ஞாயிறு, 17 டிசம்பர், 2017

பண்பாடு சமற்கிருத மயமாக்கப்படுதல் - டாக்டர் க. த. திருநாவுக்கரசு





உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், சென்னை.


இந்திய நாட்டில் பல்வேறு வகைப் பண்பாடுகள் உள்ளன. ‘பண்பாடுஎன்பதனை எளிதில் விளக்க இயலாது. ‘அறிவுத் துறைகள்பலவற்றிலும், எது பண்பாடு?’ எனும் வினாவிற்கு வெவ்வேறு வகையான விளக்கங்கள் தரப்பட்டுள்ளன. எனினும், எல்லாத் துறைகளுக்கும் பொருந்தக்கூடிய ஒரு பொதுவான விளக்கத்தைத் தருவதற்கு முயலலாம்.

பண்பாடு

இக்காலத்தில் வரலாறு என்பது, ஓர் இனத்தின்-நாட்டின்- “நாகரிகத்தினை விளக்குவதாக, ‘பண்பாட்டினைப் படம்பிடித்துக் காட்டுவதாக அமைய வேண்டும் என்று வரலாற்றுப் பேரறிஞர் அர்னால்டு டாயின்பி மொழிந்துள்ளார். இங்கே சுட்டப்பட்டும் இரு சொற்களின் பொருளைப் புரிந்து கொள்ளுவோமானால், நம்முடைய நோக்கத்தை நன்கு வெளிப்படுத்த இயலும்.

உலக வாழ்க்கையில்-புறவாழ்வில் மனிதன் அடைகின்ற வியத்தகு முன்னேற்றங்கள், பெறுகின்ற பேறுகள் போற்றிப் பின்பற்றப்படுகின்ற நாள் வண்ணம், இன்பம் தரும் பகட்டுமிகு வாழ்க்கை வசதிகள் போன்ற யாவும் நாகரிகத்தின் கூறுகள் ஆகும்.

வாழ்க்கையில், மனிதன் முழு நிறைவை அடைவதற்கு முயலும் முயற்சியின் பயனாக அமைவதுபண்பாடு’. முழு நிறைவான வாழ்க்கை இனிமையும், ஒளியும் உடையதாக அமையும். முழு நிறைவான வாழ்க்கையைப் பெற மனிதர்கள் ஒன்றாகக் கூடி வாழ்வதால் உருவாகும் சமூக அமைப்புகளின் இயல்புகளாக அமைவது பண்பாடு. சமூகங்கள் பல சேர்ந்து ஒரு சமுதாயமாகப் பின்னிப் பிணைந்து இயங்கும்பொழுது, உருவாகும் வாழ்க்கை நெறி, பழக்க வழக்கங்கள், கலையுணர்வு, ஆட்சி அமைப்புகள், சிந்தனை முதிர்ச்சி ஆகிய அனைத்தும் இணைந்து ஒருவகைச் சமுதாய சிந்தனையாக வெளிப்படுவதேபண்பாடுஎனலாம்.

இந்த வரையறையைக் கருத்தில் கொண்டு, தமிழ் நாட்டின் அரசியல் அமைப்புகள், வாழ்வியல், சமூக நிலை, சமயவுணர்வு, கலை வளர்ச்சி போன்றவற்றை மதிப்பிடுவதே இந்த ஆய்வரங்கின் நோக்கமாகும்.

சமற்கிருத மயமாக்குதல்

கடந்த இருபது ஆண்டுகளாக, இந்திய அறிவரங்கில், ‘சமற்கிருத மயமாக்குதல்எனும் தொடரைப் பலர் பயன்படுத்துவதை அடிக்கடி நாம் கேள்வியுறுகிறோம். ‘சமற்கிருத மயமாக்குதல்என்பதற்கு என்ன பொருள்? இந்தப்பாரதநாட்டில் எல்லாவற்றையும் சமஸ்கிருத மொழிவழிப்பட்ட பண்பாட்டின் ஆதிக்கத்தின் கீழ்க் கொண்டு வருவதற்கு மேற்கொள்ளப்படும் முயற்சிகளுக்கு, ‘மானிட இயல்(Anthro Pology) அறிஞர்கள் சூட்டியுள்ள புதுமைப் பெயரேசமஸ்கிருத மயமாக்குதல்என்பதாகும். (1)

இந்தியாவில் சமற்கிருத மொழி வழிப்பட்ட நாகரிகமும் பண்பாடுமே சிறந்தவை. மற்ற மொழி வழிப்பட்ட பண்பாடுகள் எல்லாம் காட்டுவாழ் மக்களின் வாழ்க்கை நெறிகள். அவை யாவும் மட்டமானவை; கடுமையும் கொடுமையும் நிறைந்தவை; அவற்றில் உயர்ந்த சிந்தனைக்கும், கவர்ச்சிமிகு கலைகளின் வளர்ச்சிக்கும் இடமே கிடையாதுஎனும் எண்ணப்போக்கின் அடிப்படையில் எழுந்ததே இக்கருதுகோளாகும்.

எனவே, “இந்தியப் பண்பாட்டின் தலையூற்றாய் விளங்குவது சமஸ்கிருத மொழிவழிப்பட்ட பண்பாடு. அதனுடைய தாக்கத்தினாலேயே, இந்தியா முழுமையும் நாகரிகமும், பண்பாடும் வளர்ச்சியுறத் தொடங்கியது”(2) எனும் கருத்தை நிலைநாட்ட முயலுவதேசமற்கிருத மயமாக்குதலின்அடிப்படை நோக்கமாகும்.

கிரேக்கர்கள் பண்டைக்காலத்தில், ‘தாங்கள்தான் உலகிலேயே நாகரிகம் அடைந்தவர்கள்; மற்றவர்கள் எல்லாம் காட்டுமிராண்டிகள்என்று கூறினர். இதைப் போன்றே, சமற்கிருத மொழிப் பண்பாட்டாளர்கள், மற்றவர்களைமிலேச்சர்கள்எனும் சொல்லால் சுட்டினர்.

மிலேச்சர்களையும், காட்டுமிராண்டிகளையும் நாகரிகம் அடையச் செய்ததையேசமற்கிருத மயமாக்குதல்எனும் தொடரால், இக்கால அறிஞர்கள் சுட்டுகின்றனர்.

இதனால், புலனாவது யாது? ‘சமற்கிருத மொழிவழிப்பட்ட பண்பாட்டை உடையவர்களே, உலகிற்கு - சிறப்பாக இந்தியாவிற்கு நாகரீக ஒளியைக் கொண்டுவந்து புகுத்தியவர்கள்; சமற்கிருத மொழியாளர் இந்தியாவிற்கு வராமல் போய் இருந்தால், இந்தியா இன்னும் காட்டுமிராண்டிகளின் நாடாகவே இருந்திருக்கும்எனும் தன்முனைப்பு வாய்ந்த எண்ணப்போக்கை வெளிப்படுத்துகிறது.

ஆரிய மயம்

சென்ற நூற்றாண்டு முதல் இந்த நூற்றாண்டின் இடைப்பகுதி முடிய, உலக அறிஞர்களின் சிந்தனையில்ஆரிய மயமாக்குதல்’  (Aryanization) எனும் கருத்து நிலை வீறுடன் விளங்கியது.

உலக வரலாற்றில் சிறந்தவை, உயர்ந்தவை, போற்றத்தக்கவை, முன்னேற்றத்திற்கு வழிகாட்டுபவை எனக் கருதப்பட்ட நாகரிகப் பண்பாட்டுக் கூறுகள் அனைத்துமே ஆரியருக்கு உரியவை”(3) என்று நம்பப்பட்டது. இதனால், எல்லாரும் இந்தியப் பண்பாட்டை, ‘ஆரியப் பண்பாடுஎனவும், இசுலாமியர் வருகைக்கு முற்பட்ட இந்திய அரசுகளையும், ஆட்சிகளையும்ஆரியரின் ஆட்சி (Aryan Rule) என்றே குறிப்பிட்டனர்.(4) இதைத்தான், அறிஞர் அண்ணா அவர்கள்ஆரிய மாயைஎனும் பெயரால் அழைத்தார்.

இந்திய வரலாற்றின் தொடக்கக் காலத்தில் ஆரியரும், ஆரியர் அல்லாதவரும் பேரளவிற்குக் கலந்து உறவாடியதன் மூலம், புதியதொரு பண்பாட்டினை உருவாக்கினர் என்பதில் யாருக்கும் அய்யம் இருக்காது. ஆனால், அந்தக் கலப்பின் விளைவாக உருவானபுதிய பண்பாட்டில்உள்ள முனைப்பான தலைமைக் கூறுகள் யாவும், ஆரியருக்கு உரியனவாகும்; அவர்களுடைய மொழியே காட்டுமிராண்டி மொழிகளாக இருந்து வந்த பழங்குடி மக்களின் மொழிகளை அழித்து, அவற்றின் இடத்தைப் பிடித்துக் கொண்டது; அல்லது அவற்றை எழுத்து வடிவம் பெற்று, இலக்கிய வளர்ச்சி அடையுமாறு செய்தது !”(5) என்பது பேராசிரியர் நீலகண்ட சாஸ்திரியாரின் கருத்தாகும்.

இந்நிலையில், ‘ஆரிய மயமாக்குதல்எனும் பெயரினை ஏன் கைவிட்டுவிட்டு, ‘சமற்கிருத மயமாக்குதல்எனும் புதிய திருப்பெயரை அறிமுகப்படுத்தினார்கள்? எனும் எண்ணம் எழுவது இயல்பாகும்.

இதற்கு இரு காரணங்கள் உள்ளன. ஒன்று, இரண்டாவது உலகப் போரினால் மனித இனம் பட்ட அல்லலாகும். ‘ஆரியர்களே உலகில் ஆளப் பிறந்தவர்கள்?’ எனும் இட்லரின்  (Hitler) இனவெறியே, அப்போர்  உண்டாவதற்கு மூலகாரணம் என்பதை யாவரும் உணர்ந்தனர். இதனால் யுனெஸ்கோ
(UNESCO)நிறுவப்பட்டதும், உலகின் பல பகுதிகளில், “இனம் என்பது ஒரு பொய்க்கதை(Race is a myth) எனும் பொருள்பற்றி மாநாடுகளும், கருத்தரங்குகளும் நடத்தப்பட்டன.(6)

இவற்றின் முடிவாக, “உலகில் எங்குமே கலப்பற்ற-தூய்மையான-இனம் ஒன்றுகூட இன்று இல்லைஎன்று அறிஞர்கள் முழங்கினர்.

மற்றொரு காரணம் தமிழ்நாட்டில்திராவிடஇயக்கம் தோன்றியமையாகும். இந்த இயக்கத்தின் நோக்கையும் போக்கையும் கண்டு, உள்ளார்ந்த தன்னல நோக்கம் கொண்டவர்கள் அஞ்சினர். இதனால்ஆரியராவது-திராவிடராவது?’ எனும் கருத்தைப் பரப்பத் தொடங்கினர்.(7) ‘பிராமணர்கள் ஆரியர் அல்லர்; தமிழர்களேஎனும் கருத்தைப் பரப்ப முயன்றனர்.

இதன் விளைவாகவே, ‘மொழிவழிப் பண்பாடுபற்றிய எண்ணப் போக்கினை இந்திய அறிஞர்கள் வளர்த்தனர். இந்த நிலையில், பிறப்பால் பிராமணரும் இந்திய மானிட இயல் அறிஞருமான டாக்டர் எம்.என். ஸ்ரீநிவாசன், “சமற்கிருத மயமாக்குதல்எனும் தொடரைத் தம்முடையஇந்திய கிராமங்களின் நிலை சிறப்பாக கூர்க்கு கிராமங்கள்எனும் ஆய்வேட்டில் 1956 அளவில் பயன்படுத்தினார். இப்புதுமையான பெயர், உலக அரங்கில் மிக விரைவாகப் பரவியது. இதனால்சமற்கிருத மயமாக்குதல்எனும் தொடர் பெருவழக்கிற்கு வந்தது.

பெரிய-சிறிய மரபுகள்

இந்திய மானிட இயல் அறிஞர் படைத்த இப்பெயரை ஏற்றுப் போற்ற, அமெரிக்கர்கள் தயங்கினர். இதனால், புதியதொரு பெயரை அவர்கள் படைத்து வழங்கலாயினர்.

சமஸ்கிருத வழிப்பட்ட எண்ணப் போக்கையும், வாழ்க்கை முறையையும் இணைத்து, “பெரிய மரபு(Great Tradition) எனும் பெயரால் சுட்டினர். வடமொழியின் தாக்கத்திற்கு இரையாகாத பிற மொழிகளின் எண்ணப் போக்கையும், பண்பாட்டையும்சிறிய நெறி”  (Little Tradition)  எனும் பெயரால் குறிப்பிடலாயினர்(8) ‘பெரிய மரபாக மாற்றுதல்என்பது இவர்கள்சமற்கிருத மயமாக்குதலுக்குக் கொடுத்த பெயராகும்.

இன்று மேற்கு நாட்டு அறிஞர்களுள் பலர், ‘பெரிய நெறி’, ‘சிறிய நெறிஎனும் தொடர்களையே பயன்படுத்துகின்றனர்.(9)

ருஷிய, ஆசிய நாடுகளின் அறிஞர்களேசமற்கிருத மயமாக்குதல்எனும் தொடரினைப் பயன்படுத்துகின்றனர். இவ்விரு பெயர்களும், “பண்பாட்டைச் சமற்கிருத மயமாக்குதலையேஉணர்த்துகின்றன.

ஆனால், நீலகண்ட சாஸ்திரியார் போன்ற வரலாற்று அறிஞர்கள், ‘ஆரிய மயமாக்குதல்எனும் தொடரையே, தொடர்ந்து பயன்படுத்தியுள்ளனர்.

(நூல்  - சமற்கிருத ஆதிக்கம்)
பதிப்பாசிரியர் : கி.வீரமணி



கல்வி என்றால் என்ன?


கல்வி தோழர்களே!

கல்வி என்னும் விஷயமாய் நான் பேசுவது என்றால், எனக்கு அதிக தைரியம் வேண்டும். ஏனெனில், மக்கள் பெரும்பாலோர் கல்வி என்பதற்கு என்ன பொருள் கொண்டிருக்கிறார்களோ அந்தக் கல்வி எனக்குக் கிடையாது. பிழையற எழுதக்கூடத் தெரியாதவன் - அவையடக்கமாக  நான் இதைச் சொல்லவில்லை. உண்மையிலேயே எனக்கு வல்லினம், இடையினம் கூடச் சரியாகப் பிரயோகிக்கத் தெரியாது. அது மாத்திரமல்ல, ஒரே சந்தர்ப்பத்தில் ஒரு வாக்கியத்தில் ஒரு வார்த்தை இரண்டு தடவை வருமானால் ஒரு தடவை வல்லினம் போடுவேன்; மறுதடவைக்கு இடையினம் போடுவேன். அந்த மாதிரியான நான், உங்கள் முன் கல்வி  என்பதைப் பற்றிப் பேசுவது என்றால் அது எவ்வளவு கஷ்டமான காரியம் என்று பாருங்கள். ஆனாலும் உங்கள் விருப்பத்திற்கும் எனது ஆசைக்குமாக ஏதோ என் அபிப்பிராயத்தைக் கூறுகிறேன். நீங்கள் அதை அப்படியே ஒப்புக்கொண்டுவிடாமல், நன்றாய் ஆலோசித்து கொள்வது கொண்டு, தள்ளுவதைத் தயங்காமல் தள்ளி விடுங்கள்.

கல்வி

கல்வி என்றால் என்ன? பள்ளிக்கூடத்தில் சர்க்கார் பள்ளிக்கூட அதிகாரிகள் ஏற்படுத்தின திட்டப்படி அவர்கள் குறிப்பிடும் விஷயங்களைக் கொண்ட புத்தகங்களை உருப்போட்டு பரிட்சை கொடுத்து தேர்வு அத்தாட்சி பெறுவதையே அனேகம் பேர் கல்வி என்று கருதி இருக்கிறார்கள். அன்றியும் இப்படிப்பட்ட கல்வி கற்பது என்பது அறிவு விளக்கத்திற்காக என்றும் சொல்லப்படுகிறது. ஆகவே கல்வி என்பதற்கு கருத்து ஒன்று, சொல்லு மற்றொன்று என்று சொல்லக் கூடியதாய் இருப்பதோடு கல்வியின் பயனாய் நடந்து கொள்ளும் நடத்தை  மற்றொன்றாக இருக்கிறது. அதாவது கல்வி என்பது வயிற்றுப் பிழைப்புக்கும் எப்படியாவது வாழ்க்கை நடப்புக்கும், பெருமைக்கும்தான் பயன்படுத்தப்படுகின்றது. இப்படி மூன்று விதமாகப் பயன்படுத்தப்படும் கல்வியில் மக்களுக்கு ஏற்படும் பணச் செலவும், நாள் செலவும், ஊக்கச் செலவும் அளவு சொல்ல முடியாததும் சாதாரண மக்கள் தாங்க முடியாததும் ஆகவே இருக்கிறது.
கல்விக்கு லட்சியமில்லை

பொதுவாகவே நான் சொல்லுவேன் நம் மக்களுக்கு கல்வி கற்பிப்பதில் நமக்கு லட்சியம் ஒன்றுமே கிடையாது. யார் எதைப் படிக்க வேண்டும்? படித்த படிப்பு எதற்குப் பயன்படும்? என்கின்ற ஒரு யோசனையே பெற்றோர்களுக்குக் கிடையாது. படிப்பது என்பது எதையோ படிப்பதும் படிப்பு வரக்கூடிய பிள்ளையாய் இருந்தால் படித்துக் கொண்டே போவதும், படிப்பு வராவிட்டால் நிறுத்திவிடுவதும், படித்துப் பட்டம் பெற்றுவிட்டால் அன்று முதலே  வேலை தேடித் திரிவதும் ஏதோ கிடைத்த வேலையை ஒப்புக்கொண்டு அதன் மூலம் வாழ்க்கை நடத்துவதும், தன் தனிப்பட்ட குடும்பம் முன்னுக்கு வரப்பார்ப்பதும், அதற்காக என்ன வேண்டுமானாலும் செய்வதும் ஆகிய இவைதான் கல்வியின் தன்மையாய் இருக்கிறது. எந்த வேலைக்கு எவ்வளவு படிப்பு வேண்டும் என்பதில் மனிதனுக்கு சிறிதும் ஞானமே கிடையாது - தனிப்பட்ட மனிதனின் வாழ்க்கை நலத்திற்கே கல்வியைப் பயன்படுத்துவது கல்வியின் பயனாக ஆகிவிட்டதால் கல்வி கல்லாத மக்கள் என்பவர்களுடைய நாணயம், ஒழுக்கம் என்பதைவிட கற்றவர்கள் என்பவர்களுடைய நாணயமும் ஒழுக்கமும் மிகமிக மோசமாகவே இருக்கும்படி படித்த அநேகர் நிலைமை ஏற்பட்டுவிட்டது. கல்வி, தந்திரத்திற்கும் மற்ற மக்களை ஏய்ப்பதற்கும் கற்றிருக்கிறோம் என்பதற்கு ஆக சராசரி மனிதத் தன்மையைவிட பல மடங்கு தங்களைப் பெரியவர்களாக எண்ணிக் கொள்ளவும் நடவடிக்கையில் சராசரி மனித நாணயத்தை, நடத்தையைவிட பலமடங்கு மோசமாய் நடக்கவும் ஏற்பட்டுவிடுகிறது.
கல்வி மக்களைச் சுரண்டுகிறது

இன்றையக் கல்வி, கல்வியின் பேரால் மற்ற மக்களைச் சுரண்டுவதற்கே பயன்படக் கூடியதாக ஏற்பட்டுவிட்டதால் கல்வி கற்றவர்கள் என்பவர்களுக்கு மற்ற மக்கள் நலத்தைப்பற்றிக் கவலையே இல்லை. அதிலும் இராஜதந்திரம், அரசியல் என்கின்ற இரண்டு தலைப்பின் கீழ் எவ்வளவு அயோக்கியத்தனமாய் நடந்து கொண்டாலும் குறை கூறப்படுவதில்லை. ஆதலால் கற்றவர்கள் என்பவர்கள் தங்களது நாணயமற்ற தன்மையை நடத்திப் பயன் பெற அரசியலையும் இராஜ தந்திரத்தையும் கையாள மோகம் ஏற்பட்டு விடுகின்றது. ஆகவே இன்றைய கல்வி அறிவுக்கும், ஒழுக்கத்திற்கும், அன்புக்கும் பயன்படுவது இல்லை என்பது மாத்திரமில்லாமல் பல கேடுகளுக்கும் காரணமாக இருக்கின்றது.
இதில் மற்றொரு தன்மை என்னவென்றால் கல்வி கற்பது என்பது இன்று செல்வவான்களுக்கும் செல்வ சவுகரியம் இருப்பவர்களுக்கும் எள்ளளவும் ஒழுக்கமும், நாணயமும், மானமும் இல்லாமல்  பணம் தேடத் துணிகிறவர்களுக்கும்தான் தங்கள் பிள்ளைகளைப் படிக்க வைக்க முடிகின்றது . சிறிய பணக்காரர், சிறிய வரும்படிக்காரர், சராசரி வாழ்க்கைக்காரர்கள் நாணயத்துக்கும், மானத்துக்கும் பயந்து வாழ்க்கை நடத்துகிறவர்கள் ஆகியவர்கள் தங்கள் பிள்ளைகளைப் படிக்க வைக்க ஆரம்பித்தார்களேயானால் அவர்கள் மிக்க ஏழ்மைக் குடும்பத்தார்களாகவும் தரித்திரக்காரர்களாவும் சதா துன்ப வாழ்க்கை நடத்துகிறவர்களாகவும் ஆகிவிட நேரிடுகின்றது.
சர்க்கார் நிலை

சர்க்காருக்கு இந்தக் கல்வியைப் பற்றிய ஒரு பொறுப்புணர்ச்சியே கிடையாது என்றே சொல்லலாம். சாதாரணமாக சர்க்காரின் கல்வித் திட்டத்தின் கருத்து என்னமாயிருக்குமென்று யூகித்தறியவே முடியாமல் போகிறது. ஆனால் அது எப்படி முடிகின்றது என்று பார்த்தால் அநாகரிக மக்கள் அல்லது கீழ்த் தர மக்கள் செல்வவான்கள் ஆகாமல் கஷ்ட வாழ்வு நடத்தும்படி செய்வதற்கு கள்ளுக்கடைகள், சூதாடுமிடங்கள், விபசாரி இல்லங்கள் எப்படி இருந்து வருகின்றனவோ அதே போல் நாகரிக உணர்ச்சி உள்ள மக்கள் கஷ்ட ஜீவனம் நடத்திக்கொண்டு வறுமை வாழ்வு வாழ்ந்துகொண்டு இருக்கவும் கையில் ஏதாவது ஒரு சிறு அளவும் சேர்த்து வைக்க முடியாமல் அடிமைத் தன்மைக்கு எப்பொழுதும் தயாராக இருக்கவும் மக்களைக் கட்டாயப்படுத்துவதற்கு அனுகூலமாக யோசித்துச் செய்யப்பட்ட காரியம் என்றுதான் கருத வேண்டியிருக்கிறது.

கோயில், பண்டிகை, திருவிழா, சடங்கு முதலியவைகளும் பெருவாரியான மக்களை இந்த நிலைக்குத்தான் கொண்டு போகிறது என்று சொல்லப்பட்டாலும் அது வருணாசிரம தர்மத்தை நிலை நிறுத்தச் செய்த காரியம் என்னலாம். ஆனால் இந்தப் படிப்பு முறை அரசியல் ஆதிக்கத்தைக் குறிவைத்து ஒரு கூட்ட மக்களை அரசியல் அடிமையாக இருப்பதற்கு ஆகச் செய்த காரியம் என்றால் எண்ணத்தில் மாற்றம் இருந்தால் இருக்கலாமே ஒழிய பயனில் மாற்றம் இருக்காது என்பேன்.

B. A., M.A.,


சர்க்காரார்  மக்களை  B. A., M.A., படிக்க வேண்டும் என்று சொல்வதிலோ, அந்த யோக்கியதாம்சம் வேண்டுமென்று கேட்பதிலோ, அதற்கு ஆக சர்க்கார் பொருள் செலவழித்து ஸ்தாபனம், இலாகா ஏற்படுத்தி இருப்பதிலோ என்ன நியாயமும் அவசியமும் கண்டுபிடிக்க முடிகிறது என்று கேட்கிறேன்.

சர்க்கார் உத்தியோகத்துக்கு B. A.,., வகுப்பு தேர்வு வேண்டியிருக்கிறது. அந்த பி.ஏ., தேர்வுக்கு இலக்கியம், பூகோளம், சரித்திரம், கணக்கு, விஞ்ஞானம் (சைன்ஸ்) முதலியவை படித்து உருப்போட்டுத் தேரவேண்டி இருக்கிறது. இந்தப் படிப்புக்காரர்களுக்கு சர்க்கார் கொடுக்கும் உத்தியோகங்களுக்கு அவர்கள் உத்தியோகம் பார்க்கும் காலங்களில், அல்லது தன்மைகளில் மேற்கண்ட இலக்கியம், பூகோளம், சரித்திரம், கணக்கு, சைன்ஸ் இவ்வளவு தேவை இருக்கிறதா? அல்லது பயன்படுகிறதா? என்று கேட்கிறேன். தேவை இல்லையென்றால் சர்க்கார் செய்வது தப்பான காரியமா இல்லையா? என்று கேட்கிறேன்.

ஒரு முஸ்லிம் உத்தியோகத்திற்கு வந்தால் அவனுக்கு ஒருமாதிரி யோக்கியதாம்சம் இருந்தால் போதுமென்றும், ஒரு ஆதிதிராவிடன் வேலைக்கு வந்தால் அவனுக்கு  ஒரு யோக்கியதாம்சம் இருந்தால் போதுமென்றும், ஒரு திராவிடனும் ஒரு ஆரியனும் (பார்ப்பானும்) உத்தியோகத்திற்கு வந்தால் அவனுக்கு ஒரு மாதிரி யோக்கியதாம்சம் இருக்க  வேண்டுமென்றும், ஒரு அய்ரோப்பியனுக்கோ அல்லது ஆங்கிலோ இந்தியனுக்கோ வேறுமாதிரி யோக்கியதாம்சம் இருக்க வேண்டும் என்றும் தரம் பிரித்திருப்பதின் கருத்து என்ன?

முஸ்லிமுக்கும், ஆதிதிராவிடனுக்கும் சற்று குறைந்த படிப்பு யோக்கியதாம்சம் போதும் என்று சர்க்கார் ஒரு பத்ததி வைத்திருக்கிறார்கள். இந்த இரு சமுகத்தாரும் திராவிடர், ஆரியர், என்கின்ற இரு சமுகத்தாரை விட அதிபுத்திசாலிகளாகக் கருதப்பட்டு அவர்களுக்குக் கல்வி யோக்கியதை குறைக்கப்பட்டு இருக்கிறதா? அல்லது அவர்கள் புத்திசாலித்தனத்துக்கு அவ்வளவுதான் படிக்க முடியும் என்று கருதி குறைக்கப்பட்டிருக்கிறதா?
(02-03-1944 அன்று ஈரோடு இலண்டன் மிஷன் கம்யூனிட்டி டிரெயினிங் ஸ்கூலில் கல்வி என்னும் பொருள் பற்றி தந்தை பெரியார் ஆற்றிய சொற்பொழிவு)

(குடிஅரசு - சொற்பொழிவு - 01.04.1944)

  நூல் : கல்வி பற்றிய சிந்தனைகள் 
ஆசிரியர் : தந்தை பெரியார்


சுயமரியாதைத் திருமணம் - ஏன்?

சுயமரியாதைத் திருமணம் - ஏன்?

- தந்தை பெரியார் 

(திருமணத்திலும், சிரார்த்தத்திலும் சொல்லப்படும் பார்ப்பனர்களின் சமஸ்கிருத மந்திரங்கள் - தமிழில் அவற்றின் பொருள்களும் மற்றும் தந்தை பெரியார்  அவர்களின் வாழ்வியல் கருத்துகளும் அடங்கிய அறிவுப் பேழையே இந்நூல்)

திருமண மந்திரம்

ஸோம: ப்ரதமோ விவிதே கந்தர்வோ விவித:/ த்ருத்யோ அக் நிஷ்டே பதி: துரீயஸ்த மனுஷ்யஜா:

பொருள்: ஸோமன் முதலில் இந்த மணப்பெண்ணை அடைந்தான். பிறகு கந்தர்வன் இவளை அடைந்தான். உன்னுடைய மூன்றாவது கணவன் அக்நி. உன்னுடைய நான்காவது கணவன்தான் இந்த மனித ஜாதியில் பிறந்தவன்.
விளக்கம்: திருமணமாகப் போகும் மணப்பெண் முதலாவதாக ஸோமன் என்பவனுக்கு மனைவியாக இருந்தாள். இரண்டாவதாகக் கந்தர்வன் என்பவனுக்கு மனைவியாக இருந்தாள். மூன்றாவதாக அக்நிக்கு மனைவியாக இருந்திருக்கிறாள். நான்காவதாகத்தான் இப்பொழுது கலியாணம் செய்துகொள்ளும் மாப்பிள்ளைக்கு மனைவியாகிறாள். அதாவது இதற்கு முன் மூன்று கடவுள்கள் இந்தப் பெண்ணை அனுபவித்து விட்டுவிட்ட பின்புதான் இப்பொழுது நான்காவதாக இந்த மணமகன் இவளை மனைவியாக ஏற்றுக் கொள்கிறான். இந்தப் பொருளைத் தரும் மேற்கண்ட மந்திரத்தைத்தான் புரோகிதப் பார்ப்பான் கலியாணத்தை நடத்தி வைக்கும்பொழுது சொல்கிறான்.
மந்திரம்: உதீர்ஷ்வாதோ விஷ்வாவஸோ நம ஸேடா மஹேத்வா /அந்யா மிச்ச ப்ரபர்வ்யகும் ஸஞ்ஜாயாம் பத்யா ஸ்குஜ!

பொருள்: விசுவாவசு என்னும் கந்தர்வனே, இந்தப் படுக்கையிலிருந்து எழுந்திருப்பாயாக. உன்னை வணங்கி வேண்டுகிறோம். முதல் வயதிலுள்ள வேறு கன்னிகையை நீ விரும்புவாயாக. என் மனைவியைத்தன் கணவனுடன் சேர்த்து வைப்பாயாக.

மந்திரம்: உதீர்வாத பதிவதீ ஹ்யேஷா விஷ்வா வஸீந் நமஸ கீர்ப்பிரீடடே / அந்யா மிச்ச பித்ரு பதம வ்யக் தாகும் ஸதே பாகோ ஜநுஷா தஸ்ய வித்தி

பொருள்: இந்தப் படுக்கையிலிருந்து எழுந்திருப்பாயாக. இந்தப் பெண்ணுக்குக் கணவன் இருக்கிறான் அல்லவா? விசுவாவசுவான உன்னை வணங்கித் துதித்துக் கேட்டுக் கொள்கிறோம். தகப்பன் வீட்டிலிருப்பவளும், இதுவரை திருமணம் ஆகாதவளுமான வேறு கன்னிகையை நீ விரும்புவாயாக. அந்த உன்னுடைய பங்கு பிறவியினால் ஆகிவிட்டது என்பதை நீ அறிவாயாக.

விளக்கம்: கலியாணம் நடந்து நான்கு நாள்கள் தம்பதிகள் ஒரே படுக்கையில் படுக்க வேண்டும். ஆனால், அந்த சமயத்தில் அவர்கள் உடலுறவு கொள்ளக்கூடாது. நான்கு நாள் கழிந்த பிறகு மேற்கண்ட மந்திரங்களைச் சொல்லவேண்டும்.

அதாவது கலியாணமான அந்த மணப்பெண்ணானவள் கந்தர்வன் என்னும் கடவுளோடு ஒரே படுக்கையில் படுத்திருக்கிறாளாம். அந்தப் பெண்ணைக் கலியாணம் செய்துகொண்ட இந்த மணமகன், தன் மனைவியுடன் படுத்து சுகம் அனுபவித்துக் கொண்டிருக்கும் கந்தர்வன் என்னும் கடவுளிடத்தில் தன் மனைவியைத் தன்னிடம் ஒப்படைக்க வேண்டுமாய்க் கெஞ்சுகிறான் என்பதாகும்.

ஆதாரம்: விவாஹ மந்த்ரார்த்த போதினி
ஆக்கியோன்: கீழாத்தூர் ஸ்ரீநிவாஸாச்சாரியார் பி.ஓ.எல்.,
பக்கங்கள்: முறையே 22,59.

அயோத்திதாசப் பண்டிதர், இரட்டைமலை சீனிவாசன் ஆகியோரைத் திராவிடர் கழகம் தவிர்க்கிறதா?

திராவிடர் கழகத்தை, அதன் நன்மதிப்பை, அதன் பிறப்பொக்கும் கோட்பாட்டை, சமூக நீதி சாதனைகளை மறைக்க இன எதிரிகள் தொடர்ந்து முயற்சிக்கின்றனர். அதற்...