இன்று சாமி கைவல்யம் பிறந்த நாள் (1877). யார் இந்த கைவல்யம்? 1877 இல் கேரளத்தைச் சேர்ந்த கள்ளிக்கோட்டையில் பிறந்தவர் இயற்பெயர் பொன்னுசாமி. இவர்களின் முன்னோர்கள் பட்டாளத்தைச் சேர்ந்தவர்கள்.
ஒருமுறை இவர் கரூருக்கு வந்தார். அங்குள்ள மவுனசாமி மடத்துக்குச் சென்றார். அங்கு சில சாமியார்கள் உண்டு. வேதாந்த விசாரணைகள் நடைபெற்றன. கைவல்யம் என்ற வேதாந்த விசாரணை நூல் பற்றிப் பேசப்பட்டது. கைவல்யம் தொடுத்த வினாக்கள், விசாரணைகள் பலரையும் அதிரச் செய்தன. இதன் காரணமாக அவர் கைவல்யம் என்றே அழைக்கப்படுபவர் ஆனார்.
அவரது தர்க்க ஞானம் முதலில் பார்ப்பன மதக் கொள்கை எதிர்ப்பிலிருந்து கிளர்ந்து எழுந்ததாகும் நாடு பூராவும் சுற்றித் திரிவார். வேதாந்த விசாரணைகளில் ஈடுபடுவார். பார்ப்பனீயத்தை நிலை குலையச் செய்யும் கூர்மையான அம்புகள் அவை!.
தந்தை பெரியார் அவர்களின் நண்பர் ஆனது இயல்புதானே! தொடக்கத்தில் தர்க்கத்தில் ஆரம்பித்துப் பின்னர் இணை பிரியாக் கொள்கைக் கயிற்றால் இணைந்து நண்பர்கள் ஆனார்கள்.
குடிஅரசில் கைவல்யம் எழுதி வந்த கட்டுரைகள் ஆணித்தரமானவை. எழுத்து நடையோ புத்தம் புதிய பாணி! இசைபாடும் அருவி நீரோட்டம் போன்றது.
அடுக்கடுக்கான ஆதாரக் கருவூலங்கள் வந்து விழுந்துகொண்டே இருக்கும். பராசரஸ்மிருதியும், மனுதர்மமும் அவருக்கு அத்துப்படி!
கைவல்யம் வருகிறார் என்றால், சாமியார்கள் ஆட்டம் கண்டு போய்விடுவார்களாம். எதிரிகள் வயிற்றைக் கலக்குமாம். கழிந்துவிடுவார்களாம்; வாய் வறண்டு போகுமாம்; தொண்டை வற்றிப் போகுமாம்! அப்படியொரு அசைக்க முடியாத ஆற்றலுக்குச் சொந்தக்காரர்.
ஒருமுறை தந்தை பெரியாரும், சாமி கைவல்யமும் ஏனாம்பள்ளி ஜமீன்தாரின் திருமணத்திற்குச் சென்றிருந்தனர். விருந்தில் பக்கம் பக்கமாக அமர்ந்திருந்தனர். பந்தி பரிமாறிய பார்ப்பானிடம் தண்ணீர் கேட்டார் கைவல்யம். அவர் இலைக்கு முன்னிருந்த டம்ளரை சர்வர் பார்ப்பான் எடுத்தான். உடனே பக்கத்தில் இருந்த சமையல்காரப் பார்ப்பான், என்னடா மடையா? சூத்திரன் குடித்த டம்ளரைத் தொட்டு எடுத்துவிட்டாயே? என்றானாம்
அவ்வளவுதான்! வந்ததே கோபம் கைவல்யத்துக்கு, அந்தப் பார்ப்பான் கன்னத்தில் எச்சில் கையாலேயே ஒரு ப்ளார்!, யாரடா சூத்திரன்? என்ற தன்மானக் கேள்வி. சிறு கலகமாகி அதன்பின் அடங்கியது. சூத்திரன் என்றால், ஆத்திரம் கொண்டு அடி! என்பது இதுதான்.
22.8.2009 (விடுதலை ஒற்றைப்பத்தி -
2)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக