தலைக்கவசம் (ஹெல்மட்) அணிவது ஏதோகாவல் துறைக்காக என்கிற தவறான எண்ணம் படித்தவர்கள் மத்தியிலேகூட இருந்து வருவது பரிதாபமே! மருத்துவர் கோபித்துக் கொள்வார் என்பதற்காகவா மருந்து சாப்பாடுகிறோம்?
தலைக்கவசம் அணிவதால் விபத்து நேரும்போது பிழைத்துக் கொள்ளும் வாய்ப்பு கூடுதலாக இருக்கிறது.
சென்னையில் கடந்த 8 மாதங்களில் மட்டும் சாலை விபத்துகளில் பலியானோரின் எண்ணிக்கை 158; இதில் தலைக்கவசம் அணியாதோர் 154 பேர்களாம்.
தலைக்கவசம் நம் உயிர்க்கவசம்! என்றெல்லாம் விளம்பரம் செய்து பார்த்தாகிவிட்டது. தலைக்கவசம் கட்டாயம் என்று வலியுறுத்தப்பட்டு, தொடக்கத்தில் தலைக்கவசம் அணியாதவர்களை நிறுத்தி அபராதம் விதிக்கப்பட்டது. போகப்போக அந்த வேகம் குறைந்து விட்டது.
பொது இடங்களில் புகை பிடிக்கக்கூடாது; பிடித்தால் தண்டனை என்று கூறி,
மீறுபவர்களைக் கையும் களவுமாகப் பிடித்தது காவல்துறை. அதுவும் போகப் போகப் புகை போல மறைந்து போய்விட்டது.
இப்படி சட்டங்கள் செல்லரித்துப் போவதும், ஆணைகள் ஆணிவேர் இழந்துபோவது மானநிலை ஏற்படுமாயின் சட்டங்களை மதிக்கத் தேவையில்லை என்ற மனப்பான்மைதான் மக்களிடம் வளரும்.
மக்கள் நன்மைக்காகக் கண்டிப்பான வகையில் விதிமுறைகளை அமல்படுத்தினால் தான் மக்களுக்கே நன்மையாக முடியும்.
சாலை விதிகளை மீறுவதும் அப்படித்தான். இரவு நேரத்தில் ஒருவழிப்பாதையைக் கடைபிடிக்க வேண்டியதில்லை என்று தனக்குத்தானே விதிகளை வகுத்துக்கொள்ளும் ஓட்டுநர்களைப் பெரும்பாலும் காண முடிகிறது - அப்படி ஒரு சட்டம் பகலுக்கு ஒன்று, இரவுக்கு ஒன்று என்று எங்கும் கிடையாது. விருப்பத்துக்கு ஏற்ப நினைக்கும் (றுளைகரட வாமேபே) சோம்பேறி மனப்பான்மை அது. சுவிட்சர்லாந்தில் ஒரு நடைமுறையை நயமாகக் கடைப்பிடிக்கிறார்கள். சாலை விதிகளை மீறினால் அவர்களை என்ன செய்கிறார்கள் தெரியுமா?
சாலை விதிகளை மீறுகிறவர்களை ஒரு சிக்னலுக்கு அழைத்துச் செல்லுகிறார்கள். கூடவே காவல்துறைக்குச் சொந்தமான ஒரு நாயையும் கொண்டுவந்து சிக்னலில் நிறுத்தி வைக்கின்றனர்.
சிவப்பு விளக்கு எரியும் வரை நாய் காத்துக் கொண்டு இருக்கிறது; பச்சைவிளக்கு விழுந்ததும் அந்த நாய் சாலையைக் கடக்கும்.
இதன் பொருள் என்ன? நாய்க்கு இருக்கும் அறிவுகூட ஓ மனிதா, உனக்கு இல்லையே! என்பதை ஊரறியச் செய்து மானத்தை வாங்குகிறார்கள்.
அந்த நிலையைக்கூட இந்தியாவில் அறிமுகப்படுத்திப் பார்க்கலாம்.
சென்னை மாநகரில் இப்பொழுது 35 லட்சம்
வாகனங்கள் நடமாடுகின்றன. வாகன ஓட்டிகளின் பாதுகாப்புக்கும், பொதுமக்களின் பாதுகாப்புக்கும் கட்டுச்சிட்டான விதி முறைகள் கண்டிப்பாகத் தேவையே!
6.9. 2010 விடுதலை ஒற்றைப்பத்தி - 3
நூல் : ஒற்றைப்பத்தி - 3
ஆசிரியர் : கவிஞர் கலி.பூங்குன்றன்
நூல் : ஒற்றைப்பத்தி - 3
ஆசிரியர் : கவிஞர் கலி.பூங்குன்றன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக