தி.மு.க. ஆட்சியில் அண்ணா அவர்களால் இதே நாளில்தான் (1967) சுயமரியாதைத் திருமண மசோதா சட்டமாக நிறைவேற்றப்பட்டது. கட்சிகளைக் கடந்த அனைத்துத் தரப்பினரின் ஆதரவோடு ஒருமனதாக அச்சட்டம் நிறைவேற்றப்பட்டது.
அருப்புக்கோட்டையை அடுத்த சுக்கிலநத்தம் என்னும் ஊரில் முதல் சுயமரியாதைத் திருமணத்தை நடத்தி வைத்தார் தந்தை பெரியார் (28.5.1928).
அந்தக் காலந்தொட்டு அண்ணா அவர்கள் சட்டம் நிறைவேற்றிய காலகட்டம் வரை
(1967) நடைபெற்ற ஆயிரக்கணக்கான சுயமரியாதைத் திருமணங்கள் சட்டப்படி செல்லுபடியற்றவைதாம்!
ஆனாலும், மக்கள் மத்தியில் மாபெரும் புரட்சியாளர் தந்தை பெரியார் அவர்கள் உருவாக்கிய சிந்தனைத்தீ, சட்டம் சம்பிரதாயங்களையெல்லாம் பொசுக்கித் தள்ளிப் பீடு நடைபோட்டது.
சட்டம் தன் மரியாதையைக் காப்பாற்றிக் கொள்ளும் வகையில், அறிஞர் அண்ணா அவர்கள் சுயமரியாதைத் திருமணச் சட்டத்தைக் கொண்டுவந்து நிறைவேற்றினார் என்றே சொல்லவேண்டும்.
இனி நடக்கும் திருமணம் மட்டுமல்ல, இதற்குமுன் நடைபெற்ற சுயமரியாதைத் திருமணங்களும் சட்டப்படி செல்லுபடியாகும் என்ற சட்டத்தை நிறைவேற்றிக் கொடுத்து, தன்மான இயக்கத் தமிழர் வாழ்வில் பட்டொளி வீசிப் பறந்துகொண்டிருக்கிறார்.
இப்பொன்னாளில் மிகுந்த நன்றி உணர்ச்சியோடு அண்ணா அவர்களை நினைவு கூர்வோம்!
சுயமரியாதைத் திருமண மேடையை தந்தை பெரியார் பயன்படுத்திய விதம் புதுமையானது, சமூக மாற்றத்திற்கான ஒரு களமாக திருமண மேடையைப் பயன்படுத்தினார்.
இந்த மேடையில் அவர் ஆற்றிய உரைகள், எடுத்து வைத்த கருத்துகள் எல்லாம் பிற்காலத்தில் சட்டங்களாக மலர்ச்சி பெற்றன.
பெண்களுக்குச் சொத்துரிமை, திருமண விலக்குரிமை, விதவைத் திருமணம், பெண் கல்வி, குடும்பக் கட்டுப்பாடு என்று ஒரு நீண்ட பட்டியலே உண்டு.
இந்த சுயமரியாதைத் திருமணச் சட்டம் இந்தியா முழுமைக்கும் கொண்டுவரப்படவேண்டும் என்று முதலமைச்சர் மானமிகு மாண்புமிகு கலைஞர் அவர்கள் கூறியிருப்பதை வரவேற்கிறோம்.
முயற்சிகள் தொடரட்டும்; தந்தை பெரியார் உலகை ஆளட்டும்!
28.11.2009 (விடுதலை ஒற்றைப்பத்தி -
2)
நூல் : விடுதலை ஒற்றைப்பத்தி - 2,
ஆசிரியர் : கலி.பூங்குன்றன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக