கடவுளுக்காகத் தொடுக்கப்பட்ட பூவை நுகர்ந்த ராணியின் கையை வெட்டிய சுழற்சிங்கர் பற்றி நேற்று பார்த்த்ம்.
வரகுணபாண்டியன் என்ற ஒரு மன்னன் கி.பி.
792 முதல் 835 வரை பாண்டிய நாட்டை ஆண்டு வந்தான்.
சிவபக்தி என்றால் அப்படி ஒரு பக்தி: இவனைப்பற்றி பட்டினத்தடிகள் திருவிடைமருதூர் மும்மணிக் கோவையில் குறிப்பிட்டுள்ளார். அதில் காணப்படும் தகவல்கள் இதோ!
கோவில் சாமியின் நகை முதலிய பொருள்களைக் களவாடிய அர்ச்சகன் ஒருவனைக் கையில் விலங்கிட்டு வரகுணபாண்டியனின் அரசவையில் கொண்டு வந்து நிறுத்தினர் காவலாளிகள்.
அந்தக் கள்வனின் உடலெல்லாம் பட்டைப் பட்டையாக திருநீறு கழுத்திலோ உருத்திராட்சை. பார்த்தான் மன்னன், அரியணையிலிருந்து இறங்கி ஓடோடி வந்து திருடனின் கைவிலங்கை அகற்றிவிட்டு அவன் காலில் தண்டனிட்டு விழுந்து வணங்கினான்.
காரணம் திருட்டுப் பயலின் சிவக்கோலம்!
இது இருக்கட்டும். இன்னொரு சேதியைக் கேளுங்கள்.
வைகைக் கரையில் இரவில் நரிகள் ஊளையிட்டதைக் கேட்டு, ஆகா! இந்த நரிகள் அரனை
(சிவனை) அல்லவா பாடுகின்றன என்று கூறி நரிகளுக்குப் படாம் போர்த்தச் சொன்னானாம்.
அத்தோடு போயிற்றா? இன்னும் கதையைக் கேளுங்கள்.
குவளைப் பூக்கள் பூத்த குளம் ஒன்றில் தவளைகள் கத்திக் கொண்டிருந்தன. அந்தத் தவளைகளின் கத்தல் சத்தம் இந்த வரகுணபாண்டிய மன்னனுக்கு எப்படி இருந்ததாம்? அரகரா அரகரா என்று சிவனை ஏற்றி போற்றி தவளைகள் பாடுவதாக அவனுக்குப் பட்டதாம். அப்புறம் என்ன?
மன்னன் அல்லவா? கருவூலத்தில் இருந்த பொற்காசுகளைக் கொண்டு வந்து அந்தக் குளத்தில் வாரி இறைக்கச் செய்தானாம்.
திருக்கூத்து இன்னும் இருக்கிறது, படியுங்கள், படியுங்கள்.
கோவிலில் ஆண்டவனுக்குப் படைப்பதற்காக வைக்கப்பட்டிருந்த எள்ளினை கோயில் பெருச்சாளியான அர்ச்சகன் வாரி வாரித் தின்னக் கண்ட கோவில் அதிகாரி, கையும் களவுமாகப் பிடித்து அரசன் முன் கொண்டு வந்து நிறுத்தினாராம்.
அரசன் முன் அந்தத் திருட்டு அர்ச்சகன் சொன்னானாம்: மன்னர் மன்னா. இப்புவியில் நற்பிறப்பு மீண்டும் அடையவேதான் ஆண்டவனுக்கு வைக்கப்பட்ட எள்ளைத் தின்றேன்! என்றானாம்.
இதைக் கேட்ட வரகுணபாண்டியன் அவனை இடித்துக் கொண்டு ஓடி அவன் தின்னும்போது உதிர்ந்து சிந்திய எச்சில் எள்ளைப் பொறுக்கித் தின்றானாம்!
கோயில் முற்றத்தில் நாய் மலம் கிடந்ததைக் கண்ட வேலையாள் துடைப்பத்தால் அப்புறப்படுத்த முயன்றான். அதனைக் கண்ட மன்னன் அவனை வெகுண்டு, கோயில் முற்றத்தில் கிடப்பதால் நாய் மலமும் புனிதத் தன்மையுடையது என்று கூறி தன் இரு கைகளாலும் நாயின் மலத்தை அள்ளி எடுத்தானாம்.
பட்டினத்தார் பாடலில் கண்ட இந்தப் பக்தியின் கிறுக்குத்தனங்களை மறைந்த மானமிகு புலவர் கோ.
இமயவரம்பன் விரித்து எழுதியுள்ளார். பக்தி என்று வந்துவிட்டால் நாயின் மலம் கூட மணக்கிறதே! பக்தி வந்தால் புத்தி போகும் என்றாரே தந்தை பெரியார். இப்பொழுது புரிகிறதா?
11.6. 2010 விடுதலை ஒற்றைப்பத்தி - 3
நூல் : ஒற்றைப்பத்தி - 3
ஆசிரியர் : கவிஞர் கலி.பூங்குன்றன்
நூல் : ஒற்றைப்பத்தி - 3
ஆசிரியர் : கவிஞர் கலி.பூங்குன்றன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக