ஞாயிறு, 16 ஜூலை, 2017

கமல் 50



50 ஆண்டுகாலம் திரைப்படத் துறையில் கால் பதித்த கமலகாசனுக்கு பிரம்மாண்டமான விழா எடுக்கப்பட்டுள்ளது. ஏடுகளிலும், இதழ்களிலும் அட்டைப்படக் கதாநாயகனாகவும் அவரே ஜொலிக்கிறார்.

குமுதத்தில் (7.10.2009) அவரின் பேட்டியும் வெளிவந்துள்ளது.

ஒரு காலத்தில் விடி யற் காலையில் குளிச்சிட்டு ஈரத் துணியோடு பூஜையை முடிச்சிட்டு, வீட்ல இருக்கிற வங்களுக்கு தீர்த்தம் கொடுத்திருக்கிறேன். அப்படி இருந்தவனை பெரி யாரின் அறிவுபூர்வமான வரிகள் என்னைப் புரட்டிப் போட்டுடுச்சி  என்று எடுத்தவுடனேயே வெளிப்படையாகப் பேசத் தொடங்கினார் என்கிறது குமுதம்.

குமுதத்தில் சொன்னது இன்னும் பொருத்தம்தான். ஊரில் கிடக்கும் புராணக்குப்பைகள், ஓட்டை உடைசல்களையெல்லாம் ஒப்பனை செய்து ஊர்வலம் விடும் ஏடாயிற்றே! நன்றாக மூக்கை வெட்டுகிற மாதிரி அதில் பேட்டி தந்துள்ளார். அதற்காகவும் ஒரு சபாஷ் போடலாம் போலத்தான் தோன்றுகிறது.

கமலகாசன் மட்டுமல்ல, மனந்திறந்து தந்தை பெரியார் அவர்களின் நூல்களைப் படிப்போர் யாராக இருந்தாலும் கமலகாசன் நிலைக்கே ஆளாவார்கள் என்பதில் அய்யமில்லை.

அய்யய்யோ அவர் சாமியில்லை என்கிறவர். அந்த நூலைத் தொடாதே, தீண்டாதே, பார்க்காதே, படிக்காதே! என்று ஆரம்பத்திலேயே அச்சக் குரல் கொடுத்து வேண்டுமானால் தடுக்கலாமே தவிர, அதனைத் தொட்டுப் படித்துவிட்டால், எந்தக் கொம்பனாக இருந்தாலும், அறிவுலக ஆசானின் வரிகளை வரித்துக்கொண்டுதான் தீருவார்கள்.

இவ்வார ஆனந்தவிகடனிலும் (14.10.2009) கடவுள்பற்றிய கருத்தை சற்று வித்தியாசமாகச் சொல்லுகிறார்.

நான் கடவுள் இல்லைன்னு சொல்லலை, இருந்தால் நல்லா இருக்குமேன்னுதான் சொல்றேன் என்கிறார். தசாவதாரத்திலும் இதையேதான் கூறுகிறார்!

கடவுள் ஒருவர் இருந்து மக்களுக்குத் தேவையானவற்றையெல்லாம் கொடுப்பாரேயானால், யார்தான் வேண்டாம்  இல்லை என்று சொல்லப் போகிறார்கள்? அப்படி ஒருவர் இல்லையே என்பதுதானே பகுத்தறிவாளர்களின் கவலை.

கடவுள் ஒருவர் இருந்து நேராக வந்துவிட்டால் கடவுள் இருக்காருன்னு சொல்லிட்டுப் போறோம் என்று தந்தை பெரியார் அவர்கள் சொல்லவில்லையா?

கலை உலகின் ஜாம்பவான் ஒருவரின் வாயிலிருந்து இத்தகு கருத்துகள் வெளிவருவது பகுத்தறிவுப் பிரச்சாரத்திற்கு வலிமை சேர்ப்பதே! அதேநேரத்தில் அக்ரகாரவாசிகள் இவரை எப்படியெல்லாம் உள்ளுக்குள் வறுத்துக் கொட்டுவார்கள்! ஒரு கணம் நினைத்துப் பாருங்கள்!

20.10.2009 (விடுதலை ஒற்றைப்பத்தி - 2)

நூல் : விடுதலை ஒற்றைப்பத்தி - 2,

ஆசிரியர் : கலி.பூங்குன்றன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

அயோத்திதாசப் பண்டிதர், இரட்டைமலை சீனிவாசன் ஆகியோரைத் திராவிடர் கழகம் தவிர்க்கிறதா?

திராவிடர் கழகத்தை, அதன் நன்மதிப்பை, அதன் பிறப்பொக்கும் கோட்பாட்டை, சமூக நீதி சாதனைகளை மறைக்க இன எதிரிகள் தொடர்ந்து முயற்சிக்கின்றனர். அதற்...