செப்டம்பர் 8 உலக எழுத்தறிவு நாள்.
ஆளுமையில் கல்வியின் பங்கு என்ன என்ற கேள்விக்கு விடை கிடைக்க வேண்டுமாம் அதுதான் இதன் நோக்கமாகும். யுனெஸ்கோ 1965 முதல் இதனைக் கடைப்பிடிக்கச் செய்திருக்கிறது.
இந்தியாவைப் பொறுத்தவரை எழுத்தறிவு விழுக்காடு 64.8.
ஆண்கள் 71.85 விழுக்காடு பெண்கள் 54.16 விழுக்காடு
தமிழ்நாட்டைப் பொறுத்தவரை ஆண்கள் 82 விழுக்காடு; பெண்கள் 64 விழுக்காடு ஆகும். தமிழகக் கல்வித் துறை அமைச்சர் மாண்புமிகு தங்கம் தென்னரசு அவர்கள் அளித்த புள்ளிவிவரம் இது.
இந்திய அரசமைப்புச் சட்டம் அமலுக்கு வந்து 10 ஆண்டுகளுக்குள் 14 வயதுக்குட்பட்ட அனைவருக்கும் அடிப்படைக் கல்வி என்று அரசமைப்புச் சட்டம் 45 ஆவது பிரிவு கூறுகிறது. ஆனால், அதற்குப் பின் எத்தனைப் பத்தாண்டுகள் பந்தாடப்பட்டுள்ளன!
இன்னும் இலக்கை எட்டியபாடில்லை.
கல்வியைப் பொறுத்தவரை பெண்கள் வெகுதூரத்தில் இருக்கிறார்கள்; எழுத்தறிவு என்று குறிப்பிடப்படுவது பட்டப் படிப்பல்ல; ஏதோ எழுதப் படிக்கத் தெரிந்த அளவில்தான். கையொப்பம் போடத் தெரிந்த அளவுதான். இதற்கே இவ்வளவு ததிங்கணத்தோம் போடும் அவல நிலை.
இந்துத்துவா மனப்பான்மையில் எல்லோருக்கும் கல்வி என்பது கூடாத ஒன்றாகும். வெகுகாலமாக இந்தக் குட்டையில் ஊறிவிட்டதால், விழிப்புணர்வு வெடித்துக் கிளம்பிவிட்டதாகக் கூறப்படும் இந்தக் காலத்திலும் முடமான கால்களுடன்தான் பெண்கள் படிக்கும் நிலை.
இன்னும் 3 வாரங்களில் சரஸ்வதி பூஜையும், ஆயுத பூஜையும் வரவிருக்கின்றன. பூஜையன்று சுவடிகளை வைத்து சாம்பிராணி போடும் வழக்கம் உண்டே தவிர, படிக்கவேண்டும் என்ற உணர்வை ஊட்டுவதற்காக இது பயன்படுவதில்லை.
பூஜா மனப்பான்மைதான் எதிலும்
முண்டியடித்து முன்னேறவேண்டும் என்ற முனைப்புக்கு இங்கு இடம் ஏது? கேட்டால் அவாள் அவாள் தலையெழுத்து எதுவோ அதுதான்
ஆம் என்க என்ற மனப்பான்மை.
கல்விக்குக் கடவுள் சரஸ்வதி, தனத்துக்கு (செல்வத்துக்கு) லட்சுமி என்று ஒவ்வொரு துறைக்கும் தனி இலாகா இருந்து என்ன பயன்?
அடிப்படைக் கல்விக்கே இந்த நிலையென்றால் அது ஆளுமையை நோக்கி நகர்வது எந்த யுகத்தில்?
முதலில் நம் கல்வியில் அதற்கான கூறு இருக்கிறதா என்பது முதல் கேள்வி. இன்னும் வேதக் கணிதமும், கருமாதி மந்திரமும் சொல்லிக் கொடுக்கவேண்டும் என்ற தர்ப்பைப்புல் மனப்பான்மை உள்ள மட்டும் ஆளுமையாவது ஆட்டுக்குட்டியாவது!
சமச்சீர் கல்வி வரப்போகிறது. அதிலாவது தன்னம்பிக்கையையும், புத்தறிவையும், பகுத்தறிவையும் அறிவியல் மனப்பான்மையையும் பீறிடச் செய்யும் கல்வித் திட்டத்துக்கு ஏற்பாடு செய்யட்டும். எந்தக் காரணத்தை முன்னிட்டும் ஆன்மிகவாதிகளை கல்விப் பாடத் திட்டக் குழுவில் இடம்பெறச் செய்யவேகூடவே கூடாது. அந்த நிலை எட்டாதவரை ஆளுமை என்பதெல்லாம் கவைக்குதவாது உதவவே உதவாது.
9.9.2009 (விடுதலை ஒற்றைப்பத்தி - 2)
ஆசிரியர் : கலி.பூங்குன்றன்
நூல் : விடுதலை ஒற்றைப்பத்தி - 2,
ஆசிரியர் : கலி.பூங்குன்றன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக