப்பை, அதன் பிறப்பொக்கும் கோட்பாட்டை, சமூக நீதி சாதனைகளை மறைக்க இன எதிரிகள் தொடர்ந்து முயற்சிக்கின்றனர். அதற்...