இந்தியாவிலே முதல் முறையாக சென்னையில் ஒரு லட்சத்துக்கும் மேற் பட்ட மாநகராட்சி பள்ளி மாணவ, மாணவிகளுக்கு யோகாசனம் கற்றுத் தரப்படுகிறது. மாணவ,
மாணவிகளுக்கு யோகாசனம் கற்பிப்பதற்காக 100 ஆசிரியர்களுக்கு கோவை ஆழியார் பகுதி யில் உள்ள வேதாந்த மகரிஷி அமைப்பின் மூலம் ரூ.6 லட்சம் செல வில் பயிற்சி அளிக்கப் பட்டது. இதுபோல மாணவ, மாணவிகளின் மனம் திடமாக இருப்பதற்காக இப்போது தியானப் பயிற்சி அளிக்கப்படு கிறது. வாழ்க்கையில் வெற்றி பெற மாணவ,
மாணவிகளுக்கு தியா னம் மிகவும் அவசியம் இவ்வாறு வணக்கத்துக்குரிய சென்னை மாநகர மேயர் மா.
சுப்பிரமணியன் பேசியிருக்கிறார்.
மாணவ,மாணவிகளுக்குஉடற்பயிற்சி இன்றியமையாதது. கல்வியோடு விளையாட்டு என்பதுகூட மிக முக்கியமான ஒன்றே!
இப்பொழுதெல்லாம் பள்ளிக்கூடம் இருக்கிறதே தவிர,
விளையாட்டு மைதானம் இருக்கிறதா என்பது கேள்விக்குறியே!
யோகாசனம் என்பதும், தியானம் என்பதும் எந்தப் பொருளில் கையாளப்படுகிறது என்றால், ஆன்மிகத்தின் அடிப்படையில்தான்; அதுவும் மகரிஷி ஒருவரின் அமைப்பில் பயிற்சி பெற்றவர்கள்மூலம் இந்தப் பயிற்சிகள் அளிக்கப்படுகின்றன என்றால், அது எந்தத் தன்மையில் இருக்கும் என்று விழிப்பாக சிந்திக்கப்படவேண்டிய ஒன்றாகும்.
கண்டிப்பாக ஆன்மிகப் பாதையில் வழிபாடு என்பதையொட்டித்தான் இருக்கும் என்று அய்யப்பட இடம் இருக்கவே செய்கிறது.
உடலுக்கு நல்லது செய்யப் போய் அது மாணவ,
மாணவிகளின் உள்ளத்தைக் கெடுப்பதாக அமைந்துவிடக் கூடாது என்பது நமது கவலையாகும்.
இந்த நாட்டில் பார்ப்பனியம் என்பது ஒரு சின்ன இடுக்குக் கிடைத்தாலும், அதனை ராஜ பாட்டையாக்கிக் கொண்டு உள்ளே நுழைந்து தன் சித்து வேலைகளை சன்னமாக செய்துவிடும் என்பது சரித்திரம் நமக்குக் கற்றுக் கொடுத்துவரும் அபாயகரமான பாடமாகும்.
பகுத்தறிவாளரான, சென்னை மாநகர மேயர், மாணவ, மாணவிகளுக்கு நடத்தப்பட உள்ள பயிற்சிகளை நேரில் கண்டறிந்து, ஆன்மிகத்துக்கும், மூட நம்பிக்கைக்கும் சற்றும் இடமில்லை என்று நூற்றுக்கு நூறு உறுதிபடுத்திக் கொள்ளவேண்டும் என்பதே நமது கனிவான வேண்டுகோளாகும்.
நாம் அளிக்கும் பயிற்சியும், பணமும், நமது பிள்ளைகளைப் பாழும் கிணற்றில் தள்ளுவதற்குப் பயன்பட்டுவிடக் கூடாது அல்லவா!
23.1. 2010 விடுதலை ஒற்றைப் பத்தி -3
நூல் : விடுதலை ஒற்றைப்பத்தி - 3,
ஆசிரியர் : கலி.பூங்குன்றன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக