மத்திய சுற்றுலாத்துறை இணையமைச்சர் ரேணுகா சவுத்ரி, மகளிர் தினத்தன்று சென்னை நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்று உரையாற்றுகையில் அதிர்ச்சியான தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளார்.
பெண் குழந்தைகளை விட ஆண் குழந்தைக்கு ஒரு தாய் அதிகப்பால் ஊட்டுகிறார் இதற்குப் புள்ளி விவரங்களும் உள்ளன என்று குறிப்பிட்டுள்ளார்.
பால் கொடுப்பதிலும்கூட பால் வேறுபாடா?
இது வேதனையா வெட்கப்படத்தக்கதா? ஆண்டாண்டுக்காலமாக மக்கள் மூளையில் ஊட்டி உறுதி செய்யப்பட்டு நிலைக்க வைக்கப்பட்ட பத்தாம் பசலித்தனம் தானே?
தாய்நாடு, தாய்மொழி என்று தாலாட்டுச் சொற்களைச் சொல்லிச் சொல்லியே மக்களை மயக்கியதல்லாமல் தாய்க்கு அந்தப் பெண்ணுக்கு என்ன மரியாதை இங்கு?
பெண்ணான ஒரு தாயே பெண் குழந்தையை உதாசீனம் செய்கிற அளவுக்கு மூளை விலங்கிடப்பட்டுள்ளதே!
இந்த விலங்கை உடைத் தாலொழிய பெண்ணடிமைத் தனம் என்கிற இருட்டினை எள் முனை அளவும் விரட்டிட முடியாது
முடியவே முடியாது! தந்தை பெரியார் என்கிற பகுத்தறிவுப் பகலவனின் சித்தாந்த வெளிச்சம் மனித மூளைகளில் பளிச்சிடும் பொழுதுதான் இதற்கு நிரந்தரத் தீர்வைக் காண முடியும்.
ஓய்வு எடுப்பதில்கூட ஆண்
பெண் பேதம் இருந்து வருகிறது. வார நாள்களில் பெண்கள் நாள் ஒன்றுக்கு ஒரு மணிநேரம் ஓய்வு எடுக்கின்றனர். ஆண்களோ 3 மணிநேரம் ஓய்வு எடுக்கின்றனர்.
விடுமுறை நாள்களில் பெண்கள் 3 மணிநேரம் நாள் ஒன்றுக்கு ஓய்வு எடுக்கின்றனர். ஆண்களோ இரு மடங்கு ஓய்வு எடுக்கின்றனர்.
கடைவீதி செல்லுவது, குழந்தைகள் பராமரிப்பு என்று எடுத்துக் கொண்டாலும் பெண்கள் செலவழிக் கும் நேரம் 33 சதவிகிதம். ஆண்கள் செலவழிப்பதோ 16 சதவிகிதம். கடந்த 10 ஆண்டுகளில் பெண்களின் ஓய்வு நேரம் 10 சதவிகிதம் குறைந்துள்ளதாம்!
இந்தப் புள்ளி விவரங்கள் எதைக் காட்டுகின்றன?
விஞ்ஞானம் வளர்ந்தாலும் மக்களிடத்திலே விஞ்ஞான மனப்பான்மை, பகுத்தறிவு மனப்பான்மை, மனித நேயச் சிந்தனை வளரவில்லை என்பதைத்தானே காட்டுகிறது?
11.3.2005 (விடுதலை ஒற்றைப்பத்தி - 2)
நூல் : விடுதலை ஒற்றைப்பத்தி - 2,
ஆசிரியர் : கலி.பூங்குன்றன்
நூல் : விடுதலை ஒற்றைப்பத்தி - 2,
ஆசிரியர் : கலி.பூங்குன்றன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக