வியாழன், 3 ஆகஸ்ட், 2017

நோய் ஒழிப்பு நாள்!




1980 ஆம் ஆண்டு இதே நாளில் உலக சுகாதார நிறுவனம் மனித குலத்தின் மெச்சத் தகுந்த அறிவிப்பு ஒன்றை வெளியிட்டது. பெரியம்மை நோய் உலகில் முற்றாக ஒழிக்கப் பட்டுவிட்டது என்கிற அறிவிப்பு தான் இது.

நோய் என்றால் மனிதனுக்குக் கடவுள் கொடுத்த தண்டனை என்று கருதப்பட்ட காலம் ஒன்று இருந்தது. அது சாத்தான்களின் சேட்டை என்றது கிறித்துவமதம்.

உடல் தூய்மையானது ஒருவனின் ஆன்மாவின் அழுக்கை உணர்த்துகிறது என்று மதக்குருக்கள் சொன்ன - நம்பிய காலமும் உண்டு.

விஞ்ஞான வளர்ச்சி என்பது ஆன்மீகத்தின் எதிரி என்று குரூரமாக நம்பினர்..

தொலை நோக்காடி, வெடிமருந்து, கடிகாரம், பூதக் கண்ணாடி, நீராவியின் சக்தி முதலியவற்றைக் கண்டு பிடித்த ரோசர் பேக்கன் என்னும் விஞ்ஞானி - சாத்தானின் சேட்டைக் காரராகக் கருதப்பட்டு 14 ஆண்டுகள் சிறைக் கூடத்தில் கழிக்கும்படி போப்பினால் தண்டிக்கப்பட்டார். என்னே கொடுமை!

பெரியம்மை என்பது மிகப்பெரிய கொடிய நோய். உலகம் பூராவும் லட்சக்கணக்கில் மக்கள் இந்த நோயினால் சாவூருக்கு அனுப்பப்பட்டனர்.

வாராது வந்த மாமணியாய் இந்தக் கொடிய நோயினை ஒழித்துக்கட்ட ஜென்னர் என்பவர் தடுப்பூசி மருந்து ஒன்றைக் கண்டுபிடித்தார். மனித குலத்தைக் காக்கும் இந்த மாபெரும் கண்டுபிடிப்பு 30 ஆண்டுகள் வெளியில் சொல்லப்பட முடியாமலும், நடைமுறைக்குக் கொண்டு வரப்பட முடியாமலும் கடும் கண்டனத்திற்கும், அச்சுறுத்தலுக்கும் இரையானது.

பைபிளிலிருந்து வாசகங்களை எடுத்துக்காட்டி கண்டனக் கணைகளை ஏவினர்.

ஜென்னர் கண்டுபிடித்த மருந்தினைப் பயன்படுத்த முன் வந்ததற்காக அமெரிக்க டாக்டர் கொலைக் குற்றத்தின் அடிப்படையில் விசாரிக்கப்பட வேண்டும் என்றனர்.

இந்தத் தடைகளையெல்லாம் தாண்டித்தான் ஜென்னரின் கண்டுபிடிப்பின் பயனாக - உலக சுகாதார நிறுவனம் - பெரியம்மை நோய் உலகில் முற்றாக ஒழிக்கப்பட்டுவிட்டது (1980) என்று அறிவிக்கும் ஒரு பொன் அத்தியாயம் பூத்தது. ஜென்னரை மறந்தால், அது மன்னிக்கப்படவே முடியாத - நன்றி கெட்டதனமே!

தமிழ்நாட்டில்கூட அம்மை என்றால், மாரியாத்தாள் கோபம் என்றும் (நோய் வந்தவர்களின் தலைமாட்டில், மாரியம்மன் தாலாட்டுப் பாடுவார்கள், மாரியம்மன் கோயிலில் கூழ் காய்ச்சி ஊற்றுவார்கள்). கருதப்பட்ட நிலை இருந்தது. காலரா என்றால் காளியாத்தாள் சீற்றம் என்று கோயிலுக்கு மாவிளக்குப் பூஜை நடத்துவார்கள். ஆனாலும் அம்மையாலும், காலராவாலும் பல்லாயிரக்கணக்கில் மக்கள் மாண்டுகொண்டுதான் இருந்தனர்.

அறிவியல் - விஞ்ஞானம் வந்துதான் மக்களைக் காப்பாற்றியது. மக்களுக்குத் தேவை அறிவியலா? ஆன்மீகமா? சிந்திக்க வைக்கும் நாள் இந்நாள்! (08.05.1980)



8.5.2011

நூல் :  விடுதலை ஒற்றைப் பத்தி - 4
ஆசிரியர் : கலி.பூங்குன்றன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

அயோத்திதாசப் பண்டிதர், இரட்டைமலை சீனிவாசன் ஆகியோரைத் திராவிடர் கழகம் தவிர்க்கிறதா?

திராவிடர் கழகத்தை, அதன் நன்மதிப்பை, அதன் பிறப்பொக்கும் கோட்பாட்டை, சமூக நீதி சாதனைகளை மறைக்க இன எதிரிகள் தொடர்ந்து முயற்சிக்கின்றனர். அதற்...