ஞாயிறு, 16 ஜூலை, 2017

பக்தீ!


பத்தாம் வகுப்பு, பிளஸ் டூ தேர்வுகளில் மாணவர்கள் வெற்றி பெற மயிலாப்பூர் மாதவப் பெருமாள் கோயிலில் சிறப்பு ஹோமம். கருட ரட்சை அளித்தல் வெள்ளிக்கிழமை (பிப்.20) நடைபெறும்.

ஹோமத்தில் பங்கு பெற விரும்புவோர் பெயர், நட்சத்திரம், முகவரி ஆகியவற்றை அர்ச்சகரிடம் அல்லது அலுவலக பதிவேட்டில் பதிவு செய்யுமாறு கோயில் செயல் அலுவலர் இரா.ரகுநாதன் தக்கார், உதவி ஆணையர் பி. வாசுதேவன் ஆகியோர் தெரிவித்துள்ளனர். இப்படி ஒரு செய்தி இன்றைய தினமணி ஏட்டில் பக்கம் 12இல் வெளியாகியுள்ளது. (18..2..2004).

பக்தி என்பது பல துறைகளிலும் மூக்கையும், நாக்கையும் நுழைத்து மக்களின் மூளையையும், உழைப்பையும், முயற்சியையும் எந்த வகைகளில் எல்லாம் உறிஞ்சி, உதிரத்தைக் குடித்து மனித சக்தியை நோஞ்சான் பிள்ளையாக்கிக் கொண்டு இருக்கிறது என்பதற்கு இது ஓர் எடுத்துக்காட்டு.

காலையில் எழு, படி, ஒழுங்காகப் பள்ளிக்குச் செல், பாடத்தைக் கவனி, சந்தேகங்களை ஆசிரியரிடம் கேட்டுத் தெளிவு கொள், மாலையில் விளையாடு, இரவில் வீட்டுப் பாடங்களைச் செய், அய்யங்களை வீட்டில் உள்ளவர்களிடம் கேட்டுத் தெரிந்துகொள் என்று சொல்லுவதற்கு இந்த நாட்டில் பெரிய மனிதர்கள் இல்லை!

இருப்பதெல்லாம் இதுதான்.

பரீட்சையில் வெற்றி பெற கோயிலுக்குப் போ, பெயர், நட்சத்திரத்தைப் பதிவு செய், குறிப்பிட்ட நாளில் கோயிலுக்குச் சென்று ஹோமத்திலும், கருட ரட்சை நிகழ்ச்சியிலும் பயப் பக்தியோடு கலந்துகொள் என்று சொல்லுவதற்குப் பக்தி மார்க்கமும், கோயில் அறங்காவலர்களும், அரசின் அதிகாரிகளும் தயாராக இருக்கிறார்கள்.

பிள்ளைகளைக் குட்டிச் சுவராக்குவதற்குத்தான் இந்தக் குட்டிச் சுவர்களை (கோயில்களை) கட்டி வைத்திருக்கிறார்கள் போலும்!

புரோகிதனின் வயிற்றுப் பையும் நிரம்பவேண்டும்  பக்தியும் பெருகவேண்டும்  அதன்மூலம் பார்ப்பனீயமும் பங்கமின்றி கொழுகொழுவென்று வளர்ந்தோங்கவேண்டும்  இதுதானே இவர்களின் திட்டம்!
இந்த நாட்டின் பெரிய மனிதர்கள், கல்வி மான்கள், இதோபதேசிகள் இதுபற்றி என்ன கருதுகிறார்கள்? வாய் திறக்கமாட்டார்கள்  கப்  சிப்! காரணம் பக்தி விடயமாயிற்றே!

பக்தியை ஒழிக்க பெரியார் ஏன் பாடுபட்டார் என்பது இப்பொழுதாவது புரிகிறதா?

கடைசியில் ஒரு கேள்வி. கோயில் ஹோமத்தில் பய பக்தியோடு பங்குகொண்ட மாணவன் ஒருவன் தேர்வில் தோல்வி அடைந்தால் அந்தக் கோயிலை என்ன செய்யலாம்? அல்லது அதிகாரிகளை நுகர்வோர் நீதிமன்றத்தின் கூண்டில் ஏற்றலாமா?

18.02.2004 (விடுதலை ஒற்றைப்பத்தி - 2)

நூல் : விடுதலை ஒற்றைப்பத்தி - 2, 

ஆசிரியர் : கலி.பூங்குன்றன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

அயோத்திதாசப் பண்டிதர், இரட்டைமலை சீனிவாசன் ஆகியோரைத் திராவிடர் கழகம் தவிர்க்கிறதா?

திராவிடர் கழகத்தை, அதன் நன்மதிப்பை, அதன் பிறப்பொக்கும் கோட்பாட்டை, சமூக நீதி சாதனைகளை மறைக்க இன எதிரிகள் தொடர்ந்து முயற்சிக்கின்றனர். அதற்...