பச்சைத் தமிழர் என்றும் கல்வி வள்ளல் என்றும், தமிழர்களின் ரட்சகர் என்றும் தந்தை பெரியார் அவர்களால் புகழப்பெற்ற காமராசர் அவர்களின் 109ஆம் ஆண்டு பிறந்த பெருமைக்குரிய நாள் இந்நாள் (15.7.1903).
பார்ப்பனர் - பார்ப்பனர் அல்லாதார் போராட்டம் தமிழ் நாட்டுக் காங்கிரசுக்குள்ளும் இருந்ததுண்டு. ஒரு பக்கம் காமராசர் என்றால் - இன்னொரு பக்கம் ராஜாஜி - அவற்றையெல்லாம் தாண்டி எதிர்நீச்சல் போட்டுதான் காமராசர் பெருநிலைக்கு வந்தார்.
அதனால்தான் புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் அழகுறப் படம் பிடித்தார்.
பெருநிலையில் இருக்கின்றீர்
காமராசப் பெருந்தகையீர்!
உம் பெருமை அவர்கள் கண்ணில்
கருவேள் முள் போல்
உறுத்தும் - நீவிர்
கடுகளவும் அஞ்ச வேண்டாம்
என்றார் புரட்சிக் கவிஞர்.
ராஜாஜி அவர்கள் தமிழ் நாட்டில் இருமுறை முதல் அமைச்சராக வந்தபோதும் அவர் செய்ததெல்லாம் பள்ளிக் கூடங்களை இழுத்து மூடியதுதான். சூத்திரனுக்கு எதைக் கொடுத்தாலும் கல்வியைக் கொடுக்காதே என்பதுதானே மனுதர்மம்?
1952இல் ராஜாஜி அவர்கள் 6000 பள்ளிகளை இழுத்து மூடி குலக்கல்வித் திட்டத்தை அறிமுகப்படுத்தியபோது தந்தை பெரியார் புயலாய்ச் சீறி எழுந்தார். மக்கள் புரட்சியின் முன் ராஜாஜி பதவியை விட்டு ஓடினார். அப்பொழுது தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவராக இருந்த காமராசர் முதல் அமைச்சராக வர வேண்டும் என்ற ஒரு கருத்து மலர்ந்தது. இதற்கான முக்கியத் தலைவர்களின் கூட்டம் சென்னை அரசினர்த் தோட்டத்தில் டாக்டர் வரதராசலு நாயுடு அவர்களின் வீட்டில் நடைபெற்றது. சிதம்பரத்தில் இருந்த தந்தை பெரியார் அவர்களை அவசரமாக அழைத்தார் நாயுடு. நிகழ்ச்சியை ஒத்திவைத்து விரைந்தார் தந்தை பெரியார்.
முதல் அமைச்சர் பொறுப்பு ஏற்க காமராசர் தயங்கினார். தந்தை பெரியார் தைரியம் கொடுத்தார் உங்களை எதிர்க்க வேண்டும் என்றால் நான் தானே எதிர்க்க வேண்டும்? நானே ஆதரிக்கிறேன் என்கிற போது உங்களுக்கு ஏன் தயக்கம்? என்றார். அதன்பின்தான் காமராசர் சம்மதித்தார்.
காமராசரை எதிர்த்து ஆச்சாரியாரின் சீடர் சி.சுப்பிரமணியம் போட்டியிட்டார். காமராசர் 93 வாக்குளையும், சி.சுப்பிரமணியம் 41 வாக்குகளையும் பெற்றனர். காமராசர் முதல் அமைச்சர் ஆனார். வந்தவுடன் முதல் வேலையாக ராஜாஜி கொண்டு வந்த குலக்கல்வித் திட்டத்தை ஒழித்தார். அவர் மூடிய பள்ளிகளைத் திறந்ததுடன் மேலும் 12 ஆயிரம் பள்ளிகளைத் திறந்தார்.
இதுதான் பார்ப்பனர்களுக்கு ஆத்திரம். கதர்ச் சட்டைக்குள் கறுப்புச் சட்டை என்றும், பெரிய பதவி சின்ன புத்தி என்றும் கல்கி கூட்டம் கார்ட்டூன் போட்டு கிண்டல் செய்தும், இழித்தும் தம் ஆத்திரத்தைக் கொட்டித்தீர்த்தது.
இன்றைக்குத் தமிழர்கள் கல்வியில் தேர்ந்து உத்தியோகப் பீடங்களை அனுபவிக்கின்றார்கள் என்றால் அதற்குக் காரணம் பெரியார்; காரியம் - கர்மவீரர் காமராசர்! வாழ்க இப்பெருமக்கள்!
15.7.2011
நூல் : விடுதலை ஒற்றைப் பத்தி - 4
ஆசிரியர் : கலி.பூங்குன்றன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக