திங்கள், 17 ஜூலை, 2017

நவம்பர் 17


நவம்பர் 17 (1993) தமிழ் நாட்டின் சமூக நீதி வரலாற்றில் ஒரு பொன்மலர் பூத்த அத்தியாயம்.

தமிழ்நாட்டில் நடைமுறையில் இருந்து வந்த 68 சதவிகித இட ஒதுக்கீட்டுக்கு 1992 நவம்பர் 16 ஆம் தேதி ஆபத்து ஏற்பட்டது. மண்டல் குழுப் பரிந்துரை தொடர்பாக உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பினால் ஏற்பட்ட ஆபத்து அது. உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு என்றால் அதுவே ஆணையாக, சட்டமாக ஆகிவிடக் கூடிய நிலை.

திராவிடர் இயக்கமும், தந்தை பெரியாரும் போராடிப் போராடிப் பெற்ற உரிமைக்கு உலை வைத்துவிட்டது உச்ச நீதிமன்றம். என்ன செய்வது என்று எல்லோரும் கைகளைப் பிசைந்து இருந்த நிலையில், வாராது வந்த மாமணியாக - தமிழர் தலைவர் வீரமணி அவர்கள் தமிழ்நாடு அரசுக்கும் சரி, சமூக நீதியாளர்களுக்கும் சரி ஒரு மின்னல் கீற்றாகப் பொறி தட்டும் வகையில் சட்ட முன்வடிவு ஒன்றைத் தயாரித்துப் பத்திரிகையாளர்களை அழைத்து - இந்திய அரசமைப்புச் சட்டம் 31 (சி) யின் கீழ் ஒரு மாநில அரசே சட்டம் இயற்றி, நாடாளு மன்றத்தின் ஒப்புதலைப் பெற்று, ஒன்பதாவது அட்ட வணையில் சேர்த்து விட்டால், எந்த நீதி மன்றமும் அதில் தலையிட முடியாது என்று விளக்கமும் அளித்தார். அந்தச் சட்ட மாதிரி வடிவத்தையும் செய்தியாளர்களிடம் அளித்தார்.
அந்நாள்தான் இந்நாள்.

அந்தச் செய்தியாளர்களின் கூட்டத்தில், அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டி இதனை விவாதிக்க வகை செய்யுமாறு ஒரு வேண்டுகோளை முன்வைத் தார். அதன்படி 26.11.1993 அன்று அனைத்துக் கட்சிக் கூட்டத்தை தமிழக அரசு கூட்டியது. அந்தக் கூட்டத்தின் முடிவுப்படி தமிழ்நாடு சட்டப்பேரவையில் சட்டமும் நிறைவேற்றப்பட்டது                    (31.12.1993).

அந்தச் சட்டத்துக்கு ஒப்புதல் வழங்குமாறு குடியரசுத் தலைவரை வற்புறுத்தித் தந்திகளைக் குவிக்குமாறு தமிழர் தலைவர் வேண்டுகோள் ஒன்றை விடுத்தார்                (7.2.1994).

அனைத்துக் கட்சிக் குழு ஒன்று குடியரசுத் தலை வரைச் சந்திக்க ஏற்பாடு செய்ய வேண்டும் என்று தமிழர் தலைவர் விடுத்த வேண்டுகோள்படி முதல் அமைச்சர் தலைமையில் குடியரசுத் தலைவரைச் சந்தித்ததன் பலனாக (25.6.1994). குடியரசுத் தலைவரின் ஒப்புதலும் கிடைத்தது (19.7.1994).

அரசமைப்புச் சட்டத்தின் ஒன்பதாவது அட்டவணையில் சேர்த்திட வகை செய்யும் சட்டத்திருத்தம் ஒன்றுக்கு ஒப்புதல் அளிக்கக் கோரி அனைத்துக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு கழகத்தின் சார்பில் அன்றைய கழகப் பொதுச் செயலாளர் மானமிகு கி.வீரமணி அவர்கள் தந்தி அனுப்பினார் (14.8.1994).

24, 25.8.1994 ஆகிய நாள்களில் முறையே மாநிலங்களவையிலும், மக்கள வையிலும் சட்டத் திருத்தம் செய்யப்பட்டு, தமிழ்நாடு சட்டம் 9 ஆவது அட்டவணையிலும் சேர்க்கப்பட்டது.

தாய்க்கோழி போல தமிழ்நாடு 69 சதவிகித இடஒதுக்கீட்டை அடைகாத்துப் புறந்தந்து, அதன் பலனை அருங்கொடையாக தமிழர்களுக்குத் தந்த தமிழர் தலைவர் மானமிகு கி.வீரமணி அவர்கள் என்பதை தமிழர்கள் நன்றியோடு நினைவு கூர்வார்களாக!

17.11.2011 விடுதலை ஒற்றைப்பத்தி - 3

நூல் : ஒற்றைப்பத்தி - 3


ஆசிரியர் : கவிஞர் கலி.பூங்குன்றன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

அயோத்திதாசப் பண்டிதர், இரட்டைமலை சீனிவாசன் ஆகியோரைத் திராவிடர் கழகம் தவிர்க்கிறதா?

திராவிடர் கழகத்தை, அதன் நன்மதிப்பை, அதன் பிறப்பொக்கும் கோட்பாட்டை, சமூக நீதி சாதனைகளை மறைக்க இன எதிரிகள் தொடர்ந்து முயற்சிக்கின்றனர். அதற்...