ஜப்பானை சேர்ந்த பிரபலமான திருமண ஏற்பாட்டு நிறுவனம் ஒரு அறிவிப்பினை வெளியிட்டுள்ளது. 2011 ஆம் ஆண்டில் விண்வெளியில் திருமணங்களை நடத்தி வைக்க ஏற்பாடுகளைச் செய்து வருகிறது.
விண்வெளியில் திருமணம் செய்து கொள்ள விரும்புபவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன.
அமெரிக்க நிறுவனம் ஒன்றினால் வடிவமைக்கப்படும் எக்ஸ்பி என்ற விண்வெளி ஓடத்தில்தான் அத்தகு திருமணங்கள் நடக்குமாம்.
விண்ணில் பறந்துகொண்டிருக்கும் போதே இணைகள் திருமணத்தைச் செய்து கொள்ளலாம். தேனிலவு எல்லாம் அங்குதான்.
இதற்காக அதிகம் செலவு இல்லை வெறும் எட்டுகோடி ரூபாய்தானாம்!
என்ன தலையைச் சுற்றுகிறதா? தரித்திர நாராய ணர்களான இந்தியர்களை மனதில் கொண்டு இந்தப் பிரச்சினையைப் பார்க்கக் கூடாது (இங்கும்கூட கோடீஸ்வரர்கள் இருக்கத்தானே செய்கிறார்கள்).
ஜப்பான் நிறுவனத்தின் அறிவிப்பைப் பார்த்து உடனடியாகப் பணம் கட்டுபவர்கள் உலகில் பல நாடுகளிலும் இருக்கவே செய்வார்கள்.
அடுத்து நிலவிலும், செவ்வாய்க் கிரகத்திலும்கூட திருமணங்கள் நடந்தால் ஆச்சரியப்படுவதற்கில்லை.
எனக்கு செவ்வாய் தோஷம் இருக்கிறது; எனக்குக் கலியாணம் ஆவது மிகவும் கஷ்டமாக இருக்கிறது, பெண் அல்லது மாப்பிள்ளைகள் கிடைப்பது அரிது என்று மன உளைச்சல் இனி அடையவேண்டாம்! செவ்வாய்க் கிரகத்திலேயே திருமணம் நடந்தால் அந்தத் தோஷம் எல்லாம் மலையேறிவிடும் அல்லவா!
எட்டு கோடி ரூபாயிலே திருமண ஏற்பாடு செலவுகள் எல்லாம் அடங்கிவிடுமாம் புரோகிதருக்கான தட்சணை உள்பட என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்த நிறுவனத்தில் இந்தியாவைச் சேர்ந்த மேற்படி யான் ஒருவன் இருக்கிறான் போலும்! அதனால்தான் மறக்காமல் அதுபற்றி குறிப் பிடப்பட்டுள்ளது.
நமது பகுத்தறிவுப் பிரச்சாரத்துக்கு அங்கும் வேலை இருக்கிறது!
முப்பத்து முக்கோடி தேவர்கள் விண்ணில் இருப்பதாகத்தானே சொல்லுகி றார்கள். அவர்களை நேரில் பார்க்க வாய்ப்பு இருக்குமா? எதற்கும் அந்த ஜப்பான் நிறுவனத்துக்குக் கடிதம் எழுதிக் கேளுங்களேன்.
7.7.2008 (விடுதலை ஒற்றைப்பத்தி - 2)
நூல் : விடுதலை ஒற்றைப்பத்தி - 2
ஆசிரியர் : கலி.பூங்குன்றன்
நூல் : விடுதலை ஒற்றைப்பத்தி - 2
ஆசிரியர் : கலி.பூங்குன்றன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக