ஞாயிறு, 16 ஜூலை, 2017

வைகுண்ட சாமிகள்


வைகுண்டசாமிகள் என்பவர் குமரியில், அன்று பெரிதும் ஒடுக்கப்பட்ட நாடார் சமுதாய மக்களின் தன்மானத்திற்காகப் போர்க்கொடி தூக்கிய பெரு-மகனார் ஆவார்.

கன்னியாகுமரிக்கு அருகில் பூவண்டன்தோப்பு எனும் கிராமத்தில் நாடார் சமூகத்தில் பிறந்தவர் (1809)
முடிசூடும் பெருமாள் என்று பெயரிடப்பட்டார்தாழ்ந்த ஜாதியினருக்கு இத்தகு மேன்மை தாங்கிய பெயரைச் சூட்டக்கூடாது என்பதுதானே மனுதர்மம்? மன்னர்ஆட்சி தடுத்தது. விளைவு புதுப்-பெயர் முத்துக் குட்டி.

அன்றைய தினம் திருவிதாங்கூர் மன்னர் ஆட்சியில் மரம் ஏறும் மக்கள் சாணார் என்று அழைக்கப்பட்டனர். உரிமைகள் அறவே மறுக்கப்பட்ட பரிதாபத்துக்குரியவர்களாக அவர்கள் ஒடுக்கப்பட்டனர். நம்பூதிரிப் பார்ப்பான் எதிரே வந்தால் அவர்கள் 36 அடிதூரம் விலகி நிற்க வேண்டும். நாயரிடமிருந்து 12 அடி தூரம்  ஒதுங்கவேண்டும். பொதுவீதிகளில், சாலைகளில் நடக்க உரிமையில்லை. பெண்கள் ரவிக்கை (தோள் சேலை) அணிந்திடத் தடை!.

மன்னர் ஆட்சி மனுதர்ம ஆட்சியாகச் சீறியது. இந்த நிலையில்தான் வைகுண்ட சாமிகள் என்று பிற்காலத்தில் அழைக்கப்பட்ட முத்துக்குட்டி சமத்துவ சங்கம் என்ற ஓர் அமைப்பைத் தொடங்கினார்.

அவர் ஆன்மிகக் குடைக்குள்ளேயே சீர்திருத்தங்களைச் செய்ய முன்வந்தார். அதே நேரத்தில் உருவ வழிபாட்டை எதிர்த்தார். காணிக்கை கொடுப்பது கண்டிப்பாகக் கூடாது என்றார். மாந்திரீகர்களிடம் மதி மயங்காதீர் என்று எச்சரித்தார்.

தாழ்த்தப்பட்டவர்களின் வீடுகளில் உணவருந்துமாறு தம் சீடர்களுக்குக் கட்டளையிட்டார்.

காவி நிறத்தில் வெள்ளைத் தீபச் சுடரைத் தாங்கிய கொடியை அறிமுகப்படுத்தினார். ஒரு வகையில் வடலூர் வள்ளலார் இராமலிங்க அடிகளின் சாயலை இவரிடம் காண முடியும்.

மன்னரையும் பார்ப்பனர்களையும் எதிர்க்கத் துணிந்த அவர் 110 நாள்கள் கொடுஞ்சிறையையும் அனுபவிக்க நேர்ந்தது.

இன்றைய நிலை என்ன தெரியுமா? சென்னை மணலியில் அவருக்குக் கோயில் கட்டி கோபுரங்கள் எழுப்பி, தேர்த் திருப்பணியையும் நடத்தியுள்ளனர்.

எந்த உருவ வழிபாடு கூடாது என்றாரோ, அந்த உருவ வழிபாட்டை, அவரையே கடவுளாக்கி நடத்துகின்றனரே.

கடவுள் இல்லை; இல்லவே இல்லை என்று தந்தை பெரியார் சிலைகளின்கீழ் கடவுள் மறுப்பு பொறிப்பதன் முக்கியத்துவம் புரிகிறதா?

20.4. 2010 விடுதலை ஒற்றைப்பத்தி - 3

நூல் : விடுதலை ஒற்றைப்பத்தி - 3,


ஆசிரியர் : கலி.பூங்குன்றன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

அயோத்திதாசப் பண்டிதர், இரட்டைமலை சீனிவாசன் ஆகியோரைத் திராவிடர் கழகம் தவிர்க்கிறதா?

திராவிடர் கழகத்தை, அதன் நன்மதிப்பை, அதன் பிறப்பொக்கும் கோட்பாட்டை, சமூக நீதி சாதனைகளை மறைக்க இன எதிரிகள் தொடர்ந்து முயற்சிக்கின்றனர். அதற்...