அரசு பொதுத் தேர்வு மற்றும் ஆண்டுத் தேர்வுகளை எழுதவிருக்கும் மாணவர், மாணவிகளுக்கான பிரார்த்தனைக் கூட்டம் ஒன்று சென்னை சேத்துப்பட்டில் உள்ள கிறித்துவக் கல்வி நிறுவனத்தில் நடைபெற்றுள்ளது. 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ,
மாணவிகள் கலந்துகொண்டனராம்.
இவர்களுக்காக சிறப்புப் பிரார்த்தனையை பால்தினகரன் நடத்தினாராம். மாணவ,
மாணவிகள் சேர்ந்துகொண்டு பிரார்த்தித்தார்களாம்.
பிரார்த்தனை செய்தால் மதிப்பெண்கள் ஏராளம் கிடைக்குமாம்
தேர்வில் வெற்றி நிச்சயமாம்.
மதத்தின் பெயரால், கடவுளின் பெயரால் இப்படியொரு பக்திக் கழைக்கூத்து.
இது மாணவர்களின் தன்னம்பிக்கையைத் தகர்க்காதா? பள்ளியில் ஆசிரியர் நடத்தும் பாடங்களை நன்கு கவனிக்கவேண்டும்; வீட்டில் கவனத்தோடு படிக்கவேண்டும், கடுமையாக உழைக்கவேண்டும், சிந்தனைச் சிதறல்கள்கூடாது; டி.வி.
பக்கம் கண்களைத் திருப்பவேண்டாம் தேர்வு வரை என்ற எண்ணங்கள் எல்லாம் தேவையில்லை. பிரார்த்தித்தால் போதும் நினைத்தது நடக்கும் என்று இளங்குருத்துகளின் நெஞ்சில் இத்தகைய நச்சு விதைகளைத் தூவலாமா?
எத்தனை ஆயிரம் ஆண்டுகாலமாக இந்தப் பிரார்த்தனைகள் நடைபெறுகின்றன? எத்தனைக் கோயில்கள், பூஜைகள்
ஏற்பட்ட பலன் என்ன?
தந்தை பெரியாரும், ஒரு காமராசரும் நமக்குக் கிடைக்காமல் இருந்தால் நமக்குக் கல்விக் கண் கிடைத்திருக்குமா? மாதாவும், மாகாளியுமா நமது நாக்கில் கல்வியைச் சூலம் கொண்டு எழுதினார்கள்?
கல்விக் கடவுள் சரஸ்வதி பூஜையை வருஷா வருஷம் கொண்டாடிய சரஸ்வதி என்ற பாட்டிக்கு முதலில் சரஸ்வதியென்று கையொப்பம் போடத் தெரியுமா?
பிரார்த்தனை எதற்காக? இதோ தந்தை பெரியார் கூறுகிறார்:
பிரார்த்தனை என்பதற்கு வேறு வார்த்தையில் ஒரு மாற்றுப் பெயர் சொல்லவேண்டுமானால், பேராசை என்றுதான் சொல்லவேண்டும். பேராசையென்றால் தகுதிக்குமேல் விரும்பு வது, வேலை செய்யாமல் கூலி பெறுவது என்பதே! (பகுத்தறிவு மலர் ஒன்று, இதழ்
9, ஆகஸ்ட் 1935) என்று எவ்வளவு அழகாக அர்த்தம் நிறைந்த சொற்களால் படம் பிடித்-துள்ளார் தந்தை பெரியார்.
மாணவச் செல்வங்களே பிரார்த்தனையால் எதுவும் கிடைக்காது மந்-திரத்தால் மாங்காய் விழாது.
படியுங்கள்! படியுங்கள்! நன்றாகப் படியுங்கள். அன்றாடம் படியுங்கள். அதுதான் உங்களுக்கு வெற்றியைத் தரும்.
பிரார்த்தனை என்பது மதக் குருக்களின் சுரண்டலுக்கான கல்லாப்பெட்டி! சோம்பேறிகளின் சொர்க்கம்! ஏமாறாதீர்கள்!! ஏமாறாதீர்கள்!!!
8.2. 2010 விடுதலை ஒற்றைப்பத்தி – 3
நூல் : விடுதலை ஒற்றைப்பத்தி - 3,
ஆசிரியர் : கலி.பூங்குன்றன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக