ஞாயிறு, 16 ஜூலை, 2017

75 விழுக்காடு




திரிபுரா மாநிலத்தில் தாழ்த்தப்பட்டோருக்கு 17 விழுக்காடு, பழங்குடியினருக்கு 31 விழுக்காடு இட ஒதுக்கீடு நடைமுறையில் இருந்து வருகிறது. இப்பொழுது 27 விழுக்காடு இடங்கள் பிற்படுத்தப்பட்டோருக்கும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.
திரிபுரா மாநிலக் கல்வி அமைச்சர் அனில் சர்க்கார் கூறுகையில் மாநில அரசின் கோரிக்கையை ஏற்று பிற்படுத்தப்பட்டவர்களுக்கு 27 விழுக்காடு இடங்களை மத்திய அரசு வழங்க முன்வந்துள்ளது என்று கூறியுள்ளார்.
இதன்மூலம் அம் மாநிலத்தில் இட ஒதுக்கீட்டின் அளவு 75 விழுக்காட்டை எட்டியுள்ளது. இது வரவேற்கத்தகுந்ததாகும். என்.அய்.டி. என்று கூறப்படும் நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆஃப் டெக்னாலஜி என்னும் நிறுவனம் திரிபுரா மாநிலம் அகர்தலாவில் உள்ளது. இதுவரை பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு இட ஒதுக்கீடு இல்லாதிருந்தது; இப்பொழுது கிடைத்திருக்கிறது. மற்ற மற்ற மாநிலங்களில் ஆண்டுக்கு 9 விழுக்காடு என்கிற வகையில் மூன்று ஆண்டுகளில் பிற்படுத்தப்பட்டோருக்கான 27 விழுக்காடு பூர்த்தி செய்யப்படும் என்பதுதான் மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறையின் நிலைப்பாடாகும்.
இதில் குறிப்பிடத்தக்கது என்னவென்றால் இட ஒதுக்கீட்டில் அளவீடு 50 விழுக்காட்டைத் தாண்டக் கூடாது என்று எப்பொழுதோ, எந்த வழக்கிலோ உச்சநீதிமன்றம் கூறிய ஆலோசனையைக் கெட்டியாகப் பிடித்துக்கொண்டு, 50 விழுக்காட்டைத் தாண்டக்கூடாது என்று கூறி வருகின்றனர்.
தமிழ்நாட்டில் 69 விழுக்காட்டை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ளது. ஒவ்வொரு ஆண்டும் இதன்மீது மனு போடப்படுகிறது.
உச்சநீதிமன்றமோ தமிழ்நாட்டில் நடைமுறையில் இருந்துவரும் 69 விழுக்காடு சட்டம்பற்றி எந்தவிதக் கருத்தையும் சொல்லாமலேயே, 50 விழுக்காடு இருந்தால் திறந்த போட்டியில் எத்தனை இடங்கள் கிடைக்குமோ அதனைக் கணக்கிட்டு இடங்களை அதிகரித்துக் கொடுக்கவேண்டும் என்று ஒவ்வொரு ஆண்டும் உத்தரவு போடுகிறது.
திரிபுராவில் 75 விழுக்காடு என்பது நியாயமே! அங்கு மலைவாழ் மக்களின் எண்ணிக்கை அதிகம். அதன் காரணமாகவே அவர்களுக்குரிய 7.5 விழுக்காடு என்பதையும் கடந்து அம்மாநிலச் சூழலுக்கு ஏற்ப 31 விழுக்காடாக உயர்த்திக் கொடுக்கப்பட்டு வருகிறது.
திரிபுராவைப் போலவே ஒவ்வொரு மாநிலத்திலும் உள்ள சமூகச் சூழலைக் கணக்கில் கொண்டு அந்தந்த மாநிலங்கள் இட ஒதுக்கீட்டின் அளவை நிர்ணயித்துக் கொள்வதே சரியானதாக இருக்க முடியும்.
நெட்டுருப் போட்ட சட்டங்களைவிட நிதர்சனத்தைத் தெரிந்து செயல்படுபவரே புத்திசாலிகள் பயன் மரங்கள்!
29.8.2009 (விடுதலை ஒற்றைப்பத்தி - 2)

நூல் : விடுதலை ஒற்றைப்பத்தி - 2
ஆசிரியர் : கலி.புங்குன்றன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

அயோத்திதாசப் பண்டிதர், இரட்டைமலை சீனிவாசன் ஆகியோரைத் திராவிடர் கழகம் தவிர்க்கிறதா?

திராவிடர் கழகத்தை, அதன் நன்மதிப்பை, அதன் பிறப்பொக்கும் கோட்பாட்டை, சமூக நீதி சாதனைகளை மறைக்க இன எதிரிகள் தொடர்ந்து முயற்சிக்கின்றனர். அதற்...